செங்கடலில் பயணித்த சரக்குக் கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
செங்கடலில் பயணித்த சரக்குக் கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.

சர்வதேச விநியோக சங்கிலியில் மீண்டும் ஒரு நெருக்கடி

Published on

கடந்த அக்டோபர் 7-ம் தேதி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை தொடங்கியது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிற நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள கிளர்ச்சிப் படையான ஹவுதி, செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், சர்வதேச விநியோக கட்டமைப்பில் மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏமன், சவுதி அரேபியா, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் செங்கடலானது, சூயஸ் கால்வாய்க்கான நுழைவாயிலாக உள்ளது. உலகளாவிய விநியோகத்தில் 30 சதவீதம் செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியே நிகழ்கிறது. ஆசியா - ஐரோப்பா இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கான பிரதான வழித்தடம் இதுவாகும்.

கடந்த நவம்பர் மாதம் செங்கடல் வழியாக சென்ற இஸ்ரேல் சரக்கு கப்பலான கேலக்ஸி லீடரை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்களை அவர்கள் ட்ரோன்கள் மூலமும் ஏவுகணை மூலமும் தாக்கி வருகின்றனர். இதனால், பல சர்வதேச நிறுவனங்கள் செங்கடல் வழித்தடத்தின் வழியே சரக்குக் கப்பல்களை அனுப்புவதை நிறுத்திவருகின்றன. பிபி நிறுவனம் இவ்வழித்தடத்தின் வழியே கச்சா எண்ணெய் அனுப்புவதை நிறுத்தியுள்ளது. இதனால், உலகளாவிய விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2021 ஆம் ஆண்டில் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிச்சென்ற எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் குறுக்கே மாட்டிக் கொண்டது.

இதனால், மிகப் பெரும் விநியோக நெருக்கடி ஏற்பப்பட்டது.ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதுபோன்ற நெருக்கடி சூழல் உருவாகி இருக்கிறது. எம்.எஸ்.சி, மேர்ஸ்க், ஹபாக்-லாயிட், சி.எம்.ஏ சி.ஜி.எம் ஆகிய பெரிய சரக்கு கப்பல் நிறுவனங்கள் சூயஸ் கால்வாயைத் தவிர்ப்பதற்காக கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி திசைதிருப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரும் கப்பல்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்லும் நிலையில், பயண நாள் 10நாட்களிலிருந்து 16 நாட்கள் அதிகரிக்கும்.

இதனால்,கண்டெய்னர் சுழற்சியில் பற்றாக்குறை ஏற்படும். துறைமுகங்களிலும் நெரிசல் உருவாகும். விநியோக நெருக்கடியால் தயாரிப்புகள் பாதிக்கப்படும். அது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறும் அபாயம் இருக்கிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாதவரையில், ஹவுதி அமைப்பினர் செங்கடலில் தாக்குதலை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலைமை தொடரும்பட்சத்தில், அது சர்வதேச வர்த்தகத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

- somasmen@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in