Published : 22 Jan 2024 08:13 AM
Last Updated : 22 Jan 2024 08:13 AM

ராக்கெட் நாயகர்கள் | ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ நிறுவனர்கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் - மொய்ன் பேட்டி

அக்னிகுல் நிறுவனர்கள் மொய்ன் மற்றும் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 08

தரமணியில் அமைந்திருக்கிறது ஐஐடி மெட்ராஸ் ஆய்வுப் பூங்கா. இந்தியாவிலேயே பல்கலைக்கழகத்துடன் இணைந்த முதல் ஆய்வுப் பூங்கா இதுதான். நவீன தரத்திலான கட்டிடங்கள். ரம்மியமான சூழல். இந்தியாவின் மிகச் சிறந்த தொழில்நுட்ப மூளைகளை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

இயந்திரவியல், ஐடி, மின்னணுவியல், உயிரி தொழில்நுட்பம் என பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம், மின்வாகனத் தயாரிப்பு, செமிகண்டக்டர் தயாரிப்பு என 230-க்கும் மேற்பட்ட ‘டீப்டெக்’ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ இங்குதான் இருக்கிறது. முன்பு, விண்வெளி துறை என்பது முற்றிலும் அரசுவசமே இருந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்களும் அதில் அனுமதிக்கப்படுகின்றன. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் கால் பதிப்பது என்பது எளிதானதல்ல. பெரும் முதலீடு மட்டுமல்ல, பெரும் தொழில்நுட்ப அறிவையும் கோரக் கூடிய துறை அது. எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’, அமேசான் ஜெஃப் பிசோஸின் ‘ஃப்ளூ ஆர்ஜின்’ போன்ற ஒரு சில பெரிய அளவிலான தனியார் நிறுவனங்களே அதில் காலூன்றி உள்ளன.

இந்தச் சூழலில்தான் ஸ்ரீநாத் ரவிச்சந்திரனும் (38) மொய்னும் (33) கவனம் ஈர்க்கிறார்கள். இந்தியாவில், ராக்கெட் என்றாலே இஸ்ரோ என்று அறியப்பட்டு வருகிற நிலையில், இவ்விருவரும், தங்கள் அக்னிகுல் ஸ்டார்ட்அப் மூலம் சொந்தமாக ராக்கெட்டை உருவாக்கி வருகின்றனர். இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இன்னும் அழுத்திச் சொன்னால், இருவரும் சென்னைவாசிகள்.

தற்போது இந்திய விண்வெளி துறையினர் மட்டுமல்ல, பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், இவ்விருவரை உற்றுநோக்குகின்றன. காரணம், வரும் பிப்ரவரி மாதத்தில் இவர்கள் தங்கள் ராக்கெட்டை விண்ணில் ஏவி சோதனை செய்ய உள்ளனர். இந்தச் சோதனை வெற்றிபெறும்பட்சத்தில், அது இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பில் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

இந்தத் தருணத்தில், ஒரு மாலை வேளையில், அவ்விருவரையும் ஐஐடி ஆய்வுப் பூங்காவில் சந்தித்து உரையாடினேன்…

ராக்கெட் தயாரிப்பில் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் இருவருக்கும் எப்படி வந்தது?

ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் (தலைமை நிர்வாக அதிகாரி): அம்மா இயற்பியல் ஆசிரியை. இதனால், சிறுவயதிலேயே எனக்கு விண்வெளி, ராக்கெட் சார்ந்து ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் சேர்ந்தேன். கல்லூரி முடித்த பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. எனக்கு அந்த வேலை நிறைவு அளிக்கவில்லை. அந்த சமயத்தில் நிதித் துறை சார்ந்த படிப்புகள் பிரபலமாக இருந்தன. அதன் தாக்கத்தில் நானும், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘நிதி பொறியியல்’ படிப்பில் சேர்ந்தேன்.

அதன் பிறகு வால்ஸ்ட்ரீட்டில் வேலை கிடைத்தது. நல்ல வேலை. நல்ல ஊதியம். ஆனால், மீண்டும் ஏதோவொரு நிறைவின்மையை உணர்ந்தேன். என் ஆழ்மனம் விண்வெளி குறித்தும் ராக்கெட் குறித்தும் சிந்தித்துக் கொண்டு இருந்தது.

