

நம்முடைய 5 வருட குழந்தை, ஒரு வருடகுழந்தையின் வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தால் கவலைப்படுவோம் அல்லவா? அதுவே நம் பண வளர்ச்சிக்கும் பொருந்தும். பணத்தை வளர்ப்பதற்கும் பல்வேறு வகையான ரிஸ்கை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முன்பு பங்குச் சந்தை முதலீட்டில் பயன்படுத்தப்படும் சில கலை சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம். Capital என்றால் முதலீடு என்று அர்த்தம். Capitalization என்பது அந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டை குறிக்கும்.
உதாரணமாக, சுரேஷ் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.அது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, ஒரு பங்கு ₹100-க்கு வியாபாரம் ஆகிறது. அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 50 என்று எடுத்துக்கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது, மொத்த பங்கான 50-ஐ, சந்தை மதிப்பான ₹100ஆல் பெருக்கினால் கிடைக்கும் ₹5000 ஆகும். இதைத்தான் மார்க்கெட் கேப் என்று சொல்கிறோம். இதன் அளவைப் பொருத்து அவற்றை வகைப்படுத்துவோம்.
பங்குச்சந்தையில் 2000-க்கும் அதிகமான நிறுவன பங்குகள் வியாபாரம் ஆகின்றன. இவற்றை ஒழுங்குமுறை ஆணையமான செபி மார்க்கெட் கேப் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. அதாவது பெரிய நிறுவனங்கள் (லார்ஜ்கேப்), நடுத்தர மதிப்புள்ள நிறுவனங்கள் (மிட்கேப்), குறைவான மதிப்புள்ள நிறுவனங்கள்(ஸ்மால் கேப்) என்று வகைப்படுத்துகிறது.
லார்ஜ் கேப் நிறுவனங்கள்: அதிக மதிப்புள்ள முதல் 100 நிறுவனங்களை லார்ஜ் கேப் என்று அழைக்கிறோம். இவற்றின் மார்க்கெட் சுமார் ₹20,000 கோடிக்கு மேல் இருக்கும். இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே நன்கு வளர்ந்து ஆலமரமாக இருப்பவை. வருடத்துக்கு வருடம் 10-15% என்ற மிதமான வளர்ச்சியை கொடுப்பவை. தொடர்ந்து லாபம் ஈட்டி டவிடென்ட் கொடுக்கும் வல்லமை படைத்தவை.
சந்தை வீழ்ச்சி அடையும்போது மெதுவாக இறங்கும். சந்தை மீளும்போது வலிமையாக எழும். அதிக நம்பகத்தன்மை கொண்ட இவற்றை புளூசிப் என்றும் அழைப்போம். இவற்றில் எல்லோருமே முதலீடு செய்யலாம். குறிப்பாக புதிதாக வருபவர்கள், லார்ஜ் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லது.
மிட் கேப் நிறுவனங்கள்: மார்க்கெட் கேப் வரிசையில் 101 முதல் 250 வரை உள்ள நிறுவனங்களை மிட் கேப் என்று அழைக்கிறோம். இவற்றின் மார்க்கெட் சுமார் ₹5,000 கோடி முதல் ₹20,000 கோடி வரை இருக்கும். இவையும் நன்கு வளர்ந்த நிறுவனங்கள்தான்.
லார்ஜ் கேப் நிறுவனங்களைவிட அதிக வளர்ச்சியை கொடுக்கக்கூடிய நிறுவனங்கள். சந்தை வீழ்ச்சி அடையும்போது, இந்த வகை பங்குகள் வேகமாக இறங்கலாம். சந்தை மீண்டும் எழும்போது, மெதுவாக ஏறலாம். ஆகவே இதில் கூடுதல் ரிஸ்க் உண்டு என்பதை உணர வேண்டும்.
ஸ்மால் கேப் நிறுவனங்கள்: மார்க்கெட் கேப் வரிசையில் 251-க்கு மேல் உள்ள நிறுவனங்களை ஸ்மால் கேப் என்று அழைக்கிறோம். இவற்றின் மார்க்கெட் சுமார் ₹5,000 கோடிக்கு குறைவாக இருக்கும். மிட்கேப் நிறுவனங்களை விட இவை அதிகமான வளர்ச்சியை கொடுக்கக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால் நீண்டகால டிராக் ரெக்கார்ட் இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் இவை வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். ஏற்றம் என்று வரும்போது மிகப்பெரிய ஏற்றத் தையும், இறக்கம் என்று வரும்போது மிகப் பெரிய இறக்கத்தையும் கொடுக்க வாய்ப்புள்ளது.
எனவே இதில் அதிக ரிஸ்க் உள்ளது. சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே, இந்த வகை பங்குகளில் முதலீடு செய்வது நல்லது. சந்தைக்கு புதிதாக வருபவர்களும் ரிஸ்க் குறைவாக எடுக்க நினைப்பவர்களும் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.
- trarulrajhan@ectra.in