

பணக்காரர் ஆவதற்கு இரண்டு வழிமுறைகளை சொல்லலாம்.
1. வெகு குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆவது.
2. படிப்படியாக முன்னுக்கு வந்து கோடீஸ்வரர் ஆவது.
பங்குச்சந்தையைப் பொருத்தவரையில் இந்த இரண்டில் எது சாத்தியம். படிப்படியாக முன்னுக்கு வருவது தான் சரியான வழிமுறை, நீண்டகாலம் தாக்குப்பிடித்து நிற்க முடியும். பங்குச் சந்தையில் வெகுகுறுகிய காலத்தில் என்று சொல்ல முடியாவிட்டாலும் சில சமயம் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்டும் வாய்ப்பும் வரலாம். உதாரணமாக, செப்டம்பர் 2023 -ல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகள் 30 ரூபாயிலிருந்து 45 ரூபாயாக உயர்ந்தது. ஒரே மாதத்தில் 50% உயர்வு. இந்தியன் ரினிவபுல் எனர்ஜி டிசம்பர் 2023-ல் ₹60-ல் இருந்து ₹120 -க்கு எகிறி, 100% லாபத்தைக் கொடுத்தது.
இதே மாதத்தில் எஸ்ஸார் ஷிப்பிங் ₹16/-ல் இருந்து ₹35/- க்கு ஏறி 100% மேலாக லாபத்தை கொடுத்துள்ளது. இதுவும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்காக பங்குச்சந்தை இதைப் போன்றே எப்போதும் லாபத்தைக் கொடுக்கும் என்று நினைக்கக்கூடாது. பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப் போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும். இதனால்தான், இன்னமும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஏறும் பங்குகள் இறங்கும். இறங்கும் பங்குகள் ஏறும். ஏறிய பங்குகள் தொடர்ந்து ஏறும். இறங்கிய பங்குகள் தொடர்ந்து இறங்கும். இதற்கான காரணங்களை அறிந்து, நமக்கு எவை ஏற்புடைய பங்குகள்என்பதை அறிந்து அவைகளை மட்டுமே வாங்க வேண்டும்.
எதற்காக பங்குச்சந்தை? பங்குகளை ஏன் வாங்கவேண்டும்? என்ற கேள்விக்கு பதில், ஒவ்வொரு குடும்பத்துக்கும், வெவ்வேறு வகையான பணத்தேவைகள் இருக்கும். பிள்ளைகளின் கல்வி செலவு, வீடு வாங்குதல், கார் வாங்குவது, நல்ல வசதியான வாழ்கை, 60வயதில் வருமானம் இல்லாதபோது, எல்லா செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டிய அளவு கணிசமான தொகை இருப்பது என்று தொடர்ந்து சொல்லலாம். ஆனால் எல்லா தேவைகளுக்கும் தேவையான பெரும் பணத்துக்கான விதையை இன்றே விதைக்க வேண்டும் அல்லவா? ஒவ்வொரு வீட்டிலும் மிக்சி, கிரைன்டர், வாஷிங் மெஷின் இருப்பதுபோல், கண்டிப்பாக ஒரு ஃபோர்ட்போலியோ இருக்க வேண்டும். நம் நிலைக்கு ஏற்ப. இந்த போர்ட்போலி யோவை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. Aggressive Portfolio – அதிக ரிஸ்க் போர்ட்போலியோ
2. Moderate Portfolio – மிதமான ரிஸ்க் போர்ட்போலியோ
3.Conservative Portfolio – குறைவான ரிஸ்க் போர்ட்போலியோ
இந்த 3 வகையான போரட்போலியோ என்றால் என்ன? யார் எதை தேர்வு செய்யலாம் என்றும் பார்ப்போம்.
1. அதிக ரிஸ்க் போர்ட்போலியோ: இதற்கான அர்த்தம், எனக்கு அதிக லாபம் வேண்டும். அதற்காக நான் இழப்பை சந்திக்கவும் தயார். இந்த வகையை யார் எடுக்கலாம்? குறைவான வயதில் இருப்பவர்கள். அதாவது 25-35 வயதில் இருப்பவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கலாம். சம்பாதிப்பதற்கான காலம் அதிகமாக உள்ளது. இழப்புகளை சரிகட்ட முடியும். இன்னொரு சாரார், ஏற்கெனவே நடைமுறை வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான சேமிப்பும், சொத்தும் உள்ளது என்றால், அதிக லாபத்துக்கான ரிஸ்கை எடுக்கலாம். அதிக லாபம் கொடுக்கும் சிறிய நிறுவன பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யலாம். குறைவான லாபம் தரும் பெரிய நிறுவனப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யலாம்.
2. மிதமான ரிஸ்க் போர்ட்போலியோ: இதற்கான அர்த்தம், நான் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறேன், அதற்கு ஏற்றார்போல் ஓரளவுக்கு கூடுதல் லாபம் வேண்டும். யார் இந்த வகை போர்ட்போலியோவை உருவாக்கலாம். தற்போது 35-45 வயதுக்குள் இருப்பவர்கள், குடும்ப பொறுப்புகள் கூடுதலாக இருப்பவர்கள். சேமித்த பணம் வளர வேண்டும். கூடவே சற்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
3. குறைவான ரிஸ்க் போர்ட்போலியோ: 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், சேமித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறைவான லாபம் வந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்த வகை போர்ட்போலியோவை உருவாக்கலாம். இந்த வகை போர்ட்போலியோ அதிக அளவில் லார்ஜ் கேப் பங்குகளை கொண்டிருக்கவேண்டும். நம் போர்ட்போலியோவில் முதலீடு செய்ய நினைக்கும், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவன பங்குகள் என்றால் என்ன என்று அடுத்த தொடரில் பார்க்கலாம்.
- trarulrajhan@ectra.in