ஏன் நம்மால் சர்வதேச பிராண்டுகளை உருவாக்க முடியவில்லை? - தோல்பொருள் மற்றும் காலணி ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர் இரா. செல்வம் ஐஏஎஸ் பேட்டி

ஏன் நம்மால் சர்வதேச பிராண்டுகளை உருவாக்க முடியவில்லை? - தோல்பொருள் மற்றும் காலணி ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர் இரா. செல்வம் ஐஏஎஸ் பேட்டி
Updated on
3 min read

ஷூ - டவுன், பெங் டே, பாவோ சென், ஹாங் பூ… மிரள வேண்டாம். காலணி தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நான்கு நிறுவனங்கள் இவை. நைக், கிராக்ஸ், அடிடாஸ் என சர்வதேச காலணி பிராண்டுகளை இந்நிறுவனங்கள்தான் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கின்றன. கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நான்கு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஆலையைக் கொண்டுள்ளன.

பொதுவாக, தொழில்துறை குறித்து பேசுகையில், வாகனம், மின்னணு ஆகிய துறைகள்தான் பிரதானப்படுத்தப்படுகின்றன. தோல் மற்றும் காலணித் துறை நம் கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், இந்தியாவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் தோல் மற்றும் காலணிப் பொருட்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அத்துறை மூலம் ஆண்டுக்கு 5.5 பில்லியன் டாலர் (ரூ.45,000 கோடி) அந்நிய செலாவணி இந்தியாவுக்கு வருகிறது.

தவிர, இந்தியாவில் வேறெந்தத் தொழிற்சாலைகளைவிடவும் இத்தொழிற்சாலைகளின் வழியாகவே அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இத்துறையில் 44 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதிலும் குறிப்பாக, வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள். மற்றொரு முக்கியமான விஷயம், தோல் பொருள் மற்றும் காலணி தயாரிப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

இந்தியாவின் மொத்த காலணி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 40 சதவீதம். இத்துறையில், சீனாவுக்கு மாற்றான களமாக சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டைப் பார்க்கின்றன. இந்தச் சூழலில், தோல்பொருள் ஏற்றுமதிக் கழகம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் முன்னெடுப்பில், ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய சர்வதேச தோல் மற்றும் காலணி பொருட்கள், அதற்கான உற்பத்தி இயந்திரங்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.

இத்துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும், கொள்கை உருவாக்கத்திலும் முக்கியப் பங்களிப்பு ஆற்றிவரும் தோல் பொருள் மற்றும் காலணி ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநராக உள்ளார் இரா.செல்வம் ஐஏஎஸ். மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இமாச்சல பிரதேசத்தில் உலக வளர்ச்சித் துறையில் பொறுப்பில் இருந்தபோது, பொதுவெளியில் கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்னும் சூழலை உருவாக்கியதற்காக பிரதமரின் விருதை பெற்றவர். மத்திய உள்துறையிலும் உரம் மற்றும் ரசாயன துறையிலும் பணியாற்றிய காலகட்டத்தில் பல முக்கியமான கொள்கை முடிவுகளில் பங்காற்றிய இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுத் துறை மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்காட்சியை முன்னிட்டு, அவருடன் உரையாடினேன்.

தோல்பொருள் ஏற்றுமதிக் கழகம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் கதை என்ன? - உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கால்நடைகளைக் கொண்ட நாடு இந்தியாதான். இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
ஆரம்ப காலகட்டத்தில், கால்நடைகளின் தோல் கழிவாகவே பார்க்கப்பட்டது.

இதனால், இறைச்சிக்காக அவை அறுக்கப்படும்போது, அவற்றின் தோல் பயன்படுத்தப்படாமல் அப்படியே வீணாக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் தோல் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. காரணம், பிரிட்டிஷார் கால்நடைகளின் தோலை குதிரைக்கான சேணமாகவும், பூட்ஸ் தயாரிப்புக்கும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படலாயின.

சுதந்திரத்திற்குப்பின், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்தச் சூழலில், எந்தெந்தத் துறைகள் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என்று அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான அரசு பரிசீலிக்க ஆரம்பித்தது.

அப்படியாக, தோல் துறையில் உள்ள பொருளாதார வாய்ப்புகளை ஆய்வு செய்ய சந்தானம் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. தோலை வெறும் கச்சாப் பொருளாக ஏற்றுமதி செய்யாமல், மதிப்புக் கூட்டி - தோலைக் கொண்டு காலணி, கைப் பை, கையுறை, ஆடைகள் ஆகிய தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரித்து - ஏற்றுமதி செய்தால் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று அக்குழு பரிந்துரை செய்தது.

இதன் நீட்சியாக, 1970 முதல் தோலை கச்சாப் பொருளாக ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் தோல் துறை சார்ந்து நிறுவனங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தச் சூழலில் இந்தத் துறையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் ஏற்றுமதியை மேம்படுத்தவும் தோல் மற்றும் காலணி பொருட்களின் ஏற்றுமதிக் கழகம் 1984-ல் உருவாக்கப்பட்டது.