ஒரு கட்டத்தில் ‘சரி, ஆனது ஆகட்டும். ஆழ்மனதின் குரலுக்கு செவிகொடுப்போம்’ என்று வேலையைவிட்டுவிட்டு அமெரிக்க இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் ‘ஏரோ ஸ்பேஸ்’ பொறியியலில் சேர்ந்தேன். அப்போதுதான் அமெரிக்காவில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உட்பட விண்வெளி சார்ந்த நிறுவனங்கள் கவனம் பெற ஆரம்பித்திருந்தன. நானும் அமெரிக்க விண்வெளிச் செயல்பாட்டை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.முக்கியமான புரிதல்கள் எனக்குக் கிடைத்தன.

தொலைதொடர்பு, வரைபட உருவாக்கம் என பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டுக்கு செயற்கைக்கோள்களை தயாரித்து கையில் வைத்திருக்கின்றன. ஆனால், அவற்றை விண்வெளிக்கு அனுப்ப போதிய அளவில் ராக்கெட்டுகள் இல்லை. இதை இப்படி புரிந்துகொள்ளலாம். ராக்கெட் என்பது பேருந்து மாதிரி என்று வைத்துகொள்ளுங்கள். பேருந்து முழுமையாக நிரம்பிய பிறகுதான் அதை எடுப்பார்கள். அப்படித்தான் ராக்கெட்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் செயற்கைக்கோள்கள் வந்த பிறகே, ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதனால், செயற்கைக் கோளை அனுப்ப நிறுவனங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.

அப்போது எனக்குத் தோன்றியது: சிறிய செயற்கைக்கோள்களை ஏற்றிச் செல்லும்வகையில் சிறிய ரக ராக்கெட் இருந்தால், இந்தக் காத்திருப்பு நேரம் குறையும் அல்லவா… ஏன் நாம் அப்படி ஒரு ராக்கெட்டை உருவாக்கக் கூடாது…

நானும் மொய்னும் கிரிக்கெட் நண்பர்கள். நான் அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் சென்னைக்கு வரும் சமயங்களில் நாங்கள் ராயப்பேட்டை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போது மொயினிடம் என்னுடையை ராக்கெட் தயாரிப்பு ஐடியாவைப் பகிர்ந்தேன்.

மொய்ன் (தலைமை செயல்பாட்டு அதிகாரி): நான் கடைசி பெஞ்ச் மாணவன். படிப்பை விடவும் விளையாட்டில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. பெற்றோர்களின் வலியுறுத்தலால், சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் ஏரோனாட்டிக்கல் பொறியியலில் சேர்ந்தேன். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்று எம்பிஏ படித்துவிட்டு அங்கேயே ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலையில் இணைந்தேன். அந்த சமயத்தில் என்னுடைய அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.

அப்பாவை கவனித்துக்கொள்ள, வேலையைவிட்டுவிட்டு நான் சென்னை திரும்ப வேண்டியதாக இருந்தது. பிறகு இங்கு ஒரு அழகுசாதன நிறுவனத்தைத் தொடங்கி நடத்த ஆரம்பித்தேன். ஆனால், ஏதாவது அர்த்தப்பூர்வமாக செய்ய வேண்டும் என்று மனம் ஏங்கியது. அப்போதுதான் ராக்கெட் தயாரிப்பது தொடர்பான ஐடியாவை ஸ்ரீநாத் என்னிடம் சொன்னார். நான் ஏரோனாட்டிகல் படித்திருந்ததால், அவரது ஐடியாவை என்னால் முழுமையாக உள்வாங்க முடிந்தது. சேர்ந்து செயல்பட முடிவு செய்தோம்.

ஐடியா உதயமாயிற்று. எப்படி செயல்படுத்தினீர்கள்?

ஸ்ரீநாத்: விண்வெளித் துறையில் இருந்த தொழில் வாய்ப்பு எங்களுக்கு பிடிபட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் செய்ய வேண்டியது குறித்து எங்களுக்கு போதிய தெளிவு இல்லை. ஐஐடி பேராசிரியர்களுடன் உரையாடினால் தெளிவு கிடைக்கும் என்று நம்பினோம்.

