நீண்ட கால மூலதன ஆதாய வரி: இலக்கை அடைய கூடுதல் சேமிப்பு வேண்டும்

நீண்ட கால மூலதன ஆதாய வரி: இலக்கை அடைய கூடுதல் சேமிப்பு வேண்டும்
Updated on
2 min read

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் பட்சத்தில், ஒருவருடைய ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் இலக்கினை அடிப்படையாக வைத்து பண்ட்களை தேர்வு செய்துகொள்ளலாம். நாம் நிர்ணயம் செய்த தொகை கிடைத்த பிறகு வரி ஏதும் இல்லாமல் அந்த முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த வசதி இனி நமக்கு கிடையாது.

பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நிர்ணயம் செய்திருக்கும் தொகை, நம் முதலீடுகளின் மூலம் வந்தாலும், கிடைக்கும் தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்தியாக வேண்டும். ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும் பட்சத்தில் 10.4 சதவீத வரி செலுத்தியாக வேண்டும். அதனால் நாம் வழக்கமாக சேமிக்கும் தொகையை விட கூடுதலாக சேமிக்கும் பட்சத்தில்தான் வரி போக, நாம் இலக்காக நிர்ணயம் செய்த தொகை கிடைக்கும். இல்லை எனில் கூடுதல் காலத்துக்கு முதலீட்டினை தொடர வேண்டி இருக்கும். எளிமையான உதாரணத்துடன் பார்க்கும் போது இவை உங்களுக்கு புரியும்.

உதாரணத்துக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் தேவை என்னும் இலக்கில் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள். இந்த தொகை கிடைக்க வேண்டும் என்றால் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த பண்ட்களில் அதிகபட்சம் 23 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்றால் சராசரியாக 12 சதவீதம் வருமானம் என்று மட்டுமே வைத்துக்கொள்வோம்.

15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் கிடைக்க வேண்டும் என்றால் மாதம் ரூ 20,459 (12% வட்டி என கொண்டால்) முதலீடு செய்ய வேண்டும். 15-ம் ஆண்டில் ஒரு கோடி உங்கள் மியூச்சுவல் பண்ட்களில் இருந்தால் கூட அந்த தொகையை நீங்கள் எடுக்க முடியாது. கிடைக்கும் தொகைக்கு 10.4 சதவீத வரி செலுத்த வேண்டும்.

தற்போது இருக்கும் ஒரு கோடி ரூபாயில் நீங்கள் செய்திருக்கும் முதலீடு ரூ.34.4 லட்சமாக இருக்கும். இந்த தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இந்த முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் ஆதாய தொகை ரூ.65.6 லட்சத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் 64.6 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்தினால் (10.4%) போதும். இந்த தொகைக்கு ரூ.6.7 லட்சம் வரி செலுத்த வேண்டும். அப்படியானால் ஒரு கோடி ரூபாய் இலக்கு நிர்ணம் செய்திருந்தால் வரி போக ரூ.93.3 லட்சம் மட்டுமே நமக்கு கிடைக்கும். கூடுதலாக முதலீடு செய்வதன் மூலமே நம்முடைய இலக்கினை அடைய முடியும்.

ஏற்கெனவே நாம் கணித்தது போல 12 சதவீத வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொண்டால் கூடுதலாக ரூ.1,375 முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே ரூ.20,459 முதலீடு செய்தோம். வரி போக ஒரு கோடி கிடைக்க வேண்டும் என்றால் மாதாமாதம் ரூ.21,834 முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய இலக்கை நெருங்கும் ஆண்டு மிகவும் முக்கியமானதாகும்.

15 ஆண்டில் சந்தையில் எந்தவிதமான வருமானமும் இல்லை எனில் தேவையான ஒரு கோடி கிடைக்காது. அதனால் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டி இருக்கும். இல்லை எனில் சந்தையில் அதிக காலம் முதலீட்டினை தொடர வேண்டி இருக்கும்.

நீங்கள் ஆரம்பத்தில் செய்திருக்கும் பண்டினையே 15 ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீடு செய்திருக்கும் பண்ட்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். சமயங்களில் நாம் எதிர்பார்த்த வருமானத்தை அந்த பண்ட்கள் கொடுக்கத் தவறலாம். அதேபோல இலக்கினை நிர்ணயம் செய்த பிறகு கூடுதல் தொகையை முதலீடு செய்வதற்கு தயராக இருங்கள்.

அப்போதுதான் முதலீடுகள் போதுமான வருமானத்தை கொடுக்காத போதிலும் நம்முடைய இலக்கினை அடைய முடியும். நீண்ட கால இலக்கினை அடைவதற்காக சம்பள உயர்வு, போனஸ் போன்றவற்றை முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in