

சர்வதேச அளவிலான வர்த்தக நடவடிக்கைகளின் உயிர்நாடி நாணயம். இது, ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலை பிரதிபலிப்பதுடன், வலிமை, ஸ்திரத்தன்மை வலுவான நிதி ஆரோக்கியத்துக்கு தக்க சான்று. நாணயம் மீதான மதிப்பு உயரும்போது அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் உயருகிறது.
இதனால், முதலீடுகளை எளிதாக ஈர்க்கவும், சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தவும் முடியும். அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள 180 நாடுகளின் நாணயங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பு செய்துள்ளது. அதில் சில நாணயங்கள் பிரபலமானவை என்பதுடன் அதன் பயன்பாடு என்பது பரவலாக உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்: உலகின் வலிமையான நாணயங்களின் பட்டியலை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் குவைத் தினார் முதலிடத்தில் உள்ளது. 1961- ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகின் மதிப்புமிக்க நாணயமாக தினார் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதற்கு, குவைத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை, கச்சா எண்ணெய் வளம் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அறிமுகத்தின்போது 1 தினாருக்கு 13ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது ரூ.270 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று1 தினார் என்பது அமெரிக்க மதிப்பில் 3.35 டாலராக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, பஹ்ரைன் தினார் ( 220.4 ரூபாய், 2.65 டாலர்), ஓமன் ரியால் (215.84 ரூபாய், 2.60 டாலர்), ஜோர்டான் தினார் (117.10 ரூபாய், 1.41 டாலர்), ஜிப்ரால்டர் பவுண்ட் (105.52 ரூபாய், 1.27 டாலர்), பிரிட்டன் பவுண்ட் (105.84 ரூபாய், 1.27 டாலர்), கேமன் தீவு டாலர் (99.76 ரூபாய், 1.20 டாலர்), ஸ்விஸ் பிராங்க் (97.54 ரூபாய், 1.17 டாலர்), யூரோ (90.80 ரூபாய், 1.09 டாலர்) உள்ளன.
சுவாரஸ்ய நிகழ்வாக, உலகளவில் எல்லோரும் விரும்பும் அமெரிக்க டாலர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இந்திய ரூபாய் இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. சர்வதேச நிதியத்தின் வலைதளத்தில் அமெரிக்க டாலருக்கான ஒரு ரூபாயின் மதிப்பு என்பது 83.13-ஆக (ஜன.17 நிலவரம்) பட்டியலிடப்பட்டுள்ளது.
கரன்சி பலம்: ஏற்றுமதிக்கான தேவையை உலகளவில் அதிகரிப்பதன் மூலம் ஒரு நாட்டின் வருவாய் உயரும். இது, நாணயத்துக்கான தேவையை அதிகரிக்கும் என்பதுடன் அதன் மதிப்பையும் சர்வதேச அளவில் உயர்த்தும்.
- rajanpalanikumar.a@hindutamil.co.in