Published : 29 Jan 2024 06:10 AM
Last Updated : 29 Jan 2024 06:10 AM

பிசினஸ் என்பது கடலுக்கு போகிற மாதிரி நிச்சயமின்மை நிரம்பிய பயணம்! - ‘இப்போ பே’ நிறுவனர் & சிஇஓ மோகன் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 09

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த யுபிஐ, அன்றாட பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், மூன்று நிறுவனங்களே இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன: ‘கூகுள் பே’, ‘போன் பே’, ‘பேடிஎம்’. இவற்றில் ‘கூகுள் பே’ வெளிநாட்டு நிறுவனம். ‘போன் பே’ பெங்களூருவையும், ‘பேடிஎம்’ நொய்டாவையும் தலைமையிடமாகக் கொண்டது.

மோகனுக்கு ஒரு கேள்வி எழுந்தது: ஒட்டுமொத்த நாடே யுபிஐ நடைமுறைக்கு வேகமாக மாறி வருகிறது. ஏன், 8 கோடி மக்கள் தொகையை கொண்ட தமிழ்நாட்டிலிருந்து ஒரு யுபிஐ நிறுவனம்கூட உருவாகவில்லை? கேள்வியோடு அவர் நிற்கவில்லை. “நாமே அப்படி ஒரு செயலியை உருவாக்கலாமே” என்று முடிவெடுத்தவர், 2020-ம் ஆண்டு ‘இப்போ பே’ (Ippo Pay) செயலியை உருவாக்கினார்.

தமிழ்நாட்டின் முதல் யுபிஐ செயலி அதுதான். மூன்றே ஆண்டுகளில் கவனிக்கத்தக்க நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் ‘இப்போ பே’ மூலம் தினமும் ரூ.8 கோடி பரிவர்த்தனை நடைபெறுகிறது. 7 பேரோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இன்று 400 பேர் வேலை செய்கிறார்கள்.

சென்னை தவிர்த்து, பெங்களூரு, மும்பையில் அந்நிறுவனம் அலுவலகங்களைக் கொண்டிருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ள மோகன், ஐஐடியில் படித்தவரோ, தொழில் முனைவு குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவரோ இல்லை. படிப்பிலும் மிகச் சுமாரான மாணவன். கல்லூரியில் 30 அரியர். பிறகு எப்படி இந்த வளர்ச்சி சாத்தியமானது, இந்த மாற்றத்துக்கு பின்னிருக்கும் கதை என்ன? மோகனுடன் உரையாடினேன்.

உங்கள் குடும்பச் சூழல், இளைமைப் பருவத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா? - ராமேஸ்வரம் என்னுடைய சொந்த ஊர். கடலில் மீன் பிடிப்பதுதான் பரம்பரைத் தொழில். 1980-களில் வளை குடா நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உருவானது. தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் அங்கு வேலைக்காக சென்றனர். மீனவத் தொழிலிருந்து விடுபட்டு குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் என் அப்பா கடன் வாங்கி, விசா எடுத்து துபாய் சென்றார்.

அங்கு கப்பலில் வேலை என்று அழைத்துப் போனார்கள். ஆனால், அவருக்கு கடலில் மீன் பிடிக்கும் வேலையே கொடுத்தார்கள். என் அப்பாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு அங்கு வேலை பார்க்க ஆரம்பித்தார்.

இதனால், நான் முற்றிலும் என் தாயின் கண்காணிப்பில்தான் வளர்ந்தேன். மிகக் கண்டிப்புடன் என்னை வளர்த்தார். அவரிடம் நான் அடிவாங்காத நாளே இல்லை. பள்ளிப் பருவத்தில், நான் ஒரு தத்தியாகவே இருந்திருக்கிறேன். மிகவும் சிரமப்பட்டுதான் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்பா விருப்பத்துக்காக பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். எல்லா பாடங்களிலும் அரியர்.

