Published : 05 Feb 2018 11:36 AM
Last Updated : 05 Feb 2018 11:36 AM

பட்ஜெட்டின் பலனை உறுதி செய்வாரா ஜேட்லி?

“பூ

னைக்கும் நண்பன் பாலுக்கும் காவலன்” என்கிற முதுமொழி போல வரித்திணிப்பு அதிகம் இல்லாமலும் வரிக் குறைப்பு ஏதும் இல்லாமல் பல புதிய திட்டங்களை அறிவித்து அனைத்து தரப்பினரின் நன்மதிப்பைப் பெற நிதிஅமைச்சர் முயற்சித்திருக்கிறார். பாராளுமன்ற தேர்தலும் எட்டு மாநிலங்களின் தேர்தல்களும் வர இருக்கும் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட கடைசி முழு பட்ஜெட் இது. இந்த சூழ்நிலையில் பொதுவாக எந்த அரசும் பலவித சலுகைகளையும் இலவசங்களையும் தர முயற்சிப்பது இயல்பு. ஆனால், இந்த அரசு, சலுகைகளையும் இலவசங்களைத் தவிர்த்து வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நீண்ட கால திட்டங்களுக்கு விதைகளை விதைத்துள்ளது.

“பங்குச் சந்தையில் மாற்றங்கள் என்ன? வருமானவரி உயர்ந்ததா?” என்பதை வைத்துத்தான் பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் பட்ஜெட்டின் தன்மையை மதிப்பீடு செய்கின்றனர். ஆனால், 5% க்கும் குறைவாக வரி செலுத்துவோர் மற்றும் 6% க்கும் குறைவான மக்களே பங்குச் சந்தையில் பங்கு பெற்றிருக்கும் நிலையில் பட்ஜெட்டின் உண்மைத் தன்மையை மதிப்பீடு செய்ய இது ஓர் அளவுகோல் ஆகாது.

பட்ஜெட் சாதக அம்சங்கள்

விவசாயத் துறையில் இந்தியாவில் 49.8% மக்கள் ஈடுபட்டு சுமார் 18% மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஈட்டுகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம். கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியது போல விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளித்திருப்பது மாபெரும் திட்டம். அதாவது 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது மலைக்க வைக்கும் ஒன்று. சாலை, ரயில் ஆகிய கட்டமைப்புத் துறை மற்றும் பல்வேறு நீண்டகால பலன் தரும் திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி இருப்பது இந்தியாவின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். ஜவுளித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு இரட்டிப்பாக நிதி ஒதுக்கியிருப்பது, வென்ச்சர் கேபிடல் மற்றும் ஏஞ்செல் (Angel Investors) ஆகிய மாற்று நிதி முறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் கொடுத்திருப்பது ஒரு நல்ல அம்சம் என்றாலும் தொழில் நுட்பத்திற்கும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கவில்லை. சிறு தொழில் அமைப்புகளுக்கு முத்ரா திட்டத்தில் 2018-19 ல், ரூ 3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு வைத்திருப்பது தொழில் உலகிற்கு புதிய தெம்பாக இருக்கும்.

வரிச் சட்ட மாற்றங்கள்

வருமானவரி வரம்பில் மாற்றம் இல்லை. வருமானவரி வளையத்திற்குள் அதிகமான வரிதாரர்களைக் கொண்டு வர அரசு முயற்சித்து வரும் நிலையில் வரம்பை உயர்த்துவதன் மூலம் ஏற்கெனவே வரி செலுத்துவோர் பலர் வெளியே சென்று விடலாம் என்ற காரணத்தினால், வரிவரம்பு உயர்த்தப்படவில்லை. ஆனால், மூத்த குடிமக்களுக்கு பல சலுகைகளை அறிவித்து கெளரவம் தேடித் தந்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி ரூபாய் 50 ஆயிரம் வரை மற்றும் குறிப்பிட்ட மருத்துவ செலவுகளுக்கு ரூபாய் 1 லட்சம் வரையும் வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ரூபாய் 50 ஆயிரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 50,000 வட்டி வரை வங்கியில் வரிப் பிடித்தம் இல்லை என்பது மூத்த குடிமக்களுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு. சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமானத்தில் ரூபாய் 40 ஆயிரம் நிரந்தர வருமானக் கழிவு (standard deduction) என்று அறிமுகப்படுத்தினாலும், ஏற்கெனவே இருந்து வந்த மருத்துவச் செலவுக்கான (ரூ15.000) போக்குவரத்து செலவுக்கான (ரூ19,200) வரிச் சலுகையை தற்போது நீக்கியதால் இதன் நிகர பலன் மிகக் சொற்பமானதே.

