பைஜு'ஸ் நிறுவனத்தில் என்னதான் பிரச்சினை?
இந்தியாவின் பிரபல இணையவழி கற்பித்தல் நிறுவனம், கல்வி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என்ற பெருமைக்குரியது பைஜு’ஸ். கரோனா ஊரடங்கு காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தது. ஆனால், அந்த வேகம் நீடிக்கவில்லை. நிதி நெருக்கடி, நிர்வாக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கிறது. பைஜு’ஸில் என்னதான் பிரச்சினை..
பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் ஆகிய இருவரும் சேர்ந்து 'திங்க் அன்ட் லேர்ன்' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை 2011-ல் தொடங்கினர். பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு இணையவழியில் வீடியோ மூலம் டியூஷன் நடத்த தொடங்கியது.
கடந்த 2015-ம் ஆண்டில் ‘பைஜு’ஸ்’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் மட்டுமின்றி மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல் படிப்புக்கான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நீட், ஜேஇஇ, கேட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை இணையவழியில் நடத்த தொடங்கியது.
கல்வித் துறையில் புதுமையை புகுத்திய இந்நிறுவனத்தை இணையவழி கற்பித்தலின் முன்னோடி என்றே சொல்லாம். மாணவர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது. 2018 வாக்கில் இந்த செயலியை 1.5 கோடி பேர் பயன்படுத்தினர்.
இதில் பணம் செலுத்தி பயன்படுத்தியவர்கள் மட்டும் 9 லட்சம். பெருநகரங்கள் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களிலும் பைஜு’ஸ் பிரபலமடைந்தது. கடந்த 2018-ல் இந்தியாவின் முதல் கல்வி தொழில்நுட்ப (எட்டெக்) யூனிகார்ன் (ரூ.8,300 கோடி) என்ற அந்தஸ்தைப் பெற்றது.
கையகப்படுத்தல், நிதி திரட்டல்: இதனிடையே வெளிநாடுகளிலும் பைஜு’ஸ் தனது சேவையை அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்நிறுவனத்தில் இந்தியா மட்டுமல்லாது, வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன. குறிப்பாக, சீக்வா கேப்பிட்டல் இந்தியா, சான் ஸக்கர்பெர்க் இனிஷியேட்டிவ், டென்சென்ட், சோபினா, லைட்ஸ்பீட் வென்சர் பார்ட்னர்ஸ், புரோசஸ் என்வி உள்ளிட்ட நிறுவனங்கள் பைஜு’ஸில் முதலீடு செய்தன.
இதன்மூலம், பல்வேறு கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களை பைஜு’ஸ் கையகப்படுத்தியது. குறிப்பாக, கடந்த 2017-ல் பிரிட்டனைச் சேர்ந்த ட்யூட்டர் விஸ்டா, 2019-ல் அமெரிக்காவின் ஓஸ்மோ (குழந்தைகளுக்கான கல்வி விளையாட்டு செயலி தயாரிப்பாளர்), 2021-ல் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த கிரேட் லேர்னிங் உள்ளிட்ட ஏராளமான கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களை பைஜு’ஸ் கையகப்படுத்தியது.
அசுர வேக வளர்ச்சி: இந்த நிலையில்தான் 2019-ம் ஆண்டு இறுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவியது. கரோனா பரவலைத் தடுக்க 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணையவழி வகுப்புக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், இணையவழி கற்றலில் நிபுணத்துவம் பெற்றிருந்த பைஜு’ஸ் நிறுவனத்தின் செல்வாக்கு அசுர வேகத்தில் வளர்ந்தது.
இதன் மூலம் கடந்த 2022-ல் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது. கரோனா பரவல் குறையத் தொடங்கிய தையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்புநிலை திரும்பியது. பள்ளிகள் வழக்கம போல் செயல்படத் தொடங்கின. இணையவழி கற்றலுக்கான தேவை குறைந்ததால் பைஜு’ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்தது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நெதர்லாந்தின் புரோசஸ் என்வி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பைஜு நிறுவனத்தின் சொத்து மதிப்பை 75% சதவீதத்துக்கும் மேல் குறைத்தது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் நிதி நிர்வாகமும் சந்தைப்படுத்தல் உத்தியும் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நிறுவனத்தின் மீதான மதிப்பு மளமளவென சரிந்தது.
நிதி நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, பைஜு’ஸ் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை நிறுவனமான டெலாய்ட்டி விலகிக் கொண்
டது. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2022-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,298 கோடியாக இருந்தது. அதேநேரம், ரூ.8,245 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே, இந்நிறுவனத்தில் 25%-க்கு மேல் பங்குகளை வைத்துள்ள புரோசஸ் என்வி, பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக் மற்றும் சோபினா எஸ்ஏ ஆகிய 4 நிறுவனங்கள் கடந்த மாதம் சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டின. இதில் பைஜு’ஸ் ரவீந்திரனை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை எதிர்த்து பைஜு’ஸ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டது. அதில், "நிறுவனர்களில் ஒருவர் கூட பங்கேற்காததால் இந்த தீர்மானம் செல்லாது" என பைஜு'ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் ரவீந்திரன் பதவி நீக்கத்துக்கு வரும் 28-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. நிறுவனர்களான ரவீந்திரன், திவ்யா வசம் சுமார் 26% பங்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை.
இதனிடையே, நிதி நெருக்கடியை சமாளிக்க உரிமைப் பங்கு வெளியீடு மூலம் கடந்த மாதம் ரூ.1,600 கோடி திரட்டியது. ஆனால் இந்த நிதியை பயன்படுத்த நிறுவனர்களுக்கு தடை விதிக்கக் கோரி 4 முதலீட்டு நிறுவனங்கள் சார்பில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) பெங்களூரு அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை விசாரித்த என்சிஎல்டி, உரிமைப்பங்கு வெளியீடு மூலம் திரட்டிய நிதியை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 2023 நிதியாண்டுக்கான வரவு-செலவு கணக்கை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு முறையாக தாக்கல் செய்யத் தவறியதாக புகார் எழுந்துள்ளது.
ரூ.4,400 கோடி முடக்கம்: மேலும் ரூ.9,900 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறி, கடன் கொடுத்த நிறுவனங்கள் பைஜு'ஸ் மீது அமெரிக்காவில் உள்ள திவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. குறிப்பாக, நிறுவனர்களால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.4,400 கோடியை முடக்க உத்தரவிடுமாறு கோரினர். இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க திவால் நீதிமன்றம், இந்த நிதியை முடக்க உத்தரவிட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்களையும் மூடுவதாக பைஜு'ஸ் அறிவித்துள்ளது. எனினும், பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகம் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தில் இப்போது 14 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அதேநேரம், சுமார் 300 டியூஷன் மையங்கள் மட்டும் செயல்படும் என பைஜு'ஸ் அறிவித்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் போதாது. நிர்வாக ரீதியிலும் குளறுபடியில்லாமல் இருக்க வேண்டும் என்பதை பைஜு'ஸ் விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.
- anandhan.k@hindutmil.co.in
