

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இளைஞர்களின் வருடாந்திர திருவிழாவாக மாறி இருக்கிறது. திறமை, வியூகம், இறுதி நிமிட சஸ்பென்ஸ் என ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே அழைத்து சென்று சிலிர்ப்பான அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இணைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது அவர்களின் மீதான மரியாதை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. போட்டித் திறன் மற்றும் தோழமை ஆகியவற்றின் கலவையே ஐபிஎல் போட்டிகள். இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் வரலாற்றில் முத்திரையை பதிக்க இப்போட்டிகள் சிறப்பான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அவர்கள் ஒரே இரவில் நட்சத்திரங்களாக மாறி ஜொலிக்கக்கூடிய தளம் ஐபிஎல். தனிப்பட்ட வீரர்களைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் ஐபிஎல் போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன. விளையாட்டு துறைக்கான ஒட்டுமொத்த வருமானத்தில் கிரிக்கெட் போட்டிகளின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. கிரிக்கெட் உலக கோப்பையை முன்னிட்டு இந்திய விளையாட்டு துறையானது 2023-ல் ஒரு மாபெரும் எழுச்சியைகண்டது.
அந்த ஆண்டில் விளையாட்டு துறையின் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக உயர்ந்தது. இதில், 87 சதவீதம் கிரிக்கெட் மூலமாக வந்துள்ளது. 2022-ல் ரூ.12,115 கோடியாக இருந்த கிரிக்கெட் வருமானம் 13 சதவீதம் அதிகரித்து ரூ.13,701 கோடியைத் தொட்டது. கடந்த 2008-ல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதிலிருந்து அந்ததுறை 6.5 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று, ஐபிஎல் பிராண்ட் மதிப்பும் தொடங்கப்பட்டதிலிருந்து 433 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஐபிஎல் போட்டிக்கான டிஜிட்டல் மற்றும் டிவி உரிமையை கைப்பற்றும் ஏலத்தில் வயாகாம் மற்றும் டிஸ்னி இடையே ஏற்பட்ட கடும் போட்டியினை அடுத்து கிரிக்கெட்டுக்கான செலவினம் கணிசமாக உயர்ந்தது.
2018-2022 காலகட்டத்தில் ஸ்டார் நிறுவனம், டிவி மற்றும் டிஜிட்டல் உரிமை ஆகிய இரண்டுக்கும் சேர்த்தே ரூ.16,347 கோடி மட்டும்தான் செலவிட்டது. ஆனால், தற்போது 2023-27 காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிஜிட்டல் (வயாகாம்), டிவி உரிமைக்கான (டிஸ்னி) செலவினம் முறையே ரூ.23,758 கோடி, ரூ.23,575 கோடியாக அதிகரித்துள்ளது.
வெவ்வேறு தளங்களுக்கு ஊடக உரிமை விற்பனையின் விளைவாக ஒரு ஐபிஎல் போட்டிக்கு ரூ.118.5 கோடி கிடைத்துள்ளது. ஸ்போர்ட்ஸ் ஸ்பான் சர்ஷிப் செலவினத்தில் கிரிக்கெட்டின் பங்கே பெரியது. விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா இணைந்து 30-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் வீரர்களின் சொத்து மதிப்பு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. விளம்பரங்களைப் பொருத்த வரையில் டிவி பிரிவுக்கான செலவினம் குறைந்துள்ள அதே நேரத்தில் டிஜிட்டலுக்கான செலவினம் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
துரதிருஷ்டவசமாக அச்சு விளம்பரம் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. 2022-ல் ரூ.2 கோடி செலவிட்டப்பட்ட நிலையில் அதன் வளர்ச்சி 2023-ல் ரூ.4 கோடி மட்டுமே. மிகப் பெரும் பொருளாதார வாய்ப்புகளையும் ஐபிஎல் உருவாக்கியுள்ளது.
சுற்றுலா துறை, திருவிழாக்கள் ஒரு மாநிலத்தின் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பது போலவே, ஐபிஎல் போட்டிகளும் அதிகரிக்கின்றன. ஐபிஎல் ரசிகர்கள் போட்டியை காண வெளிமாநிலங்களிலிருந் தெல்லாம் பயணப்படுகின்றனர்.
இதனால், தங்கும் விடுதிகள், அதைச் சுற்றிய உணவகங்களில் பொருளாதாரச் செயல்பாடு அதிகரித்துள்ளது. மேலும், போக்குவரத்துத் துறையும் ஊக்கம் பெறுகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகள், வீரர்களின் ஜெர்சி, குல்லாவை அணிந்து போட்டியை காண மைதானத்துக்கு வருகின்றனர்.
இதையொட்டி பல்வேறு சில்லறை வணிகர்களும் பெரும் பயனடைகின்றனர். ஒட்டுமொத்ததில், ஐபிஎல் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கான திருவிழா மட்டுமல்ல, பொருளாதாரத் துக்கான திருவிழாவும் கூட.
- rajanpalanikumar.a@hindutamil.co.in