

பங்குச்சந்தை நீண்டகால அடிப்படையில் மேல்நோக்கியே நகர்கிறது என்று பார்த்தோம். அதேநேரம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், நல்ல நிறுவனமா, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பைக் வாங்க வேண்டுமானால், நான்கு நிறுவனங்களின் பைக்கைப் பற்றி விசாரிக்கிறோம். அதில் உள்ள நிறை குறைகள் மற்றும் அதன் விலை பற்றி அலசுகிறோம். சுமார் ஒரு லட்சம் கொடுத்து பைக் வாங்க இந்த அளவுக்கு நாம் மெனக்கெடுகிறோம். நம்ம பிள்ளையை ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால், நாம் நான்கு இடம் விசாரிக்கிறோம். நல்ல பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறோம்.
பிள்ளையின் எதிர்காலம் அல்லவா? ஒரு ஃபிரிட்ஜ், மிக்சி வாங்கவேண்டுமானால்கூட விசாரித்து நமக்கு திருப்தியாய் இருக்கும் நிறுவனத்தின் பொருளை வாங்குகிறோம். காய்கறி கடையில் கத்திரிக்காய் வாங்கினா பிஞ்சா இருக்கா என்று அழுத்தி பார்த்து வாங்கிறோம். வெண்டைக்காய் பிஞ்சா இருக்கா என்று உடைத்து பார்த்து வாங்குகிறோம். தேங்காய் முற்றி இருக்கா என்று தட்டி பார்த்து வாங்குகிறோம். இவை எல்லாம் வெறும் ₹50 - ₹100 கை காசு சம்பந்தப்பட்ட விஷயம். இப்படி வாழ்க்கையில் நாம் எதை வாங்குவதாக இருந்தாலும், நமக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்று பார்த்தே வாங்குகிறோம். ஆனால், நாம் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது மட்டும், யாரோ சொல்வதைக் கேட்டு முதலீடு செய்கிறோம்.
அதற்கு மாறாக நாம் பங்குச்சந்தையை பற்றி அறிந்துகொண்டு, நாம் முதலீடு செய்ய முடிவெடுக்கும் நிறுவனத்தை பற்றி சற்றே ஆராய்ந்து அதற்கு பிறகே முதலீடு செய்யலாம்.பங்குச் சந்தையில் மற்ற முதலீடுகளைவிட அதிக வருமானம் கிடைக்கிறது என்ற அடிப்படையில், நாம் முதலீடு செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இதில் அதிக ரிஸ்க் உள்ளது என்பதும் உண்மை. ஆகவேதான் பங்குச் சந்தையைப் பற்றி, கற்று உணர்ந்து முதலீடு செய்ய வேண்டும். ரிஸ்க்கை கையாள கற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு இதெல்லாம் தெரியாதே? அப்படி என்றால் நான் பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாதா? என்ற கேள்வி எழலாம். யாரும் பிறக்கும்போதே டாக்டராகவோ அல்லது இன்ஜினியராகவோ பிறப்பதில்லை. ஆர்வத்தின் அடிப்படையிலேயே, எந்தத் துறையில் ஈடுபடலாம் என்று விரும்பி தேர்ந்தெடுத்து படித்து சிறப்பாக செயல்படுகிறார்கள். அதைப்போலவே விருப்பம் உள்ள அனைவரும் பங்குச்சந்தையை எளிதாக கற்றுக்கொள்ளலாம். பங்குச்சந்தை பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. அவை
# ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டுமே பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியும்.
# அதிக பணம் உள்ளவர்கள் மட்டுமே, பங்குச்சந்தையில் ஈடுபட முடியும்.
# மெத்த படித்தவர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் ஈடுபட முடியும்.
இவையெல்லாம் பொய். பங்குச்சந்தையைப் பற்றி இப்போது நாம் தமிழில்தான் படித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கும் அது இப்போது எளிமையாக புரிந்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்து அதிக பணம் உள்ளவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடுவது உண்மைதான். உங்களிடம் ₹500/- இருந்தால் ஒரு விப்ரோ பங்கு, இரண்டு பேங்க் ஆப் பரோடா பங்கு, 3 அசோக் லேலண்ட் பங்கு, 4 ஐ டி எஃப் சி பங்கு, 5 செயில் பங்கு வாங்கலாம். மெத்தப் படித்தவர்கள், ரயில் வல்லுநராக இருக்கலாம், ஆனால் பங்குச்சந்தை என்று வரும்போது, அவர்களும் ஆவன்னாவில் ஆரம்பிக்க வேண்டும். இந்தக் கட்டுக்கதைகள் எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, அதிக வருமானம் வரக்கூடிய பங்குச்சந்தையை பற்றி கற்றுக் கொள்வோம். பங்குச்சந்தையில் 15 முதல் 20% வருமானம் வரக்கூடிய வாய்ப்பு உண்மைதான்.
இன்றைய நிலவரப்படி, கடந்த 9 மாதங்களில் நிஃப்டி இன்டெக்ஸ் 22.4%, (17154 - 20997) நிஃப்டி நெக்ஸ்ட் 50 இன்டெக்ஸ் 36.03%, (37594 - 44729) நிஃப்டி மிட் கேப் 100 இன்டெக்ஸ் 48.57% (30106 - 44729) 729 என்றால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். ஆனால், இதேபோன்று தான் அடுத்த ஒன்பது மாதத்துக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது. இதைப் போன்ற ஏற்றம் இருக்கலாம், இதைவிட குறைவாகவும் இருக்கலாம். இன்னும் மிக மிக குறைவாக கூட இருக்கலாம். ரிஸ்க் இருப்பது என்பது உண்மை. அதை எப்படி கையாள வேண்டும் என்பதைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் நாம் சாலையை கடப்பது கூட ரிஸ்க் தானே! ஆனால் கடந்து கொண்டு தான் இருக்கிறோம்? அதைப்போல பங்குச் சந்தை என்ற இந்த வாழ்க்கை கல்வியை கற்று, ரிஸ்கை வெற்றிகரமாக கையாண்டு, பணத்தை வளர்ப்போம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் நாமும் தெரிந்து செயல்படுவோமே.
- trarulrajhan@ectra.in