

இந்திய பங்குச்சந்தை 2023-ம் ஆண்டில் 20% வரை ஏற்றத்தைக் கண்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் வருடத்துக்கு சராசரியாக சுமார் 17.2% வருமானத்தை கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, அதிக வட்டி, அதிக லாபம் என ஆசை வார்த்தைகளை கூறி வலை விரிக்கும் நிறுவனத்திடமும் தனி நபர்களிடமும் மக்கள் இன்னமும் பணத்தை பறிகொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையைமாற்றுவதற்கான முயற்சியில், எனக்கும் வாய்ப்பு கொடுத்த ‘இந்து தமிழ் திசை’நாளிதழுக்கு நன்றி. இனி பங்குச்சந்தையில் 2-ம் நிலை சந்தையில் நாமும் டீமேட் கணக்கு தொடங்கி, NSE, BSE ஸ்டாக் எக்ஸ்சேஞ் மூலம் பங்குகளை வாங்கி பணக்காரர் ஆகலாம். இதில் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
பங்குதாரர்களுக்கு பலன்: டிவிடெண்ட்: லாபத்தின் ஒரு பகுதிதான் டிவிடெண்ட். நாம் பங்குதாரராக இருக்கும் நிறுவனம், நல்ல லாபம் ஈட்டினால் அதில் ஒரு பகுதியை நம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். பொதுவாக வருடத்துக்கு ஒருமுறை, நிதியாண்டின் முடிவில், பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக டிவிடெண்ட் அறிவிக்கப்படலாம். அதாவது ஒரு பங்குக்கு ₹1 அல்லது ₹2 அல்லது ₹5, ₹10 கூட அறிவிக்கலாம். எடுத்துக்காட்டாக ₹2/- அறிவித்திருந்தால், நாம் 100 பங்குகள் வைத்திருந்தால், நம் வங்கி கணக்கில் 100 X 2 = ₹200/- வரவு வைக்கப்படும். நிறுவனத்தின் லாபத்தை பொருத்து இந்த டிவிடெண்ட் தொகை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.
பொதுவாக தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் கொடுத்து வரும் நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களாக பார்க்கப்படும். டிவிடெண்டை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யக்கூடாது. அதன் எதிர்கால வளர்ச்சியும் வலிமையாக இருக்க வேண்டும்.
போனஸ்: ஒரு நிறுவனம் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டும்போது, போனஸ் பங்குகள் கொடுக்கப்படலாம். டிவிடெண்ட் பணமாக வங்கியில் வரவு வைக்கப்படுவதைப்போல போனஸ் பங்குகள், உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் 1:1 போனஸ் கொடுத்தால், நாம் வைத்திருக்கும் 100 பங்குகளுக்கு இணையாக இன்னும் 100 பங்குகள் கிடைக்கும்.
போனஸ் ரேஷியோ என்பது ஒரு பங்குக்கு இரண்டு பங்கு இலவசம், இரண்டு பங்குக்கு ஒரு பங்கு இலவசம் என்றெல்லாம் மாறுபடலாம். வலிமையான நிறுவனங்கள் 2-3 வருடத்துக்கு ஒரு முறை போனஸ் கொடுக்கலாம். ஆனால் கட்டாயம் இல்லை. சில நல்ல நிறுவனங்கள் போனஸ் கொடுப்பதே இல்லை.
பங்கின் விலை கூடுதல்: நாம் ₹100 -க்கு வாங்கிய பங்கு ₹110 – 120 – 130 என்று கூடும் போதுதான், நாம் போட்ட முதலீட்டுக்கு வருமானம் வர ஆரம்பிக்கிறது. நாம் உருவாக்கும் ஃபோர்ட்போலியோவில் உள்ள நிறுவனங்கள் இவ்வாறு நல்ல லாபத்தைக் கொடுக்கும் போது, நாம் போட்ட முதலீடு வளர ஆரம்பிக்கிறது. ஒரு நிறுவனத்தின் விலை ஏற்றம் என்பது அதன் லாபத்தோடு நேரிடையாக தொடர்புடையது.
பங்குச்சந்தையில் வெற்றிகரமாக செயல்பட கவனத்தில் கொள்ளவேண்டிய விதிமுறைகள்:
1.உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்யவும்.
2.பணத்தை பகுதி பகுதியாக முதலீடு செய்யவும்
3.வெவ்வேறு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யவும்.
4.லாபத்துக்கு இலக்கு வைக்கவும்.
5.சொந்தமாக முடிவெடுக்க தகுதிபடுத்திக்கொள்ளவும்.
பங்குச்சந்தை பற்றிய அறியாமையால் ஏற்படும் பயம், பேராசையால் நல்ல பலன்கள் கிடைக்காமல் போகிறது. பங்குச்சந்தையில் பயணிக்க வேண்டிய சரியான பாதை எது என்பதற்கான நூல்கண்டின் ஒரு நுனியை இந்தத் தொடர் உங்கள் கையில் கொடுத்திருக்கிறது. இதில் இருந்து படிப்படியாக, பங்குச்சந்தை சார்ந்த கல்வியை தொடர்ந்து கற்று வெற்றி பெற வாழ்த்துகள்.
தொடர் நிறைவு பெற்றது..
- trarulrajhan@ectra.in