குடும்பம், வாழ்க்கைக் குறித்து எந்தக் கவலையும், பொறுப்பும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த என்னிடத்தில், நான்காம் ஆண்டில் மாற்றம் நிகழ்ந்தது. “நாம் பட்டம் பெறாவிட்டால், அப்பா போல் மீன்பிடிக்கத்தான் செல்ல வேண்டும். இதிலிருந்து மீள பொறியியல் படிப்பில் எப்படியாவது பாஸ் ஆகிவிட வேண்டும்” என்று முடிவு செய்தேன். கடைசி செமஸ்டரில் 30 அரியர்களையும் ஒரே அமர்வில் எழுதி தேர்ச்சி பெற்றேன்.

கல்லூரி முடித்த பிறகு என்ன செய்தீர்கள்? - கல்லூரி முடித்த கையோடு, சென்னைக்கு வேலை தேடி வந்தேன். ஆண்டு 2006. சென்னையில் இருந்த என் அப்பாவின் நண்பர் யூஜின் ஜோசப்பை முதலில் சந்தித்தேன். அவருடைய வீட்டிலேயே என்னை தங்கி வேலை தேடச் சொன்னார். எனக்கு அவர் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

நான் கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் கடைசி வருட புராஜெக்ட் நன்றாக செய்திருந்தேன். அதன் அடிப்படையில் சென்னையில் வெப் டிசைனராக ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

2008-ம் ஆண்டில் ‘ரோம்சாஃப்ட்’ நிறுவனத்தை தொடங்கியுள்ளீர்கள். 12-ம் வகுப்பு வரையில் தமிழ் தவிர எதிலும் தேர்ச்சி அடையாத, கல்லூரியில் 30 அரியர் வைத்திருந்த ஒருவர், எப்படி சென்னை வந்த இரண்டே ஆண்டில் சொந்தமாக நிறுவனம் தொடங்கும் முடிவுக்கு வந்தார்? - முதல் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பிறகு, இன்னொரு நிறுவனத்துக்கு மாறினேன். அங்கு வேலையில் சேர்ந்த 15 நாட்களில் அந்த நிறுவனத் தலைவர், “மோகன் உனக்கு வேலை தெரியவில்லை. உன்னை அலுவலகத்திலிருந்து நீக்குகிறோம்” என்றார். “சார், என்னுடைய முந்தைய பணி அனுபவத்துக்கும் தற்போதைய வேலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். சீக்கிரமே கற்றுக்கொள்வேன்” என்று கெஞ்சினேன்.

“எங்களுக்கு அதற்கெல்லாம், நேரம் இல்லை. நீ கிளம்பலாம்” என்றார். பாதி மாதம் வேலை பார்த்ததற்கான ஊதியமாகரூ.6,000 தந்து வெளியே அனுப்பினார்கள். அதைக் எடுத்துக்கொண்டு அண்ணா நகர் சாலையில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் கண்ணீர் தீர்ந்து வைராக்கியம் பிறந்தது. “இனி யாரும் என்னை வேலையைவிட்டு நீக்கக்கூடாது. அப்படி என்றால் என்ன செய்வது? நானே ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும்.”

நேராக ஒரு கடைக்குச் சென்று 2 பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்து தூங்கினேன். 15 மணி நேரம் தூங்கி இருப்பேன். மறுநாள் காலை கண் விழித்ததும் முதல் வேலையாக, என்னுடைய மடிக்கணினியை எடுத்து இணையத்தில் ஃப்ரீலான்ஸ் வேலைகளை தேட ஆரம்பித்தேன். எனக்கு வெப் டிசைன் நன்றாக தெரியும். தனிநபராக வேலை தேடாமல் நிறுவனத்தின் பெயரில் வேலை தேடினால் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற முடிவில் ‘ரோம்சாஃப்ட்’ என்ற நிறுவனம் உருவாக்கினேன். ஃப்ரீலான்ஸ் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

‘இப்போ பே’ ஐடியா எப்போது உருவானது? - ‘ரோம்சாஃப்ட்’ 6 பேர் கொண்ட நிறுவனமாக வளர்ந்திருந்தது. அதன் வழியே ஓரளவு வருமானம் வந்துகொண்டிருந்தது. இதனிடையே, புதிதாக முயற்சித்துப் பார்ப்போம் என்று சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கினேன். எதுவும் எடுபடவில்லை. சொல்லப்போனால், 2018 வரை எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் என் அப்பா என்னை துபாய்க்கு அழைத்தார். அப்போது அங்கு ஒரு ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி நடை பெற்றுக்கொண்டிருந்தது.

