Published : 01 Jan 2024 06:03 AM
Last Updated : 01 Jan 2024 06:03 AM

தயக்கம் தவிர்! - ஃப்ரிகேட் இணை நிறுவனர் கார்த்திகேயன் பிரகாஷ் பேட்டி

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது ஃப்ரிகேட் (frigate). நான்கு இளைஞர்களால் 2021-ம் ஆண்டு தொடங்கப்
பட்ட ஸ்டார்ட்அப். கிளவுட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இத்தளம், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து உற்பத்தித் துறை சார்ந்த ஆர்டர்களைப் பெற்று, அதை இந்திய சிறு, குறு தயாரிப்பாளர்கள் மூலம் உருவாக்கித் தருகிறது. கார்த்திகேயன் பிரகாஷ் (29), ஃப்ரிகேட் நிறுவனர்களில் ஒருவர். 2015-ம் ஆண்டு பொறியியல் முடித்த சூட்டோடு, ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், அடுத்த மூன்றே ஆண்டுகளில், அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றுக்கு இணை நிறுவனர் ஆனார்.

தற்போது, அடுத்த பயணமாக ஃப்ரிகேட் நிறுவனத்தை நண்பர்களுடன் நடத்தி வருகிறார். பெரிய குடும்பப் பின்புலம் கிடையாது. நடுத்தர வர்க்கம்தான். கல்விக் கடன் பெற்றே கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்திய சமூகச் சூழலில், நடுத்தர வர்க்க குடும்பப் பின்புலத்திலிருந்து வருபவர்கள், வேலையை விட்டுவிலகி சொந்தமாக நிறுவனம் தொடங்குவது என்பது மிகுந்த சவாலுக்குரிய விஷயம். இத்தகைய சூழலில் கார்த்திகேயன் பிரகாஷின் பயணம் கவனம் ஈர்க்கிறது. அவருடன் உரையாடினேன்…

கார்த்திகேயன் பிரகாஷ்

தொழில்முனைவராக வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு வந்தது? - பள்ளியில் படிக்கும்போதே எனக்கு தொழில் முனைவு சிந்தனை உருவாகி விட்டது. என்னுடைய சொந்த ஊர் ஈரோடு. அப்பா மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு சென்று அப்பாவுக்கு உதவுவேன். அங்கு இருக்கும் சாதனங்களைக் கொண்டு நானே புதிய தயாரிப்புகளை உருவாக்கிப் பார்ப்பேன். இப்படியாக, புதிதாக ஒன்றை உருவாக்குவதில் சிறுவயதிலேயே எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு பொறியியல் சேர்ந்தேன். ஆனால், கல்லூரிப் படிப்பு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. காரணம், கல்லூரியில் எல்லாமே தியரியாக இருந்தது. எனக்கு நாம் படிப்பவற்றை நடைமுறைப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சூழல், நம் கல்வி முறையில் இல்லை. எனினும், என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன். கல்லூரிகளில் புராஜக்ட்டுகள் வெறும் காட்சிப்பொருட்களாக இருக்கின்றன, அவற்றை நாம் பயன்பாட்டுக்கொண்டு வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் முன்வைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக, எங்கள் கல்லூரியில், ஸ்டூடண்ட் இண்டஸ்ட்ரி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்கள், கல்லூரியில் உள்ள ஆய்வகத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளைஉருவாக்கலாம். நானும் சில மாணவர்களும் இதில் ஆர்வமுடன் ஈடுபட்டோம். ஆய்வகத்தில் எங்கள் எல்லைக்கு உட்பட்டு புதிய தயாரிப்புகளை உருவாக்கி அதை வெளியே சந்தைப்படுத்தினோம்.

கல்லூரி முடியும் தருவாயில், நண்பர்கள், நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டும் என்ற இலக்கில் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கோ ஒரு நிறுவனத்தில் வேலைபார்ப்பதைவிடவும் சொந்தமாக தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

கல்லூரி முடித்த பிறகு தொழில்முனைவு கனவை தொடர முடிந்ததா? - நம் சமூகத்தைப் பொறுத்த வரையில், சொந்தமாக தொழில் தொடங்குவதைவிடவும், யாரிடமாவது வேலை செய்வதைத்தான் முக்கியமானதாகக்் கருதுகிறது. வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் என் குடும்பத்திலிருந்து எனக்கு இருந்தது. இதனால், என்னால் கல்லூரி முடித்த உடனே என்னுடைய தொழில் முனைவுக் கனவை பின் தொடர முடியவில்லை.