இந்தியாவில் இத்துறை சார்ந்த முக்கியமான ஐஐடி பேராசிரியர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று அவர்களுக்கு எங்கள் ஐடியாவை அனுப்பினோம். நாங்கள் இருவரும் ஐஐடியில் படித்தவர்கள் கிடையாது. நாங்கள் வேலை பார்த்ததும் விண்வெளி துறை கிடையாது. இதனால், ‘இவர்கள் ராக்கெட் செய்யப்போகிறார்களா’ என்று பேராசிரியர்களுக்குக் குழப்பம் இருந்திருக்கலாம். எங்கிருந்தும் நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தோம். அப்போதுதான் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் சத்யநாராயண் சக்ரவர்த்தியிடமிருந்து பதில் வந்தது. நேரில் வாருங்கள் பேசலாம் என்றார். அவருக்கு எங்கள் ஐடியா பிடித்திருந்தது. அதில் தொடர்ந்து செயல்பட ஊக்கப்படுத்திய அவர், தொழில்நுட்பரீதியாக எங்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார்.

ராக்கெட் தயாரிப்பு என்பது மிகுந்த முதலீட்டைக் கோரக்கூடியது. தனியாக ஆரம்பிப்பதைவிடவும் ஐஐடி போன்ற அமைப்புடன் சேர்ந்து ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை உணர்ந்தோம். பேராசிரியர் சத்யநாராயண் சக்ரவர்த்தியை இணை நிறுவனராக சேர்த்து, 2017-ம் ஆண்டில் டிசம்பரில் ஐஐடி மெட்ராஸில் அக்னிகுல் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைப் பதிவு செய்தோம்.

பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி எங்களுக்கு இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் உருவாக்கத்தின் முதல் திட்ட இயக்குநர் பெருமாளை அறிமுகப்படுத்தினார். அத்துறையில் மிகப் பெரிய ஆளுமை அவர். ராக்கெட் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை அவர் எங்களுக்கு வழங்கினார். பெரும் நம்பிக்கையுடன் முன்னகர ஆரம்பித்தோம்.

இதுவரையில் உங்கள் ஸ்டார்ட்அப் ரூ.400 கோடி நிதி திரட்டி இருக்கிறது. முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் உங்கள் ஸ்டார்ட்அப்பை எப்படிப் பார்த்தார்கள்?

மொய்ன்: ஆமாம். நிதி திரட்டுதல் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் விண்வெளி துறை குறித்தும் அதில் உள்ள பிசினஸ் வாய்ப்புகள் குறித்தும் போதிய புரிதல் கிடையாது. 500 முதலீட்டாளர்களையாவது சந்தித்திருப்போம். எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இப்படியே சென்றுகொண்டிருந்த சமயத்தில், ஒரு நிகழ்ச்சியில் முதலீட்டாளர் ஒருவரைச் சந்தித்தோம். அவருக்கு இத்துறையில் உள்ள தொழில் வாய்ப்புகளை பற்றி தெரிந்திருந்தது. இதனால், அவரிடம் எங்கள் திட்டத்தை விளக்குவது எளிதாக இருந்தது. தவிர, அந்த சமயத்தில் நாங்கள் இன்ஜின் தயாரித்து அதை வெற்றிகரமாக சோதித்திருந்தோம். இதனால், அவர் முதலீடு செய்ய சம்மதித்தார்.

2018-ல் ரூ.3 கோடி முதலீடு செய்தார். இந்தத் தொகை மிகவும் சிறியது என்றாலும், அந்த முதலீடு எங்கள் நிறுவனச் செயல்பாட்டை வலுப்படுத்த பெரும் உதவியாக அமைந்தது. அவர் முதலீடு செய்த பிறகு மற்ற முதலீட்டாளர்களை அணுகுவது எளிதானது.

இந்தியாவிலேயே முதன்முறையாக, நீங்கள்தான் 3டி பிரிண்டிங் மூலம் ராக்கெட் இன்ஜின் உருவாக்கியுள்ளீர்கள். எப்படி 3டி பிரிண்டிங் நோக்கி நகர்ந்தீர்கள்?