கம்பெனி வரி

நடுத்தர மற்றும் சிறு கம்பெனிகள் அதாவது ரூபாய் 250 கோடி வரை விற்பனை உள்ள கம்பெனிகளுக்கான வரிவிகிதம் 30%-ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது நல்ல மாற்றம். ஆனால், பங்குதாரர் நிறுவனங்கள் (Partnership), LLP, AOP, ஆகிய அமைப்புகளுக்கான வரிவிகிதம் 30% ஆக இருந்து வருகிறது. இந்தியாவில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் பங்குதாரர் அமைப்பாக இருந்து வரும் நிலையில் கம்பெனிகளுடன் இந்த நிறுவனங்கள் போட்டித் தன்மையை இழக்கின்றன. அமெரிக்காவில் ‘டிரம்ப்’ அரசு சமீபத்தில் கம்பெனிகளுக்கான வரியை 35%-ல் இருந்து 21% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வரி மதிப்பீடு முறை

வரிமதிப்பீடு (Assesment) முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேர்மையான மற்றும் வெளிப்படைத் தன்மை கொண்டவரி மதிப்பீடுகள் செய்யும் வகையில் முகமற்ற, பெயரற்ற ( Faceless and Nameless (E assessment)) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது வேறு ஊர்களில் உள்ள பெயர் தெரியாத அதிகாரிகள் வரிதாரர்களின் கணக்குகளை மதிப்பீடு செய்து அனுப்புவார்கள். முகமற்ற பெயரற்ற முறையில் செய்யப்படும் வரி மதிப்பீட்டு திட்டத்தில் ஆரம்ப காலத்தில் ஏராளமான வரிச் சச்சரவுகள் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகளவு மேல்முறையீடு செய்யும் நிலை ஏற்படும்.

நீண்டகால மூலதனவரி (Long Term Capital Gain)

இந்த பட்ஜெட்டில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விற்பனையுடன் நீண்ட கால மூலதன வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டிற்கு மேல் வைத்து விற்கப்படும் பங்குகள் மீதான லாபம் ரூபாய் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 10% வரி செலுத்த வேண்டும். பெரும்பாலான நாடுகளில் பங்கு லாபத்திற்கு மூலதன வரி இருந்து வருகிறது. ரூபாய் 1 லட்சம் வரை விலக்கு இருப்பதால் சிறு முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

பெண்களுக்கான சலுகைகள்

அதிக அளவில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்த புதிய வேலை வாய்ப்புகளில் முதல் மூன்று ஆண்டுகளில் புதிய பெண் ஊழியர்களுக்கான ஈபிஎப் (Employee PF) 8% மட்டுமே (முதலில் 12%) செலுத்தினால் போதுமானது. மறுபுறம், பணியாளர் பங்களிப்பு (Employer Contribution) குறைவு இல்லை இதனால் பெண் ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லும் தொகை அதிகரிக்கும்.

பட்ஜெட்டில் எதிர் பார்த்தவை

அனைத்து தரப்பின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது இயலாத ஒன்று. பல பெரிய நல்ல திட்டங்கள் இருந்தாலும் சிறு வரிதாரர்களை திருப்திபடுத்தும் வகையில் வரி சேமிப்பிற்கான வரம்பை (Sec 80 C ) அதிகரித்திருக்கலாம். ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் சேமிப்பு பழக்கம் என்பது உடன் பிறந்த ஒன்று. இது தவிர கம்ப்யூட்டர் தேய்மானம் விகிதம் அதிகரித்தல், வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்கான வட்டிக் கழிவு ரூபாய் 2 லட்சத்திலிருந்து அதிகரித்தல், குழந்தைகளின் கல்விச் செலவிற்கான கழிவை தற்போதைய மாதம் ரூபாய் 100லிருந்து அதிகரித்தல், கம்பெனிகளுக்கு குறைந்தபட்ச மாற்றுவரி குறைத்தல் போன்றவைகள் எதிர்பார்ப்பு பட்டியலில் அடங்கும்.

பல நல்ல திட்டங்களும் கணிசமான நிதி ஒதுக்கீடுகளும் உரிய பயனாளிகளைச் சென்றடையும் பட்சத்தில்தான் இந்த பட்ஜெட்டின் முழு வெற்றி அடங்கியுள்ளது. அரசு இதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவத் திட்டத்தில் காப்பீடு இருப்பதால், பல்வேறு மருத்துவமனைகளின் சேவைக் கட்டணம் குறித்து வரையறைகளை ஏற்படுத்துதல் அவசியம். பட்ஜெட் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் பலன்கள் குறித்து கண்காணிக்க ஒரு நிரந்தர குழுவை அமைக்கும் பட்சத்தில் பலன் பல மடங்கு இருக்கும்.

தொலைநோக்குப் பார்வை கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் நிதி அமைச்சரின் சாணக்கியத்தை காட்டுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x