சுற்றுச்சூழலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக தோல் துறை பார்க்கப்படுவதுண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து தோல் துறையில் எத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? - முன்பு, தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர், நிலத்தில் கலப்பது மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் தொழில்நுட்பங்கள் தோல் துறையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பங்கள், கழிவு நீர், நிலத்தில் கலக்கப்படுவதை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளன. தவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தோல் தொழிற்சாலைகளை நேரடியாக கண்காணிக்கின்றன.

50 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இந்தியாவும் தோல் ஏற்றுமதியில் ஒரே நிலையில் இருந்தன. இரண்டு நாடுகளும், ஆண்டுக்கு தலா 1 பில்லியன் டாலர் மதிப்பில் தோல் பொருள்களை ஏற்றுமதி செய்தன. இன்று சீனா ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், இந்தியா 5 பில்லியன் டாலர் அளவிலேயே ஏற்றுமதி செய்கிறது. வியட்நாமை எடுத்துக்கொள்வோம். 2008-ல் அந்நாட்டின் தோல்பொருள்கள் ஏற்றுமதி 3 பில்லியன் டாலராக இருந்தது. இன்று அது 22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஏன் இந்தியாவால், அவ்விரு நாடுகளைப் போல் தோல் ஏற்றுமதியை பன்மடங்கு உயர்த்த முடியவில்லை?

தோல் துறை சார்ந்து மட்டும் இந்த விஷயத்தை நாம் அணுக முடியாது. 1970-க்குப் பிறகு சீனா அதன் பொருளாதாரக் கொள்கையில் முக்கியமான மாற்றங்களை முன்னெடுத்தது. அதன் வழியே சீனாவின் அனைத்து உற்பத்தித் துறைகளும் பெரும் வளர்ச்சி அடைந்தன. வியட்நாம் Plug and Play model என்று சொல்லப்படக்கூடிய, மிக எளிதாக தொழில்தொடங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கியது.

அதன் வழியே அங்கு தோல் துறை வளர்ச்சி பெற்றது. அவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில், தொழிற்சார் கட்டமைப்பில் இந்தியா பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம். காரணம், இந்தியாவில் தொழிற்சார் கொள்கைகளில் படிப்படியாகவே தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போது திறன் மேம்பாட்டுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த கால்நூற்றாண்டு இந்தியாவுக்கு உரியதாக இருக்கும்.

தோல் மற்றும் காலணித் துறையில் சர்வதேச நிறுவனங்களுக்கான தயாரிப்பு ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து ஏன் சர்வதேச அளவிலான பிராண்டுகள் உருவாகவில்லை?

நைக் நிறுவனம் அதன் புதிய காலணியை வெளியிடுகிறது என்றால், அதை முதல் நாளில் வாங்குவதற்கு அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தில் கி.மீ தூரத்துக்கு இளைஞர்கள் வரிசையில் காத்திருப்பர். காரணம், நைக் ஒவ்வொரு தயாரிப்பிலும் புதுமையைக் கொண்டுவருகிறது. அதை சர்வதேச அளவில் வலுவாக மார்க்கெட்டிங் செய்கிறது. அதற்கென்று பெரும்தொகை முதலீடு செய்கிறது.

சொல்லப்போனால், தோல் மற்றும் காலணி துறையில் சர்வதேச பிராண்ட் என்று சொல்லபடக்கூடியவை பெரும்பாலும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவை. ஏனென்றால், சர்வதேச அளவில் ஒரு தயாரிப்பை கொண்டு சேர்ப்பதற்கு பெரும் முதலீடும் வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பும் உலகளாவிய மார்க்கெட்டிங்கும் அவசியம்.

ஒட்டுமொத்த நாட்டின் மேம்பாடு வழியாகவே இது சாத்தியமாகும். பாண்டிச்சேரியைச் சேர்ந்த ‘ஹை-டிசைன்’ உலகப் புகழ் பெற்ற பிராண்ட் ஆகும். அதுபோன்று, சொந்தமாக பல சர்வதேச பிராண்டுகளை நாம் உருவாக்குவது மிகவும் அவசியம்.

இப்போது, ‘உலகத் தலைமையை நோக்கிய காலடி' என்ற பெயரில் நிகழ்வை நடத்துகிறீர்கள். வழக்கமான இந்திய சர்வதேச தோல்பொருள் கண்காட்சியிலிருந்து இது எந்த வகையில் மாறுபட்டது? - இது நோக்க அளவிலும் சந்தை அளவிலும் பிரம்மாண்டத்தைக் கொண்ட நிகழ்வாகும். தோல் பொருள், காலணி வடிவமைப்பு, இயந்திரங்கள், ரசாயனம் உள்ளிட்ட பிரிவுகளில் 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

சர்வதேச அளவில் முக்கியமான 30 வடிவமைப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தக் கண்காட்சியில் கையெழுத்தாகும். அடுத்த கால்நூற்றாண்டில் இத்துறையில் இந்தியா முதலிடத் தைக் கைப்பற்றுவதற்கான பெரும் தாவலின் தொடக்கமாக இந்நிகழ்வு அமையும்.

- riyas.ma@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in