Published : 12 Feb 2018 11:39 AM
Last Updated : 12 Feb 2018 11:39 AM

பிட்காயின்: உலக நாடுகளின் அச்சம்

சி

ல விஷயங்கள் தொடர்ச்சியாக பேசினாலும் எழுதினாலும் எளிதில் முடிந்து விடக்கூடியதாக இருக்காது. பிட்காயின் விவகாரமும் அப்படித்தான். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது இந்த விர்ச்சுவல் கரன்ஸி.

சர்வதேச அளவில் பல நாடுகள் பிட்காயினை தடைச் செய்து வருகின்றன. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள்கூட தற்போது இதன் பரிவர்த்தனையை கடுமையாக்கியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பிட்காயினை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்காத நிலையில் உள்ளன. ஆனால் முடிவெடுக்காத நாடுகள் பிட்காயின் மூலமான பரிவர்த்தனைகளுக்கு தடை செய்துள்ளதுடன், சட்ட விரோதம் எனவும் அறிவித்துள்ளன.

முக்கியமாக கவனிக்க வேண்டியது உலக நாடுகள் இந்த கரன்சியை அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ கிடையாது. தடை செய்வதாகவே அறிவித்துள்ளன. ஏனென்றால் பிட்காயினுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் கிடைக்குமானால் சம்பந்தப்பட்ட நாடுகளின் நாணய மதிப்பு குறையும் என்பதுடன் பரிவர்த்தனையிலிருந்தும் புறக்கணிக்கப்படும் வாய்ப்புள்ளது. சில நாடுகளில் அரசும், சில நாடுகளின் மத்திய வங்கியும், சில நாடுகளில் இணைந்தும் தடை விதித்துள்ளன.

கைவிட்ட நாடுகள்

ஆரம்பத்தில் பிட்காயின் பரிவர்த்தனையை நம்பிய நாடுகள்கூட இப்போது கைவிட்டு வருகின்றன. அமெரிக்காவில் விமான டிக்கெட் முதல் பர்க்கர் வரை எதை வாங்க வேண்டும் என்றாலும் பிட்காயின் கொடுக்க முடியும். ஆனால் இப்போதோ விதிகளை கடுமையாக்கி வருகிறது. பிட்காயின்களை வைத்திருப்பதால் வரும் சிக்கல்கள் குறித்து உலக வங்கியே இப்போது அச்சம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம், கிரிப்டோகரன்ஸி பயன்பாடு பொன்சி திட்டத்துக்கு இணையானது. கிரிப்டோ கரன்சி எப்படி செயல்படுகிறது என்பது குறித்து இப்போதுவரை தெளிவில்லை என்று கூறியுள்ளார்.

முக்கியமாக சமீப நாட்களில் இதன் மதிப்பில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த கரன்சி சர்வதேச மதிப்பிலானது என்பதால் சரிவும் சர்வதேச அளவில் பெரிய நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. 2017-ல் பிட்காயின் பரிவர்த்தனையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியால் உலக அளவில் பல முதலீட்டாளர்கள் பிட்காயின் பக்கம் கவனத்தை திருப்பினர். விளைவு அபரிமிதமாக இதன் மதிப்பு உயர்ந்தது. ஆனால் டிசம்பர் மாத இறுதியிலிருந்து சரிந்து வருகிறது. ஏறிய மதிப்பில் இருந்து மூன்றில் இரண்டு மடங்கு சரிந்துள்ளது. இந்தியாவிலும் பிட்காயின் பரிவர்த்தனையில் ஈர்க்கப்பட்டு பலர் முதலீடு செய்தனர். ஆனால் இப்போது நஷ்டத்தில் உள்ளனர்.

காரணம் என்ன?

