Published : 07 Apr 2018 08:35 AM
Last Updated : 07 Apr 2018 08:35 AM

தொழில் ரகசியம்: நேரம் இருந்தால் சுருக்கமாகப் பேசவும்!

`நா

ன் என்ன சொல்ல வரேன்னா’. இவ்வாக்கியத்தை பேச்சில் அதிகம் பேசுகிறீர்களா? உங்கள் இ-மெயில்கள் செல்ஃபோன் ஸ்க்ரீனிற்குள் பத்தாமல் நீள்கிறதா? நீங்கள் மீட்டிங்கில் பேசுகையில் கேட்பவர்கள் அடிக்கடி வாட்சை பார்க்கிறார்களா? உங்கள் பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை உற்று பார்க்கும்படி ஒவ்வொரு ஸ்லைடிலும் ஏகத்திற்கு வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்களா?

`ஆம்’ என்றால் இன்றைய அடிதடி, ஆத்திர, அவசர, அர்ஜெண்ட் உலகில் நீங்கள் ஸ்லோ மோஷனில் பயணம் செய்கிறீர்கள். ‘வளவள வேந்தரே, தொனதொன தீரரே’ என்று அழைக்கப்படுவீர்கள். டயனோசர் மியூசிய கௌரவ உறுப்பினர் ஆக்கப்படுவீர்கள். சுருக்கமாக சொன்னால் மெதுவான உங்களுக்கு அவசரமான உதவி தேவை!

சராசரி மனிதனின் அட்டென்ஷன் ஸ்பான் எட்டு செகண்ட் என்கிறது ஆய்வுகள். எந்த ஒரு விஷயத்தின் மீதும் நம் கவனம் அதிகபட்சம் எட்டு செகண்ட் தானாம். அந்த கேப்பில் கூறவேண்டியதை கூறி செய்யவேண்டியதை சாதிக்கும் கட்டாயத்தில் வாழ்கிறோம். சீக்கிரம் சொல்லவில்லையென்றால் கேட்பவருக்கு கோபம் வருகிறது. ‘சொல்றத சீக்கிரம் சொல்லித் தொலையேன்’ என்று கத்தத் தோன்றுகிறது. ‘சட்டு புட்டுனு விஷயத்திற்கு வரமாட்டியா’ என்று வையத் தோன்றுகிறது. எழுதுவதை சுருக்கமாக எழுதாமல் பாஞ்சாலி புடவை போல் நீட்டி எழுதினால் படிப்பவருக்கு கிழித்து குப்பை தொட்டியில் எறியத் தோன்றுகிறது.

அன்று பத்து கார்கள் பயணம் செய்ய போட்ட ரோடுகளில் இன்று நூறு கார்கள் பறப்பதால் நம் நகரங்களில் டிராஃபிக் பிரச்சினை. பத்து விஷயம் செய்தால் போதும் என்ற நம் சராசரி நாளில் இன்று நூறு விஷயங்களை முடிக்கும் அவசரம் இருப்பதால் வாழ்க்கையில் பிரச்சினை. இதில் மற்றவர் சொல்வதை கவனிக்க நேரம் ஏது? அடுத்தவர் எழுதுவதை விலாவரியாய் படிக்க மனம் ஏது? சொல்வதை, எழுதுவதை சுருக்கித் தராமல் பெருக்கித் தந்தால் அதை கேட்பதற்கு, படிப்பதற்கு பொறுமை தான் ஏது? நம் அவசரத்தை நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் கூட புரிந்திருப்பதால்தான் எஸ்எம்எஸ், ட்விட்டர் கூட சுருக்கமாய் சொன்னால்தான் ஏற்கிறது.

ஆனாளப்பட்ட கிரிக்கெட் டெஸ்ட் மேட்சுகளையே ‘ஐந்து நாட்கள் எவன் உட்கார்ந்து பார்ப்பது’ என்று ஒதுக்கி ஒன் டே மேட்சுகளுக்கு தாவி அதுவும் போதாதென்று 20-20 மேட்சுகளுக்கு வந்திருக்கிறோம். விளையாட்டுக்கே இந்த கதி என்றால் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வேகமான அவசரமே உடனடி தேவை!

சராசரியாக ஒருவருக்கு வாரத்திற்கு 304 இ-மெயில்கள் வருகிறதாம். தினம் தங்கள் செல்ஃபோனை குறைந்தது 150 முறை பார்க்கிறோமாம். இதைப் படித்தால் வயிறு நிரம்பி ஏப்பமே வருகிறது. இந்த லட்சணத்தில் அவசரத்தின் அவசியத்தை பலர் இன்னமும் புரிந்துகொள்ளாதது அக்மார்க் சோகம். ஒரே நேரத்தில் இரண்டு நாள் வேலையை மூன்று பேரிடம் பேசிக்கொண்டு நான்கு நிமிடத்தில் முடிக்கவேண்டிய அவசரம் ஐந்து அறிவு ஜீவன்களுக்கே புரியும் போது அனைத்தையும் ஆற அமர செய்யும் ஆறறிவு ஜென்மங்களை அந்த ஏழு மலையான் கூட காப்பாற்ற முடியாது!