வெவ்வேறு நாடுகளிலிருந்து தொழில்முனைவோர்கள் வந்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு நான் சென்றேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்தான் உமர். துபாயில் பேமெண்ட் கேட்வே ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கும் ஐடியாவில் இருந்த உமர், என்னைப் போலவே வாய்ப்புகளை எதிர்பார்த்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இருவரும் சந்தித்தோம். இருவரும் தத்தம் கதைகளைப் பகிர்ந்துகொண்டோம்.

அவருக்கு என்னுடைய வாழ்க்கைப் பயணம் பிடித்திருந்தது. “சேர்ந்து ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார். நான் உடனே சரி என்றேன். அப்படித்தான் ‘பொலுசி’(Foloosi) ஆரம்பமானது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பேமெண்ட் கேட்வே செயலி அது. இந்தியாவில் இருந்தபடி அந்தச் செயலி உருவாக்கத்துக்கான வேலைகளை செய்துகொடுப்பது என்னுடைய பொறுப்பு.

2018 ஏப்ரலில் நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்தச் செயலிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய அதுவரையிலான தொழில் பயணத்தில் நான் பார்த்த முதல் பெரிய வெற்றி அது. அந்த வெற்றி எனக்கு மிகப் பெரும் நம்பிக்கை கொடுத்தது.

இதைபோல் இந்தியாவில் எதாவது நாம் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 30 சதவீத அளவிலேயே யுபிஐ ஊடுருவி இருந்தது. சிறு, குறு ஊர்களில் யுபிஐ இன்னும் அதிகமாக கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருந்தது. இதுதான் நமக்கான சந்தை என்று முடிவெடுத்தேன். 2020-ம் ஆண்டு நவம்பரில், நண்பர் ஜெயக்குமாருடன் இணைந்து ‘இப்போ பே’ நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முதலீட்டாளர்கள் ‘இப்போ பே’ நிறுவனத்தை எப்படிப் பார்த்தார்கள்? - 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினேன். யாருக்கும் ‘இப்போ பே’ மேல் நம்பிக்கை இல்லை. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் உங்களால் போட்டியிட முடியாது என்றார்கள்.

அப்போது ஒரு இரவில் தூங்காமல், அமெரிக்காவின் பிரபலமான காயின்பேஸ் நிறுவனத்தின் தலைவர் பிரைன் ஆம்ஸ்ட்ராங்குக்கு குருட்டு நம்பிக்கையில் மெயில் அனுப்பினேன். ஒரு மாதம் கழித்து அழைப்பு வந்தது. “நான் ப்ரைனின் உதவியாளர் பேசுகிறேன். நீங்கள் மின்னஞ்சல் செய்திருந்தீர்கள் அல்லவா.

சொல்லுங்கள், என்ன விஷயம்? ” “கிராமங்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கென்று ஒரு யுபிஐ செயலியை உருவாக்கி இருக்கிறேன்” என்று ஆரம்பித்து, நான் பிறந்து வளர்ந்த கதை எல்லாம் சொன்னேன். நம்பமாட்டீர்கள், 20 நிமிட உரையாடலின் முடிவில் அவர் ‘இப்போ பே’ யில் 2 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவில் மற்ற முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய முன்வந்தனர். அதன் பிறகு ‘இப்போ பே’ வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்தப் பயணத்தில் நீங்கள் உணர்ந்துகொண்ட விஷயம் என்ன? - யோசித்துப் பார்த்தால், பிசினஸ் என்பது கடலுக்குப் போகிற மாதிரிதான். முழுக்கவும் நிச்சயமின்மையால் நிரம்பிய பயணம் அது. நம்பிக்கையின் வழியே முன்னகர்ந்து செல்கிறோம். வாழ்க்கையும் அப்படித்தானே. எந்த ஒரு இக்கட்டான தருணத்திலும் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டேன்.

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x