

வ
ட்டி விகிதம் என்பது இரு வகைகளில் நமக்கு பயன்படுகிறது. செய்யும் டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டி மற்றும் வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி. கடந்த இரு ஆண்டுகளாக வட்டி விகிதம் குறைவாக இருந்த நிலையில் டெபாசிட்தாரர்கள் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆனால் சில வங்கிகள் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கி இருக்கின்றன. மற்ற வங்கிகளும் இதை பின் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம். வரும் மாதங்களில் டெபாசிட் செய்பவர்களும் கடன் வாங்கியவர்களும் என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம்.
2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு அக்டோபர் வரை சராசரியாக 1.30 சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு வட்டி விகிதம் மேலும் 0.90 சதவீதம் வரை குறைந்தது. ஆனால் தற்போது சில வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கி இருக்கின்றன.
சில குறிப்பிட்ட காலங்களுக்கு 0.65 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஸ் வங்கி வட்டியை உயர்த்தி இருக்கிறது. டிசிபி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் லஷ்மி விலாஸ் வங்கி ஆகிய வங்கிகள் வட்டி விகிதங்களை சிறிதளவு உயர்த்தி இருக்கின்றன.
வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதற்கு முன்பு 8.5% முதல் 9 சதவீத வட்டியில் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில் அவை தற்போது முதிர்வடைய தொடங்கும். அந்த டெபாசிட்களை மறு முதலீடு செய்வது மற்றும் கூடுதலாக இருக்கும் தொகையை முதலீடு செய்வதாக இருக்கும் பட்சத்தில் குறுகிய காலத்துக்கு மட்டுமே முதலீடு செய்யலாம். இதற்கு காரணம் இருக்கிறது.
தற்போதுதான் வட்டி விகிதம் உயரத்தொடங்குகிறது. இப்போதே நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும்பட்சத்தில் வட்டி விகிதம் மேலும் உயரும் போது உங்களிடம் முதலீடு செய்வதற்கு பணம் இருக்காது. உங்களின் முதலீட்டு காலம் ஐந்து முதல் 7 ஆண்டுகள் எனில் வட்டி விகிதத்தை விட முதலீட்டு காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம் உயரத்தொடங்கும் சூழலில், ஆறு மாதம் முதல் ஒர் ஆண்டு வரையில் டெபாசிட் செய்யும் பட்சத்தில் வட்டி விகிதம் உயர உயர முதலீட்டினை தொடர்ந்து மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரே முறை நீண்ட கால முதலீடு செய்வதை விட இப்படி முதலீட்டை மாற்றும்பட்சத்தில் கூடுதல் வட்டியை பெற முடியும். தற்போது பெரும்பாலான வங்கிகள் 6.50சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை போல கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.தேனா வங்கி, கோடக், ஆக்ஸிஸ் உள்ளிட்ட வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவீதம் வரை உயர்த்தி இருக்கின்றன. ஹெச்டிஎப்சி வங்கி, இண்டஸ்இந்த் ஆகிய வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.10 சதவீதம் உயர்த்தி இருக்கின்றன.
புதிதாக கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், இருப்பதிலேயே சிறந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டும். தற்போது குறைவான வட்டியில் கடன் வாங்கினாலும், வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருக்கிறது. அதனால் இஎம்ஐ தொகையும் உயரும் என்பதால், இந்த ஏற்றத்துக்கு தயாராக இருப்பது நல்லது. 75 லட்ச ரூபாய் வரைக்குமான கடனுக்கு இந்தியன் வங்கி 8.25 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்திருக்கிறது.
இருப்பதிலேயே குறைவான வட்டியாக இது இருக்கிறது. அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை 8.3 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகின்றன.
எம்சிஎல்ஆர் விகித அடிப்படையில் கடன் வாங்கியவர்களுக்கு, எம்சிஎல்ஆர் காலத்தை பொறுத்துதான் வட்டி விகிதம் மாறும். உதாரணத்துக்கு ஓர் ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதத்தின் அடிப்படையில் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் ஒர் ஆண்டுக்கு பிறகுதான் வட்டி விகிதம் மாறும். அதனால் மாதந்தோறும் மாறுபடும் எம்சிஎல்ஆர் விகிதங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
அடிப்படை வட்டி விகித முறையில் கடன் வாங்கியவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக பெரிய பலன் இல்லை. அதே சமயத்தில் அடிப்படை வட்டி விகித முறையில் இருந்து எம்சிஎல்ஆர் முறைக்கு மாறத் தேவையில்லை. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதத்தை எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்க ஆர்பிஐ உத்தரவிட்டிருக்கிறது.
வட்டி விகிதம் தற்போதுதான் உயர தொங்கி இருக்கிறது. அதனால் இன்னும் சில காலத்துக்கு பிறகு, எங்கு குறைவான வட்டியில் கடன் இருக்கிறதோ அங்கு மாறிக்கொள்ளலாம்.