முதலீட்டு மோசடிகள்: விட்டில் பூச்சியா மக்கள்?

முதலீட்டு மோசடிகள்: விட்டில் பூச்சியா மக்கள்?
Updated on
2 min read

தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் மனித வாழ்க்கை என்பது பணத்தை நோக்கியே ஓட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சிலர் கார், பங்களா என சொத்துகளை சேர்க்க ஆசைப்பட்டும், இன்னும் பலர் தங்களது பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என அவர்களது எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் பொருட்டும் குறுகிய காலத்தில் அதிக பணத்தை சேர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு மோசடி திட்டங்களில் சேர்ந்து ஏமாறும் நிலை தொடர்வது வேதனைக்குரியது.

மக்களின் பேராசையை பயன்படுத்தி அதில் தூண்டில் போட்டு பயனடையும் கும்பல் இன்றளவும் புதுப்புது வழிகளில் ஏமாற்ற உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநில, வெளிநாடுகளில் கூட ரூம் போட்டு திட்டங்களை தீட்டிக் கொண்டே உள்ளது.

அதுபோன்றவர்கள் நவீன தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி சத்தமில்லாமல் பல கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து சுருட்டி விட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகி கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

ஆனால், பணத்தை இழந்தவர்களின் கதிதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் நீதிமன்றத்துக்கும், காவல் நிலையத்துக்கும் இடையில் அல்லாடி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். சஹாரா நிறுவனம் 3 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.25,000 கோடி மோசடி செய்தது இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படுகிறது.

அந்தப் பணம் என்ன ஆனது என்று தெரியாத நிலையில் அதன் நிறுவனர் சுப்ரதா ராயின் மறைவு, பணத்தை எப்படியும் திரும்பப் பெற்றுவிடலாம் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சூனியமாக்கி விட்டது. தேசிய அளவில் சஹாரா என்றால் உள்ளூர் அளவில் ஆருத்ரா, எல்என்எஸ், ஹிஜாவு, எல்பின், பிரணவ் என எண்ண முடியாதபடி மோசடி நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ரூ,10,000 கோடிக்கும் அதிகமாக பணத்தை இந்த நிறுவனங்களில் மட்டும் மக்கள் பறிகொடுத்துள்ளனர். ஆளானப்பட்ட வங்கிகளே ஆண்டுக்கு 6-8 சதவீத வட்டிதான் தர முடியும் என்கிற நிலையில், இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் மாதத்துக்கு 10-25% வரை வட்டி தருவதாகக் கூறி மக்களின் ஆசையை மட்டுமல்ல பேராசையை தூண்டி வலையில் விழ வைக்கின்றன.

முன்னணி சினிமா நடிகை, நடிகர் முதல் விளையாட்டு வீரர் வரை நட்சத்திர ஓட்டல்களுக்கு வரவழைத்து பிரம்மாண்ட கூட்டங்கள் நடத்தி அறுசுவை விருந்தளித்து நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களிடம் போலி நம்பிக்கையை மோசடி நிதி நிறுவனங்கள் விதைக்கின்றன.

இந்த கவர்ச்சிகர மோசடி விளம்பரங்களை படிக்காதவர்களை விட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மெத்த படித்தக் கூட்டம்தான் அதிகமாக நம்பி ஏமாறுகின்றன. ஆன்லைன் மோசடி: நிறுவனங்கள் முதலீட்டாளர்களை நேரடியாக வரவழைத்து செய்யும் மோசடி ஒருபுறம் என்றால் இணையதளம் மூலம் வீடுகளுக்கே சென்று மக்களை சுற்றிவளைக்கும் ஆன்லைன் மோசடி மறுபுறம்.

30 சதவீதம் பேர் குடும்பத்தில் ஒருவர் ஆன்லைன் மோசடியில் சிக்குவதாக லோக்கல் சர்க்கிள் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஏமாற்று நிறுவனங்கள், ஆன்லைன் மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்தோருக்கு உரிய அமைப்புகளின் விசாரணைக்குப் பிறகு பணம் முழுமையாக கிடைத்துள்ளதா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறியே.

இதுவரையில், இழந்த பணத்தை முழுவதும் பெற்றதாகவோ, ஏமாந்த அனைவருக்கும் பணம் திரும்ப கிடைத்ததாகவோ முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை. 100 ரூபாய் கட்டியிருந்தால் 10 ரூபாயாவது கிடைத்ததே என்ற ஆறுதலில் பலர் அமைதியாகி விடுவதுதான் இன்றைய நிலை.

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களில் 24% பேருக்கு மட்டும்தான் பணம் திரும்ப கிடைத்துள்ளது என்கிறது லோக்கல் சர்க்கிள்.அஞ்சல் அலுவலகங்கள், பொது-தனியார் துறை வங்கி என ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இயங்கும் எத்தனையோ முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும்போது விட்டில் பூச்சிகளாக மோசடி நிறுவனங்களிடம் வலிய போய் மாட்டிக் கொள்வது நாம்தான் என்பதை உணர வேண்டும்.

நாளை கிடைக்கும் பலாக்காயைவிட இன்று நம் கையில் இருக்கும் களாக்காயே பெரியது என்ற நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பழமொழியை மறந்ததன் விளைவுதான் இன்று பணத்தை இழந்து கதறி எழும் மக்களின் அவலக் குரல்களுக்கு அடிப்படை காரணம்.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in