மொய்ன்: இன்ஜின் தயாரிப்பது என்பது மிகவும் சிக்கலான வேலை. அதில் சிறிய அளவிலான பாகங்கள் அதிகம் உண்டு. ஏதாவது ஒன்றில் பிரச்சினை என்றாலும், மொத்த இன்ஜினையும் குப்பையில்தான் போட வேண்டும். பணமும் நேரமும் விரயம். இந்த சமயத்தில்தான், ஐஐடி மெட்ராஸில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் அறிமுகமானது. அதைப் பயன்படுத்தி ஏனைய துறையினர் தயாரிப்பு மேற்கொண்டனர். நாமும் 3டி பிரிண்டிங் மூலம் ராக்கெட் இன்ஜின் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது. சோதனை முயற்சியாக, இன்ஜினின் சிறிய பாகங்களை 3டி பிரிண்டிங்கில் செய்தோம். வெற்றிகரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து 2019 ஜூலையில் மொத்த இன்ஜினையும் 3டி பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கினோம். இது எங்களுக்கு மிகப் பெரும் பாய்ச்சலாக அமைந்தது.

ராக்கெட் தயாரிப்பைப் பொறுத்தவரையில் இன்ஜினை உருவாக்க மட்டும் 9 மாதங்கள் வரை ஆகும். ஆனால், 3டி பிரிண்டிங் மூலம் நம்மால் வாரத்துக்கு 2 இன்ஜின்கள் உருவாக்க முடியும். அதில் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டியதால், நிறைய முதலீட்டாளர்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். ஆனந்த் மஹிந்திரா உட்பட முக்கிய ஆளுமைகளிடமிருந்து நிதி கிடைத்தது.

தற்போது இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உங்களுக்கென்று தனியே ஏவுதளத்தை ஒதுக்கியுள்ளது. எப்படி இது சாத்தியமானது?

ஸ்ரீநாத்: எங்கள் பயணத்தில் திருப்புமுனை காலகட்டம் என்றால் அது 2020 மே மாதம் என்று சொல்லலாம். மத்திய அரசு சுயசார்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆத்மநிர்பார் திட்டத்தை அறிவித்தது. இனி, விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டது. இதற்கென்று ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACE) என்று தனிக் குழு உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி எங்களுக்கு உற்சாகம் அளித்தது. ஏனென்றால், நாங்கள் ராக்கெட் தயாரிப்பது சர்வதேச சந்தைக்கானது என்றாலும், இந்தியாவில் எங்கள் ராக்கெட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்ற குழப்பம் இருந்தது. மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவில் எங்கள் நிறுவனத்தை வலுவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

செய்தி வெளியான மறுதினமே, அப்போது இஸ்ரோ தலைவராக இருந்த சிவனுக்கு, எங்கள் ஸ்டார்ட்அப் குறித்து மின்னஞ்சல் அனுப்பினோம். அவர் தரப்பிடமிருந்து, இரண்டே நாட்களில் பதில் வந்தது. எங்கள் இன்ஜினை இஸ்ரோ தளத்தில் வைத்து சோதிக்கலாமா என்று கேட்டோம். அதற்கும் இஸ்ரோ சம்மதித்தது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி எங்கள் ராக்கெட்டை பார்வையிட்டு, எங்களைப் பாராட்டினார். நவம்பர் 2022-ல் இஸ்ரோவில் எங்கள் இன்ஜினை சோதித்தோம். அதன் தொடர்ச்சியாக, எங்களுக்கென்று சொந்த ஏவுதளத்தை இஸ்ரோ ஒதுக்கியது. பொதுவாக, இஸ்ரோவில் வெளிநிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முதல்முறையாக எங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. எங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்த பெரிய கவுரவமாக அதைப் பார்க்கிறோம். உண்மையில், பொறுமையும், சவாலான காலகட்டத்தில் மனம் தளராமல் தொடர்ந்து செயல்படுவதும் அவசியம். அதன் வழியேதான், இவை எல்லாம் சாத்தியமாகி இருக்கின்றன!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x