

மதுரை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் வந்தவர் வெங்கடசுப்பு. பயிற்சி வழக்கறிஞராக வேலையை தொடங்கிய அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது உணவக தொழில். வேலூரில் நலிந்தநிலையில் இருந்த ஆரிய பவன் உணவகத்தை லாபப் பாதைக்கு மாற்றினார் வெங்கட சுப்பு.
இந்த நிகழ்வு டார்லிங் குழுமம் உருவாக காரணமாக அமைந்தது. அவருடைய பெயரும் டார்லிங் வெங்கடசுப்பு என மாறியது. இன்று, 3 டார்லிங் ஓட்டல்ஸ் (ரெசிடென்சி), 25 டார்லிங் உணவகங்கள், 135 டார்லிங் டிஜிட்டல் கிளைகள், 10 டார்லிங் பேக்கரி, 4 தென்றல் டீ கடைகள் என டார்லிங் குழுமத்தை வேலூரில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, புதுச்சேரி வரை விரிவாக்கியுள்ளார். தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். வெற்றிப் பயணம் குறித்து வெங்கடசுப்புவிடம் கலந்துரையாடினோம்.
உங்கள் பின்னணி குறித்து கூறுங்கள்.. திருநெல்வேலி மாவட்டம் வெங்கட்ராயபுரம் கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை முத்துசாமி, தாய் நாச்சியார். நான் வீட்டுக்கு ஒரே மகன். அப்பா, பஞ்சாயத்துதலைவராக இருந்தவர். விவசாய தொழில் செய்துவந்தார். எங்கள் ஊரின் முதல் பட்டதாரி நான்தான். பாளையங்கோட்டையில் பி.எஸ்சி. தாவரவியல் படித்தேன். ஊரில் நடைபெற்ற ஒரு நிகழ்வு என்னை வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. பிறகு, மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்தேன்.
அதே வேகத்தில் வேலூரில் வழக்கறிஞராக பயிற்சி பெற வந்த நான், இன்று டார்லிங் வெங்கடசுப்புவாக மாறிவிட்டேன். மனைவி சுசீலா, பெண்களுக்கான இரண்டு பொட்டிக் (Boutique) கடைகளை சிறப்பாக நடத்தி வருகிறார். மூத்த மகன் முரளி, டார்லிங் ஓட்டல், உணவகங்களை கவனித்துக்கொள்கிறார். இரண்டாவது மகன் நவீன் டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் கிளைகளை கவனித்துக்கொள்கிறார்.
உணவக தொழிலில் சாதித்தது எப்படி? - வழக்கறிஞர் பயிற்சிக்காக வேலூருக்கு வந்தபோதே ஓட்டல் தொழிலில் ஆர்வம் இருந்துகொண்டே இருந்தது. காரணம், மதுரையில் சட்டப்படிப்பு படித்தபோதே, ஆராதனா என்ற உணவகத்தின் பங்குதாரராக இருந்து அந்த தொழிலை கவனித்து வந்தேன்.அதில் உணவக தொழில் குறித்த அனுபவம் கிடைத்தது. வேலூரில் எனது உறவினர் ஒருவர், நஷ்டம் காரணமாக தான் நடத்தி வந்த ஆரிய பவன் உணவகத்தை 3 ஆண்டுகளாக மூடி வைத்திருந்தார்.
அந்த உணவகத்தை நான் எடுத்து நடத்த ஆரம்பித்தேன். கடுமையாக உழைத்தேன். வழக்கறிஞர் தொழிலைவிட உணவக தொழிலில் சாதிக்க முடியும் என்று முடிவெடுத்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்டு உணவக தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வெற்றியும் பெற்றேன்.
உணவக தொழிலில் நீங்கள் பெற்ற பாடங்கள் என்ன? - வேலூரில் ஆரிய பவன் உணவகத்தை நடத்தியபோது மக்களுடன் நெருங்கிப் பழகினேன். அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு அதை அவர்களுக்கு கொடுத்தேன். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க விரும்பினேன். உணவக தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தேன்.
1987-ம் ஆண்டில் வேலூர் ஆபீசர்ஸ் லைனில் நலிந்த நிலையில் இருந்த கண்ணா உணவகத்தையும் நான் எடுத்து நடத்த ஆரம்பித்தேன். அதையும் லாபத்துக்கு கொண்டு வந்தேன். அதன் பிறகு கண்ணா உணவகத்தை விட்டு வெளியேறும் அளவுக்கு கடுமையான நெருக்கடி வந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறினேன்.
