

கவுரவமான வேலை, கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் சிலர் அதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு நிறுவனத்துக்காக வேலை செய்வதைவிட, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியமாக இருக்கும். இதற்காக தன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து, இருக்கின்ற வேலையை உதறிவிட்டு, ஒரு தொழிலை தொடங்கி சாதனையும் படைப்பார்கள். அந்த வகையில் சி.ஏ. வேலையை உதறிவிட்டு சொந்தமாக துரித உணவகம் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.4.5 கோடி சம்பாதிக்கிறார் ஐஐஎம் பட்டதாரி பெண் திவ்யா ராவ்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் திவ்யா. குடும்ப நிதி நெருக்கடி காரணமாக விரும்பியதை சாப்பிட முடியாத நிலையை சந்தித்துள்ளார். நன்றாக படித்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே அவருக்கு தோன்றி உள்ளது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தினார்.கடின உழைப்பால் 21 வயதிலேயே பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பை முடித்து சாதனை படைத்தார். அதன் பிறகு புகழ்பெற்ற அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ படித்தார்.
ஐஐஎம் பாடதிட்டத்தில் உலகப் புகழ் பெற்ற மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி, ஸ்டார்பக்ஸ் உணவகங்கள் பற்றிய வெற்றிக் கதைகள் இடம்பெற்றிருந்தன. இதுபோன்ற உணவகங்களை இந்தியர்களால் நடத்த முடியாது என ஒரு பேராசிரியர் கூறியுள்ளார். அப்போது ஏன் முடியாது என்ற கேள்வி திவ்யாவுக்குள் எழுந்துள்ளது.
இதன் விளைவாக தென்னிந்திய உணவு வகைகளை உலகத் தரத்தில் உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது. ஆனாலும் எப்படி தொழிலை தொடங்குவது என்று அவருக்கு தெரியாததால் படிப்பை முடித்த கையோடு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
இந்த சூழ்நிலையில்தான் பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திர ராவை சந்தித்துள்ளார். ராவ் ஏற்கெனவே உணவுத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றிருந்தார். பல்வேறு ஓட்டல்களில் பணிபுரிந்திருக்கிறார்.
பிரபலமான லீ மெரிடியன் ஓட்டலிலும் கிளீனர் , காசாளர், மேலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த அனுபவத்தைக் கொண்டுநண்பர்கள் சிலருடன் இணைந்து தனியாக சாலையோர சிறு உணவகத்தை தொடங்கி உள்ளார் ராவ். ஆனால் வியாபாரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை.
இந்த தருணத்தில் ராவை சந்தித்த திவ்யா, நிதி நிர்வாகம் குறித்து சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். ஆனாலும் ராவின் ஓட்டல் தொழில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, நாம் இருவரும் இணைந்து புதிதாக சங்கிலி தொடர் உணவகத்தை தொடங்கலாம் என திவ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராவ்.
அப்போது ஒரு சிறந்த பட்டய கணக்காளராக திவ்யா பணியாற்றி வந்தபோதிலும், தன்னுடைய வாழ்நாள் லட்சியத்தை எட்டுவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடைய வேலையை விட்டுவிட்டு ஓட்டல் தொழிலில் கால் பதிக்க முடிவு செய்தார்.
ஆனால் “நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை சிஏ படிக்க வைத்தால், நீ சாலையோரம் இட்லி, தோசை விற்கப் போகிறாயா” என திவ்யாவின் தாய் கடிந்து கொண்டுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தாத திவ்யா, தனது கனவை நனவாக்க களமிறங்கினார்.
ராகவேந்திர ராவும், திவ்யாவும் இணைந்து கடந்த 2021-ல் பெங்களூருவில் ’ராமேஸ்வரம் கபே’ என்ற பெயரில் துரித உணவகத்தை தொடங்கினர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த ஊர் (ராமேஸ்வரம்) என்ற வகையிலும், தென்னிந்திய உணவு வகைகளை வழங்குவதாலும் தென்னிந்திய நகரின் பெயரை உணவகத்துக்கு வைத்துள்ளனர்.
சிறிய கடையில் தரமான பாரம்பரிய தென்னிந்திய சைவ உணவு வகைகளை வழங்கி வருகின்றனர். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் குறிப்பாக பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு நடுவே, 'தொழில் பங்குதாரர்களான நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது' என ராவ் திவ்யாவிடம் கேட்டுள்ளார்.
இதறகு திவ்யா சம்மதம் தெரிவித்ததையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது பெங்களூருவில் 4 கிளைகளை தொடங்கி உள்ளனர். ஒரு மாதத்துக்கு ரூ.4.5 கோடி என ஆண்டுக்கு ரூ.50 கோடி வருமானம் ஈட்டுகின்றனர். விரைவில் ஹைதராபாத், சென்னை என நாட்டின் பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
தனது கடின உழைப்பால் சிறந்த பெண் தொழில்முனைவோராக உருவெடுத்துள்ள திவ்யாவின் அனுபவங்கள், வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.