

சில தினங்களுக்கு முன்பு பிடபிள்யூசி என்றழைக்கப்படும் Price waterhouse Coopers என்கிற பன்னாட்டு ஆலோசனை நிறுவனமானது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வானது 105 நாடுகளைச் சேர்ந்த 4,702 தலைமைச் செயல் அதிகாரிகளிடம் (சிஇஓ) நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 79 அதிகாரிகளும் அடக்கம்.
இந்தியாவின் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளில் கிட்டத்தட்ட 9 பேர் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என்று நம்புகிறார்கள். அடுத்த மூன்றாண்டு காலத்தில் தங்கள் நிறுவனத்தின் வருவாய்க்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மாற்றுவது சிறந்த மறு கண்டுபிடிப்பு ஊக்கியாக இருக்கும் என இவர்கள் கருதுகின்றனர்.
அடுத்த 12 மாதங்களில் பணவீக்கத்துடன் சைபர் குற்றங்களும் ஆரோக்கியம் சார்ந்த சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரி வித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது குறிப்பிடத்தக்க அளவு வருவாயையும் லாபத்தையும் வழங்கும் என எதிர்பார்ப்பதோடு பங்குதாரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும், நிறுவனத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் என நினைக்கிறார்கள்.
புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது, புதிய தயாரிப்புகள், சேவைகளை உருவாக்குதல், புதிய மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகிய 3 உத்திகள் தற்போதைய காலகட்டத்தை எதிர்கொள்ள உதவும் என்று அவர்கள் முன்வைத்துள்ளனர்.
காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய போக்குகளை சமாளிக்கவும் நீண்டகால வணிக நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
முதலீடு செய்வதற்கு சிறந்த இடமாக 2023-ம் ஆண்டு 9-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த ஆண்டு 5-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. அதுபோல வளர்ச்சி விகிதத்தில் அவ்வப்போது மாறுதல் இருந்தாலும் கூட இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்ற நாடுகளைவிட வலுவாக இருக்கும் என இவர்கள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்போது உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா 2030-ம் ஆண்டு 7.3 ட்ரில்லியன் டாலருடன் கூடிய 3-வது பெரிய பொருளாதார நாடாக வளரும் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். உற்பத்தி போட்டித்திறனிலும் மக்கள்தொகையிலும் இந்தியா கணிசமான மேம்பாடுகளுடன் ஒரு மாற்று போட்டி நாடாக உருவாகி வருகிறது.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம், ஏற்றுமதியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை, ஜிஎஸ்டி சட்ட விதிகளின் கீழ் பணத்தைத் திரும்பப் பெறுதல், ஸ்டார்ட்-அப்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் தாராளமயமான அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சியை தூண்டி வருகிறது.
அதேநேரத்தில் சுயபரிசோதனைக்கும் மாற்றத்திற்குமான கட்டாயத் தேவை உள்ளது. நீண்டகால நம்பகத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் நிறுவனங்கள் பல நேரடி மற்றும் மறைமுக சிக்கல்களை மனதில் கொண்டு தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சைபர் மற்றும் சுகாதார அபாயங்களும் பணவீக்கமும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக இருக்கக்கூடும் எனத் தலைமை செயல் அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
வாடிக்கையாளர் விருப்பம், தொழில்நுட்ப மாற்றங்கள் மறு கண்டுபிடிப்பின் சிறந்த ஊக்கிகளாக அடையாளம் காணப்பட்டன. டிகார்பனைசேஷன், தொழிலாளர்களுக்கான மறுதிறன் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை தீர்வுகளில் முதலீடுகள் போன்ற செயல்பாடுகள்) என்பது மறு கண்டுபிடிப்புக்கான உத்வேகத்தை துரிதப்படுத்தும் மற்றுமொரு ஊக்கியாகும்.
டிகார்பனைசேஷன் செய்வதற்குத் தடங்கலாக இருக்கும் விஷயங்களாக சிஇஓ-க்கள் கருதுவது: ஒழுங்குமுறைச் சிக்கல், காலநிலைக்கு இணக்கமான தொழில்நுட்பம் இல்லாமை, வெளிப்புறப் பங்காளர்களின் தேவையின்மை, காலநிலைக்கு இணக்கமான முதலீடுகளிலிருந்து கிடைக்கும் குறைவான வருமானம் ஆகியவை ஆகும்.
- sidvigh@gmail.com