பிட்காயின் பரிவர்த்தனையில் மிகப் பெரிய சந்தையான சீனாவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக சீனாவின் இயங்கி வந்த அனைத்து பிட்காயின் பங்குச் சந்தைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மேலும் டிஜிட்டல் கரன்சிகளை விற்பனை செய்து அதன்மூலம் சொத்துகளை சேர்த்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து சீன மத்திய வங்கி ஆராயத் தொடங்கியது. தவிர இவ்வாறு சொத்துகளை சேர்ப்பது சட்டவிரோதம் என்றும் அறிவித்தது. இதனால் டிசம்பர் மாதத்திலிருந்து பிட்காயின் சந்தை மளமளவென சரிந்து வருகிறது. ஏனெறால் உலகளவில் தயாரிக்கப்பட்ட பிட்காயிகளில் 70 சதவீதம் சீனாவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச அளவில் மிகப் பெரிய பிட்காயின் சந்தையில் தென்கொரியாவும் ஒன்று. சீனா நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து அதிக பிட்காயின் பரிவர்த்தனைகளை தென்கொரியா மேற்கொண்டது. இதனால் மின்னணு கரன்சி வளர்ச்சியை கட்டுப்படுத்த அரசு இப்போது முயன்று வருகிறது. செப்டம்பர் மாதத்திலேயே தென்கொரியாவும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை தடை செய்ததுடன், பிட்காயின் சந்தைகளை மூடுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்தது. ஏனென்றால் தென்கொரியாவில் முக்கிய பங்குச்சந்தையான யூபிட் சைபர் தாக்குதல் காரணமாக மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிட்காயின் மீதான நடவடிக்கைகளை எடுத்தது.

பங்களாதேஷ்

பொருளாதார நீதியான பங்களாதேஷ் நாட்டை பாதிக்கும் என அந்நாட்டு நாணய கட்டுப்பாட்டு சட்டம் 1947 மற்றும் 2012 பணமோசடி சட்டத்தின் கீழ் பிட்காயின் தடை செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் உள்பட இதர சட்டவிரோத டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 12 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். பிட்காயின்கள் மூலமாக, பணம் செலுத்துவோர், பண ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் என்கிற அடிப்படையில் அரசுக்கு எதிரான குற்றமாக கருதப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைத்து, கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன், பிட்காயின்கள் பயன்படுத்த வழிவகைகள் செய்ய உள்ளதாகவும் கடந்த ஆண்டு அறிவித்துள்ளது.

இந்தோனேஷியா

கிரிப்டோகரன்சி மூலமாக பரிமாற்றம் செய்வதை இந்தோனேஷியா தடைசெய்துள்ளது. ஆனால், இதன் மூலமாக நடத்தப்படும் பணப்பரிவர்த்தனை மற்றும் `மைனிங்` என்று குறிப்பிடப்படும் பிட்காயின் தயாரித்தல் முறைகளுக்கு இன்னும் தடைவிதிக்கப்படவில்லை. இந்த சட்டம் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வியட்நாம்

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு சட்ட வழிமுறையை உருவாக்க உள்ளோம் என வியட்நாம் கடந்த ஆண்டிலிருந்தே கூறிவருகிறது. ஆனால் தற்போதுவரை அந்நாட்டில் பிட்காயின்களை பயன்படுத்துவது சட்ட விரோதம்தான். முக்கியமாக பிட்காயின் பரிவர்த்தனை கண்டுபிடிக்கபட்டால் 9000 டாலர்களை வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இந்தியா

இந்தியாவில், பிட்காயின்கள் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றின் பரிவர்த்தனைகளை இப்போதுவரை முடக்கப்படவில்லை. எனினும் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் கிரிப்டோகரன்சியில் சிக்கல்கள் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றன. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பிட்காயினுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறைவானதுதான்.

தவிர அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் அதன் சந்தை மதிப்பை இழக்க காரணமாக உள்ளது. உலக வங்கியே கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையில் தெளிவில்லாத நிலையில் இருக்கும்போது... நாடுகள் கைவிடுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. உங்கள் பணம் பத்திரம் என்பதுதான் ஒரே எச்சரிக்கை.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x