

அந்த பள்ளியில் பிளஸ் டூ தேர்வுக்கு முன்பாக கடைசி நாள் வகுப்பு. வகுப்பாசிரியர் ஒவ்வொரு மாணவனையும் அவர்களின் வருங்கால லட்சியம் என்ன என்று கேட்டார். பல மாணவர்கள் டாக்டர், இன்ஜினீயர், ஜட்ஜ், கலெக்டர் உள்ளிட்ட பல பதவிகளை அடைய விரும்புவதாக தெரிவித்தனர். மஹாதேவனை கேட்டபோது அவன் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புவதாக தெரிவித்தான். ஆசிரியர் கிரிக்கெட்டில் என்னவாக விரும்புகிறாய் என்றும் அதற்கான காரணத்தையும் கேட்டார். மஹாதேவன் தான் ஒரு பவுலராக விரும்புவதாகவும், பவுலர்தான் அவுட் ஆகாமல் விளையாடமுடியும் என்றான். அதாவது பவுலருக்குதான் ரிஸ்க் கிடையாது என்றான். அவனுக்கு ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மேன் அடித்து ஆறு ரன் எடுத்தால் அது தனது குழுவுக்கு பெரிய ரிஸ்க் என்பது ஏனோ புரியவில்லை.
தற்போது மஹாதேவன் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பணியில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர். இன்றும்அவர் தனது சேமிப்பை வங்கி வைப்பு நிதி மற்றும் நிலையான வருமான பத்திரங்களில் (Fixed income securities) முதலீடு செய்கிறார். நிரந்தர வட்டியை வழங்கும் ஒப்பந்தங்களில் சேமிப்புக்கு எந்தவிதமான நஷ்டமும் உண்டாகாது என்பதுதான் அதற்குக் காரணம். நிரந்தர வருமான பத்திரங்கள் சந்தையில் வர்த்தகம் செய்யக்கூடியவையாகவோ அல்லது அவ்வாறு செய்ய இயலாததாகவோ இருக்கலாம். அரசு பத்திரங்கள், தனியார் நிறுவன பத்திரங்கள், ரிசர்வ் வங்கி பத்திரங்கள் போன்றவற்றை வர்த்தகம் செய்யலாம். வங்கி டெபாசிட்கள், கம்பெனி டெபாசிட்கள், போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள் போன்றவற்றை வர்த்தகம் செய்ய முடியாது.
பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றில் அதிக ரிஸ்க் என்பது உண்மையே. ஆனால் நிலையான வருமான பத்திரங்களில் எந்த ரிஸ்க்கும் கிடையாது என்ற புரிதல் சரியா? வங்கிகள் ரிசர்வ் வங்கியின் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதினாலும் வங்கி டெபாசிட்களுக்கு காப்பீடு உண்டு என்பதாலும் வங்கி டெபாசிட்களுக்கு ஆகச்சிறந்த பாதுகாப்பு உண்டு என்பது உண்மையே. அரசு வழங்கும் கடன் பத்திரங்களும் அதைவிட பாதுகாப்பு உடையதே. மற்ற தனியார் நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் அந்தளவு பாதுகாப்பு கிடையாது.
பணவீக்கத்தின் பாதிப்பு: பணத்தின் மதிப்பு அதனுடைய வாங்கும் திறனை பொறுத்தது. பணத்தின் வாங்கும் திறன் பணவீக்கத்தின் பாதிப்புக்கு உட்பட்டதே. எடுத்துக்காட்டாக சென்ற வருடம் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்தது. இதன் பொருள் சென்ற ஆண்டு ஒரு பொருளை நாம் நூறு ரூபாய்க்கு வாங்கி இருந்தால், இன்று அதே பொருளை வாங்குவதற்கு ரூ106.70 செலவு செய்ய வேண்டும். இது சராசரியாக எல்லா பொருள்களுக்குமானது. சில பொருள்கள் அதிகமாகவோ சில பொருள்கள் குறைவான விலையுடனோ இருக்கலாம். எனவே நிலையான வருமான பத்திரங்களில் பெறும் வட்டியில் பணவீக்கத்தை கழித்தால் மட்டுமே நமக்கு உண்மையான வட்டி தெரியும். எல்லா நிலையான வருமான பத்திரங்களின் முதலீட்டிலும் பணவீக்கத்தின் தாக்கம் உண்டு என்பதை புரிந்து செயல்படுவது நல்லது.
- எஸ் கல்யாணசுந்தரம், ஓய்வு பெற்ற வங்கியாளர், 1952kalsu@gmail.com