

வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வார அத்தியாயத்தை பெண்களுக்குஅர்பணிக்க விரும்புகிறேன். பெண்கள் பொருளாதார ரீதியாக எப்போதுதன்னிறைவு பெறுகிறார்களோ அப்போதுதான் அவர்கள் பெண் விடுதலையை முழுமையாக அடைந்ததாக கருதப்படும். அந்த வகையில் பெண்கள் வெயில், மழை என்று வெளியில் அலையாமல், வீட்டில் இருந்தபடியேபங்குச்சந்தையை கற்று உணர்ந்து, முறைப்படி முதலீடு செய்து பணத்தை பெருக்க முடியும்.
பங்குச்சந்தை என்பது கற்பதற்கு மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே கற்கும் வாய்ப்புகள் எல்லாம் வந்துவிட்டன. மேலும் வீட்டில் இருந்தே பங்குச்சந்தையை கையாளவும் முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், லேப்டாப், மொபைல் ஃபோன் என்று பங்குச்சந்தை உங்களுடனேயே நகர்ந்து செயல்படவும் வாய்ப்புள்ளது.
சந்தை என்றாலே வாங்குபவரும் விற்பர்களும் சந்தித்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு பரிமாற்றம் செய்யும் இடம் ஆகும். காய்கறி சந்தையில் காய்கறிகள் வியாபாரம் ஆகும். மீன் சந்தையில் மீன்கள் வியாபாரம் ஆகும். பங்குச்சந்தையில் பங்குகள் வியாபாரம் ஆகும்.
சந்தையில் வியாபாரம் ஆகும் காய்கறிகளை விசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். மீனவர்கள் கடல் மற்றும் மற்ற நீர்நிலைகளில் இருந்து மீன்களை பிடித்து வருகிறார்கள். அதுபோல பங்குகளை ஒரு நிறுவனம் உருவாக்குகிறது.
பிரைவேட் பிளேஸ்மென்ட்: கணேசன் என்பவர் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அவருக்கு சொந்தமானது. அவர் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும்போது பணத்தின் தேவை கூடுகிறது.
கணேசன், சங்கர் என்ப வரை பங்குதாரராக சேர்க்கும்போது, அவர் கொடுக்கும் முதலுக்கு ஏற்ப,கணேசன் அவருக்கு தனது நிறுவனத்தின் பங்குகளை வழங்குவார். இப்படிகணேசன் தேவைக்கு ஏற்ப தெரிந்தவர்களிடம் முதலீட்டைப் பெற்று, அதற்கேற்றவாறு பங்குகளை உருவாக்கி கொடுக்கலாம். இதை பிரைவேட் பிளேஸ்மென்ட் என்று அழைக்கிறோம்.
முதல்முறை பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) - தன்னுடைய நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக அதிக பணம் தேவைப்படும்போது, கணேசன், பொதுமக்களிடம் இருந்துகூட பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு பங்குகளை கொடுக்கலாம்.
ஒரு நிறுவனம் முதல் முறையாக தனது நிறுவன பங்குகளை, ஒரு குறிப்பிட்ட விலை வைத்து பொதுமக்களுக்கு கொடுப்பதை ஐ.பி.ஓ. (Initial Public Offering)என்கிறோம். அதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன.
பங்குச்சந்தையின் ஒழுங்குமுறை ஆணையத்திடம்(செபி)அனுமதி பெற்று, ஐ.பி.ஓ.வை நடத்திக் கொடுக்கும் லீட் மேனேஜர்கள் மூலம் இந்த நிகழ்வை நடத்த வேண்டும். இதில்தான் நீங்களும், நானும் விண்ணபித்து பங்குகளை வாங்க முடியும்.
கணேசன் நிறுவனம் 100 பங்குகளை வெளியிடும் வெளியிடும் நிலையில், விண்ணப்பித்தவர்களின் தேவை 200ஆக இருந்தால், பாதி பேருக்குதான் பங்குகள் கிடைக்கும். மீதி பேருக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும். இதை முதன்மை சந்தை என்றும் அழைப்போம் (Primary Market). பின்னர் அந்த பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.
இரண்டாம் நிலை சந்தை: பங்குகளை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அவற்றை விற்கவும் வாங்க நினைப்பவர்களையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் பங்குச்சந்தை . இதில்தான் நாம் திட்டமிட்டு நம்முடைய பணத்தைப் பெருக்க போகிறோம். பங்குச்சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் நேரிடையாக சந்தித்து வியாபாரம் செய்ய முடியமா? என்றால் முடியாது.
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமே முடியும்.இவர்களை தரகு நிறுவனங்கள் என்று அழைப்போம். சரியான வார்த்தை டிரேடிங் மெம்பர் (Trading Member)ஆகும். இவர்கள் பங்குகளை கைமாற்றி கொடுக்கும்நிறுவனங்களான, தேசிய பங்குச் சந்தை(NSE – National Stock Exchange) மற்றும்மும்பை பங்குச்சந்தை (BSE – BombayStock Exchange) ஆகியவற்றிடம் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
டீமேட் அக்கவுண்ட்: நீங்களும் நானும், இந்த தரகு நிறுவனங்களிடம்தான் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். இப்போது ஆன்லைன் மூலமும் எளிமையாக தொடங்கலாம். டீமேட் கணக்குக்கு அடையாள ஆவணம், முகவரி ஆவணம், வங்கி சேமிப்புக் கணக்கு அறிக்கை, புகைப்படம் ஆகியவை தேவைப்படும். தேவையான ஆவணங்கள். ஒரு டீமேட் கணக்கு தொடங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும். எப்படி உங்களுடைய சேமிப்பை மதிப்பு கூடக்கூடிய முதலீடாக மாற்ற வேண்டும் என்பதைஅடுத்த தொடரில் பாக்கலாம்.
அடுத்த வாரம் நிறைவு பெறும்..
- trarulrajhan@ectra.in