செயல்படாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை

செயல்படாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை
Updated on
2 min read

இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வங்கிகளில் உள்ள செயல்படாத கணக்குகள் தொடர்பான புதிய வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. வங்கிகளில் 10 அல்லது அதற்கு மேல் செயல்படாமல் உள்ள சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் ஏதேனும் இருப்பு இருந்தால், அதை ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு வங்கிகள் மாற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.

வங்கிக் கணக்குகள், செயல்பாட்டில் உள்ள கணக்குகள், செயல்பாட்டில் இல்லாத (செயல்படாத) கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத கணக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. கணக்குகளில் அவ்வப்போது வரவு செலவுகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போது அவை செயல்பாட்டில் உள்ள கணக்குகள் என அழைக்கப்படுகின்றன.

செயல்பாட்டில் உள்ள கணக்குகள்: வங்கிகள் அல்லது வாடிக்கையாளரால் அவ்வப்போது பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அவை செயல்பாட்டில் உள்ள கணக்குகளாக கருதப்படும். உதாரணமாக வங்கிகள் வசூலிக்கும் வட்டி மற்றும் கட்டணங்கள், வங்கிகள் வரவு வைக்கும் வட்டி முதலானவைகள் வங்கிகள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் ஆகும்.

இதுபோல, பணம் செலுத்துதல், எடுத்தல், நிதி தொடர்பில்லாத கேஒய்சி போன்ற சம்பிரதாயங்கள், டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளரால் மேற் கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் ஆகும்.

செயல்படாத கணக்குகள்: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 'வாடிக்கையாளரால் மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனைகள்' இல்லாத சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு செயல்படாததாகக் கருதப்படுகிறது.

உரிமை கோரப்படாத கணக்குகள்: பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் செயல்படாத கணக்குகளாக இருந்தால், அதில் உள்ள தொகையை 'டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதித் திட்டம், 2014' என்ற கணக்குக்கு மாற்ற வேண்டும். இந்தக் கணக்கு ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படுகிறது.

உங்கள் கணக்கு ஒருவேளை செயல்படாத கணக்காக இருந்தால், நீங்கள் அதை செயல்படும் கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை அணுகி தேவையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதும். சில சமயம் கேஒய்சி சம்பிரதாயங்கள், தேவைப்பட்டால் அது தொடர்பான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் கணக்கு ஒருவேளை உரிமை கோரப்படாததாக கருதப்பட்டு நிலுவைத்தொகை ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டிருந்தால், அதற்கும் உரிய விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பித்து கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

எல்லா வங்கிகளும் தங்கள் இணையதளத்தில் ரிசர்வ் வங்கிக்கு மாற்றம் செய்த உரிமை கோரப்படாத கணக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளன. அதில் உங்களின் கணக்கு இருக்கிறதா என்று சுலபமாக பார்க்க முடியும். இதில் உங்களுக்கு சிரமம் இருப்பின் வங்கிக் கிளை அதிகாரியையும் அணுகலாம்.

கணக்குகளின் மதிப்பாய்வு: மேலும் ஒரு வருடத்துக்கும் மேலாக வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகள் தொடர்பாக வங்கிகள் குறைந்தபட்சம் வருடாந்திர மதிப்பாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

டெர்ம் டெபாசிட்டைப் (எப்.டி.) புதுப்பிப்பதற்கான தெளிவான உத்தரவு இல்லாத சந்தர்ப்பங்களில், முதிர்வடைந்த பிறகு டெபாசிட்டை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறவில்லை என்றாலோ அல்லது அந்தத் தொகையை அவர்களின் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குக்கு மாற்றவில்லை என்றாலோ அத்தகைய டெபாசிட்கள் உரிமை கோரப்படாத கணக்காக மாறுவதை தடுக்கவும் வங்கிகள் அத்தகைய கணக்குகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சேமிப்பு கணக்கில் வட்டி: கணக்கு செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டியை வழக்கமான அடிப்படையில் வரவு வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அபராத கட்டணம் கூடாது: செயல்படாத கணக்கு என வகைப்படுத்தப்பட்ட எந்தக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை எனக்கூறி அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் செயல்படாத கணக்குகளை செயல்படுத்துவதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. மேற்கண்ட திருத்தப்பட்ட வழிமுறைகள் வரும் ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சில வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் தொடங்கும் கணக்குகளை சில காலத்துக்கு பிறகு எந்த பரிவர்த்தனையையும் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு இழப்புதான். எனவே, தேவையான கணக்குகளை சரியாக பராமரிப்பதுடன் தேவையில்லாத கணக்குகளை முறையாக மூடுவதுதான அவர்களின் நிதி ஒழுக்கத்துக்கு நல்லது.

- 1952kalsu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in