

பொதுவாக 12 வயது சிறுமிகள் என்ன செய்வார்கள்? ஹோம்வொர்க் எழுதுவார்கள், இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பார்கள் அல்லது தோழிகளுடன் அரட்டை அடிப்பார்கள். ஆனால், கனடாவில் வசிக்கும் மனா ஜம்பாலா என்ற 7-ம் வகுப்பு மாணவி, இந்த வயதிலேயே உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு 'ஏஐ' (AI) பிசினஸ் மேக்னட். மூன்று நாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் இவரது 'வொக்ஸா' (Voxa) ஸ்டார்ட்-அப் உருவான கதை, ஒரு சினிமா படத்தைக் காட்டிலும் சுவாரசியமானது.
ஒரு போன் காலில் உதித்த ஐடியா! - எல்லாமே மனாவின் தந்தை வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்து தான் தொடங்கியது. அங்கு ஊழியர்கள் பிஸியாக இருக்கும்போது, பல வாடிக்கையாளர்களின் போன் அழைப்புகளை எடுக்க முடியாமல் போவதை மனா கவனித்தார். இதனால் எவ்வளவு பிசினஸ் நஷ்டமாகும் தெரியுமா? என்று யோசித்த அந்த 12 வயது மூளை, சும்மா இருக்கவில்லை. அதற்கு தீர்வாக மனா உருவாக்கியதுதான் ‘வொக்ஸா’.
இது சாதாரண செயலி அல்ல; 24 மணி நேரமும் அயராது உழைக்கும் ஒரு ‘ஏஐ குரல் உதவிச் செயலி’ (AI Voice Assistant). உணவகங்கள், மருந்தகங்கள் என எந்த பிசினஸாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் கூப்பிட்ட அடுத்த நொடி இந்த ஏஐ அக்கா லைனில் வந்துவிடுவார்! அழகாகப் பேசி ஆர்டர்களை எடுப்பார். அப்பாயின்ட்மென்ட்களை புக் செய்வார். கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிப்பார். இன்று இந்தச் சேவை கனடா, இந்தியா, கம்போடியா ஆகிய மூன்று நாடுகளின் பிசினஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கிறது!