வாழ்க்கையாகட்டும் வியாபாரமாகட்டும், அவசரம் காலத்தின் கட்டாயம். நிரம்பி வழியும் வீட்டு மாடி டாங்க் போல் நம் மனதில் நிற்காமல் செய்திகள் வழிகின்றன. நழுவி ஓடும் மீனாய் மாறும் மனித மனதை கவர இன்றைய அவசரத் தேவை சொல்வதை சுருங்க சொல்லும் ஒழுக்கம். பாதி மெயில்களை பலர் படிப்பதே இல்லை. மீதி மெயில்கள் நீண்டு நீளமாயிருந்தால் பாதியிலேயே டிலீட் செய்யப்படுகின்றன. இந்த லட்சணத்தில் பல கம்பெனிகளும் கடைகளும் கையில் காசு இருக்கிறது என்று ராமாயணம் போல் நீளமான விளம்பரங்கள் எடுப்பது எதனால் என்பது எனக்கு புரிவதே இல்லை. `பெப்சியின்’ விளம்பரங்களை பாருங்கள். ஆரம்பித்த உடனேயே முடிவதை. நம் அவசரத்தை, பொறுமையின்மையை பிரதிபலிப்பதை.

விரைவில் விஷயத்திற்கு வாருங்கள். எழுதும் இ-மெயில்களை சுருக்கமாய் எழுதுங்கள். பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை பவர்ஃபுல்லாய் மாற்ற சுருங்கச் சொல்லுங்கள். நல்ல பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுக்கு அழகு ஒரு சிறிய ஆரம்பம், சிறிய முடிவு அதற்கு இடையே அதிகம் ஏதும் இல்லாமல் இருப்பது என்பார்கள். இதை வேதவாக்காக பாவித்து பிரசண்டேஷன் செய்யுங்கள்.

சுருக்கமாய் சொல்வது இன்றைய தொழில் தேவை என்பதை உணருங்கள். எலிவேட்டர் டெஸ்ட் தெரியுமா? லிஃப்டை எலிவேட்டர் என்று சொல்வார்கள். கீழிருந்து மேல் மாடிக்கு லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் நீங்கள் அடுத்தவரிடம் கூற வந்த விஷயத்தை கூறி பழகவேண்டும் என்பதே எலிவேட்டர் டெஸ்ட். குறைவாக கூறி அதிகமாக புரியவைப்பது ஒரு கலை. பழகுங்கள். கூற வந்த விஷயத்தை வீதியில் வழி விசாரிப்பது போல் சுருக்கமாய் கூறுங்கள். எழுத வேண்டிய விஷயத்தை புதிய நண்பருக்கு எழுதுவது போல் அடக்கமாய் எழுதுங்கள். சுருங்க சொல்வது ஈசியல்ல. அதற்கு அதிகம் உழைக்கவேண்டும். பயிற்சி வேண்டும். வளர்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்து வாருங்கள். சுருங்க சொல்லி அதிகம் புரிய வைக்க நல்ல பயிற்சி ட்விட்டர்.

வெட்டியாய் இருப்பவர்கள் கூட ‘ஐ ஆம் பிசி’ என்று வாட்ஸ் அப் ஸ்டேடஸ் போடும் இக்காலத்தில் மற்றவர் நேரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு எப்படியோ அப்படித் தானே மற்றவர்களுக்கும். ஆயிரம் விஷயங்களுக்கு இடையே தான் உங்களுக்கு அவர்கள் நேரம் ஒதுக்குகிறார்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் வையுங்கள். சொல்ல வந்த விஷயத்தின் சாரம்சத்தை உருட்டி ஒரு வாயில் உண்ணும்படி தாருங்கள்.

ஆயிரம் இலக்கியங்கள் இருந்தாலும் திருக்குறள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணம் வாழ்வியல் உண்மைகளை ஏழே வார்த்தைகளில் திருவள்ளுவர் கூறிய அசாத்திய சுருக்கத்தில் தானே. உலகின் முதல் ட்விட்டர் ஆசாமி அல்லவா அவர்!

சுருங்கச் சொல்வதில் சுவாரசியமும் உண்டு. பள்ளி ஒன்றில் கட்டுரை போட்டி. யேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதவேண்டும். ஒரு சமயம் இயேசு பேசுவதை கேட்க வருபவர்களுக்கு தருவதற்கென்று அவர் சீடர்கள் சிவப்பு கலர் ஒயின் வைத்திருந்தார்கள். அன்று அசாத்திய கூட்டம். சீடர்கள் யேசுவிடம் ‘நினைத்ததை விட கூட்டம் அதிகம். அனைவருக்கும் தர நம்மிடம் ஒயின் இல்லை, என்ன செய்வது’ என்று கேட்டனர். இயேசு அங்கிருந்த தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்க்க அதிலிருந்த தண்ணீர் முழுவதும் ஒயினாக மாறியது. இந்த நிகழ்வை பற்றி கட்டுரை எழுதவேண்டும். பலர் உணர்வோடும், உணர்ச்சியோடும் எழுத ஒரு மாணவனின் கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இத்தனைக்கும் அவன் எழுதியிருந்தது ஒரே ஒரு வரி மட்டுமே. அந்த சுருக்கத்திற்குத் தான் அவனுக்கு பரிசு. அப்படி என்ன எழுதியிருந்தான்?

‘தண்ணீர் தன்னை படைத்தவனை கண்டு நாணம் கொண்டது!’ என்ன அழகு, எத்தனை அர்த்தம். இன்றைய அவசர உலகில் சொல்வதை சுருங்க சொல்வது அவசியம் மட்டுமல்ல, அழகும் கூட என்பது புரிகிறதா!

நானே கூட நிறைய எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்து சொல்ல வந்ததை சுருக்கியிருக்கலாம். சுருங்க சொல்வது சுலபமான விஷயமல்ல. ரொம்பவே மெனக்கெடவேண்டும். பழகவேண்டும். பிரெஞ்சு நாட்டு கணித மேதை `ப்ளேய்ஸ் பேஸ்கல்’ கூறியது தான் நினைவிற்கு வருகிறது: ‘நீண்ட கடிதம் எழுதியதற்கு மன்னிக்கவும். நேரம் கிடைத்திருந்தால் சிறிய கடிதமாக எழுதியிருப்பேன்!’

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x