டார்லிங் பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? - கண்ணா ஓட்டலில் இருந்து வெளியேறும்போது சொந்த இடத்தில் தொழில் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதே ஆபீசர்ஸ் லைனில் ஒரு இடத்தை வாங்கினேன். நான் உருவாக்க நினைத்த கனவு, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று யோசித்ததில் தோன்றியதுதான் ‘டார்லிங்’ என்ற பெயர். 2000-ம் ஆண்டுகளில் ஆபீசர்ஸ் லைனில் ‘டார்லிங் ஓட்டல்’ (ரெசிடென்சி) தொடங்கினேன்.
அதே நேரத்தில் டார்லிங் வீடியோ லைப்ரரியும் தொடங்கி நடத்தி வந்தேன். வீடியோக்களுக்கு மவுசு குறைந்த நேரத்தில் அதை டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் ஆக மாற்றினேன். அதிகப்படியான எண்ணிக்கையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பதால் எனக்கு குறைந்த விலையில் நிறுவனங்கள் பொருட்களை வழங்குகிறார்கள். அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கும் நான் கொடுப்பதால் லாபத்தில் இயங்கி வருகிறது.
எந்தெந்த ஊர்களில் உங்கள் நிறுவனம் செயல்படுகிறது.. வேலூரில் நலிவடைந்த உணவகங்களை எல்லாம் நான் எடுத்து நடத்தி லாபம் ஈட்டினேன். டார்லிங் குழுமத்தின் கீழ் அமிர்தா, நம்ம வீடு, சுசீல், சுசீல் கிளாசிக், ஆரிய பவன் என்ற பெயர்களில் வேலூர், ஆரணி, வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் 25 உணவகங்கள் இயங்கி வருகின்றன.
உணவை தரமாகவும் ஒரே சுவையுடனும் வழங்க சென்ட்ரல் கிச்சன்களை உருவாக்கினேன். வேறு ஏதாவது ஒரு கடையில்போண்டா சுவையாக இருக்கிறது என்று வாடிக்கையாளர் யாரேனும் கூறினால் அந்த கடைக்குச் சென்று அந்த போண்டாவை வாங்கி வந்து அதே சுவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
அதேபோல், சிறுவயதில் அப்பாவுடன் விவசாய நிலத்துக்கு சென்று உதவி செய்து வந்தேன். அதனால், விவசாயத்தின் மீதான ஆர்வம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் 40 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். விரிஞ்சிபுரம் கிராமத்தில் 150 பசுக்களுடன் இயங்கி வரும் பால் பண்ணையில் இருந்து எங்கள் உணவகங்களுக்கு தேவையான நெய், பன்னீர், பால் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம். எங்கள் உணவகங்களில் சிறுதானிய உணவுகளை வகை வகையாக கொடுக்கிறோம். இது மற்ற உணவகங்களில் கிடைக்காது.
தென்றல் டீ கடை, டார்லிங் பேக்கரி குறித்து கூறுங்கள்.. வேலூரில் மதிப்புமிக்க டீ கடையாக மெரினா கஃபே இயங்கிவந்தது. அது நலிவடைந்த நிலையில் அதன் உரிமையாளர்களிடம் பேசி அந்த டீ கடையை நடத்தினேன். மெரினா கஃபே தற்போது தென்றல் பெயரில் இயங்கி வருகிறது. நான்கு இடங்களில் இயங்கி வரும் தென்றல் டீ கடைகளில் நாங்கள்தான் முதன் முதலாக ‘கட்டிங் சாய்’ என்பதை அறிமுகம் செய்தோம்.
சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். கண்ணாடி டீ டம்ப்ளர்கள் அனைத்தும் சுடுநீரில் சுத்தம் செய்யும் இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்புபேக்கரி தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். அப்போதேஸ்வீடன், ஜெர்மனியில் இருந்து நவீன இயந்திரங்களை வரவழைத்து தரமான பேக்கரி உணவுப் பொருட்களை வழங்கினோம். வழக்கம்போல் மக்கள் ஆதரவு இருந்ததால் இன்று 10 கிளைகளுடன் டார்லிங் பேக்கரி இயங்கி வருகிறது.
உங்கள் வெற்றியின் ரகசியத்தை கூறுங்கள்.. டார்லிங் என்றால் சேவை, தரம், விற்பனை என எதிலும் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். எங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டேன். இதனால், 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் என்னிடம் இருந்து வெளியே செல்லாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தில் தொடர்ந்து 14-வது ஆண்டாக தலைவர் பதவியில் இருந்து வருகிறேன். வேலூரில் லயன்ஸ் சங்க தலைவராக 2007-2008 -ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளேன். தரம், சேவையை முன்வைத்து செயல்படுகிறேன். இதுதான் டார்லிங் குழுமம் வேகமாக வளர்ந்து வருவதற்கு காரணம். விரைவில் வேலூரில் ரேடிசன் குழுமத்துடன் இணைந்து ‘டார்லிங் ஓட்டல்’ அமைய உள்ளது. டார்லிங் குழுமம் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்லும்.
- senthilkumar.v@hindutamil.co.in