சரி, முதலில் நம்மால் நல்ல நிறுவனத்தில் வேலை பெற முடியும் என்பதை நிரூபிப்போம். படிப்படியாக, நம் கனவை பின்தொடர்வோம் என்று முடிவு செய்தேன்.ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சிறிய நிறுவனம்தான். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதைவிடவும், சிறிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது நம் திறன்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அந்த நிறுவனத்தில் பணியாற்றியபோது உணர்ந்தேன்.

அங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், 2017-ம் ஆண்டு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு புதிய விஷயங்களை ஆர்வமாக முன்னெடுத்தேன். இதனால், என் மீது அந்நிறுவனத்தின் சிஇஓ-வுக்கு நல்ல அபிப்ராயம் உருவானது. “அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

நாம் இருவரும் இணைந்து அங்கு புதிய நிறுவனம் தொடங்கலாமா” என்று அவர் என்னிடம் கேட்டார். “நிறுவனம் தொடங்கும் அளவுக்கு என்னிடம் பணம் கிடையாதே” என்றேன். “பணத்தை நான் கவனித்துக்கொள்கிறேன். உன்னிடம் திறமை இருக்கிறது. பணத்தைவிடவும் அதுதான் மிகவும் முக்கியம் என்றார்.” அவரது வார்த்தைகள் எனக்கு பெரும் நம்பிக்கை ஊட்டின.

அவரும் நானும் இணைந்து அமெரிக்காவில் ரோபோடிக்ஸ், ஏஐ சார்ந்து டீப்டெக் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை தொடங்கினோம். அவர் நிதிசெயல்பாடுகளில் கவனம் செலுத்த, நான் 70 பேர் கொண்ட அந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 25.

கல்லூரி முடித்த மூன்றே ஆண்டுகளில் என்னுடைய தொழில்முனைவு கனவு நனவானது. ஒரு மேற்கொள் உண்டு. “நீங்கள் உங்கள் கனவை நோக்கி தீவிரமாக செயல் பட ஆரம்பித்தால், மொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு உதவும்.”

ஃப்ரிகேட் எப்படி உருவானது? - அது கரோனா சமயம், அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நிதி திரட்டுவதில் நாங்கள் தடுமாற்றத்தை எதிர்கொண்டோம். இந்தச் சூழலில், அந்நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன். அமெரிக்காவில் இருந்தபோது ஒரு விஷயம் எனக்கு புலப்பட்டது. இந்தியாவில் நிறைய சிறு, குறு தயாரிப்பாளர்கள் உள்ளனர். வெளிநாடுகளில் நிறைய தயாரிப்பு தேவை இருக்கிறது.

ஆனால், இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. இவ்விரு தரப்புகளை இணைக்கும் பாலம் இருந்தால், இந்திய தயாரிப்பாளர்களுக்கு நிறைய சர்வதேச ஆர்டர்கள் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

இது குறித்து லிங்க்டு இன் தளத்தில் தேடிக்கொண்டிருக்கும்போது திருச்சியைச் சேர்ந்த தமிழினியன் அவரது நண்பர்களுடன் இணைந்து இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டு வருவது தெரியவந்தது. அவரைத் தொடர்பு கொண்டேன். இருவரும் சந்தித்துப் பேசினோம். மறுநாளே நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்துவிட்டோம். 2021-ல் ஃப்ரிகேட் உருவானது.

இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? - நம் சமூகக் கட்டமைப்புக் காரணமாக, தோல்வியைக் கண்டு, அவமானத்தை கண்டு அஞ்சுகிறோம். இதனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நம்மிடம் தயக்கம் நிலவுகிறது. தயக்கத்தை உடைத்தால்தான் நாம் முன்னகர்ந்து செல்ல முடியும். சிலர் பெரிய கனவுடன் இருப்பார்கள். அதை நிறைவேற்ற காலம் வரும் என்று காத்திருப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், ஒன்றை செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், தாமதிக்காமல் உடனே செயலில் இறங்கிவிட வேண்டும். காலம் வரும் என்று காத்திருந்தால், கடைசி வரைக்கும் எதையும் செய்து முடிக்க முடியாமலேயே போய்விடக்கூடும்.

எனவே, நம் கனவை நோக்கிய பயணத்தை சின்னச் சின்னச் செயல்களின் வழியே தொடங்கிவிட வேண்டும். காலம்தானாக வந்துவிடாது. நம் செயல்கள் வழியாகத்தான் காலம் நம்மை வந்தடையும். இறுதியாக, நம் திறன்களை விற்க கற்றுக்கொள்ள வேண்டும். நம் திறன்கள் வழியாகவே நாம் நமக்கான உயரத்தை அடைய முடியும்!

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x