

அ
ருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பிட்காயின் பரிவர்த்தனையை சட்ட விரோதம் என அறிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பண பரிவர்த்தனையை அரசு சட்ட ரீதியான பரிவர்த்தனையாகக் கருதவில்லை என தெளிவுபடுத்திவிட்டார். இருந்தாலும் கிரிப்டோ கரன்சிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பரிவர்த்தனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேசமயம் கிரிப்டோ கரன்சிகள் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் பிளாக் செயின் தொழில் நுட்பத்தை மேம்படுத்தி டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது குறித்து அரசு ஆராயும் என்று தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சி எல்லாமே மெய்நிகர் பணம்தான். இத்தகைய பரிவர்த்தனையை ஏற்று அந்த நடைமுறையை பின்பற்றும் ஒருமித்த சிந்தனை கொண்ட மக்களால் சர்வதேச அளவில் இது புழக்கத்தில் உள்ளது. இதன் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் பதிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் இத்தகைய கிரிப்டோ கரன்சிகளை வாங்க முடியும். இவ்விதம் வாங்கப்படும் கரன்சிகள் டிஜிட்டல் வாலட்டில் சேர்த்து வைக்கப்படும். இதைக் கொண்டு பொருள்கள் வாங்கவும், பிற சேவைகளைப் பெறவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆரம்ப காலகட்டத்தில் கிரிப்டோ கரன்சிகள் அதாவது பிட்காயின் உள்ளிட்ட அனைத்துமே கரன்சிக்கு மாற்றாக அதாவது ரூபாய், டாலர், யூரோ உள்ளிட்டவற்றுக்கு இணையாக மெய்நிகர் பணமாகக் கருதப்பட்டது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.இத்தகைய பரிவர்த்தனையில்தான் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் டிஜிட்டல் தளத்துக்கு செல்வதற்கு மத்திய அரசு தயாராகாத நிலையில் இத்தகைய பரிவர்த்தனையை அரசு முடக்கியுள்ளது.
தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை பல சந்தர்ப்பரங்களில் பிரதமரும், ஜேட்லியும் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் இதைக் கண்காணிக்க உரிய வழிமுறைகள் இல்லாததால் போதை மருந்து கடத்தல், தீவிரவாத செயல்பாடு உள்ளிட்டவற்றுக்கு இவ்விதம் கரன்சி மாறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை காரணமாக இது சட்டபூர்வமாக ஏற்கப்படவில்லை. இந்தியாவில் பிட்காயினை அளிப்பது மற்றும் அதை மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வ பரிவர்த்தனை அலுவலகங்கள் கிடையாது.
மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளதால் இதன் மூலம் பொருள்கள் வாங்குவது அல்லது சேவையைப் பெறுவது இயலாது. இவ்வித பரிவர்த்தனை அனைத்துமே சட்ட விரோத நடவடிக்கையாகவே கருதப்படும்.
பிட்காயின் ஆதரவாளர்கள் இத்தகயை பரிவர்த்தனையானது பங்குகள், பரஸ்பர நிதிகள், தங்கம் ஆகிய முதலீடுகளைப் போன்றதே என்று தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில் புழக்கத்தில் உள்ள மெய்நிகர் பணம் எனப்படும் கிரிப்டோ கரன்சியில் பிட்காயின் 50 சதவீத இடத்தை ஆக்கிரமித்துள்ளது. கடந்த டிசம்பரில் 10 ஆயிரம் டாலராக இருந்த இதன் மதிப்பு ஒரு சில வாரங்களில் 19,200 டாலரைத் தொட்டது. ஆனால் அடுத்த மாதமே இது 9 ஆயிரம் டாலர் அளவுக்கு சரிந்தது. பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வருவதால் இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர். சிலர் ரூ.5 ஆயிரம் வரை கூட முதலீடு செய்துள்ளனர்.
பெரும்பாலான பரிவர்த்தனை மையங்கள் பிட்காயின், லிட்காயின், எதிரியம் உள்ளிட்ட மெய்நிகர் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. சமீப காலமாக இந்தியாவுக்குள் நுழைந்த பிட்காயின் ஜீபே மூலமாக வர்த்தகமாகிறது. பரிவர்த்தனை மையங்களில் தினசரி ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை வர்த்தகமாகிறது. இத்தகயை பரிவர்த்தனை மையங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட உள்ளன. இதில் 25 முதல் 40 வயதுப் பிரிவினர்தான் முதலீடு செய்கின்றனர்.
ஆனால் இதில் உள்ள சிக்கலே இத்தகைய பரிவர்த்தனை மையங்கள் அனைத்துமே ரிசர்வ் வங்கி மற்றும் செபி-யால் அங்கீகாரம் பெற்றவை அல்ல. ஒருவேளை கிரிப்டோ கரன்சிகள் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டால் இத்தகைய பரிவர்த்தனை மையங்களுக்கு செபி அங்கீகாரம் அளிக்கும். இத்தகைய சூழலில் இதுபோன்ற பரிவர்த்தனை மையங்கள் ஈட்டும் லாபமும் சட்ட விரோதமானவையே.
செபி அல்லது ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்காதவரை கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் சட்ட விரோதமான இத்தகயை பரிவர்த்தனை மையங்கள் எந்த நேரத்திலும் இழுத்து மூடப்படலாம். அப்போது உங்களது முதலீட்டை இழக்க நேரலாம்.மாற்று முதலீட்டு திட்டமாக இப்போதைக்கு கிரிப்டோ கரன்சி, பிட்காயினில் முதலீடு செய்வதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.