

ஸ்டார்ட்அப் நிறுவனச் செயல்பாட்டில் நிதி திரட்டுதல் என்பது மிக முக்கியமான அங்கம். நல்ல ஐடியாவை நிறுவனமாக மாற்றிய பிறகு, நிறுவனத்தை விரிவுபடுத்த நிதி தேவை. இத்தகைய சூழலில் ஏஞ்சல் இன்வெஸ்டார், வென்சர் கேபிடல் உள்ளிட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவது வழக்கம். அந்தவகையில் முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்அப் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், பொதுத் தளத்தில், ஸ்டார்ட்அப் தொழில்முனைவு செயல்பாடு குறித்து தெரிந்த அளவுக்கு, முதலீட்டாளர்களின் உலகம் பற்றி பரவலாக தெரிவதில்லை.
முதலீட்டாளர் என்பவர் யார், ஏன் அவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறார், ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன என்பனவற்றை தெரிந்துகொள்வது அவசியம். ஆரம்ப நிலையில் இருக்கும் தொழில்முனைவோருக்கு நிதியும், வழிகாட்டுதலும் வழங்கி உதவும் முதலீட்டாளர்கள் ஏஞ்சல் இன்வெஸ்டார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சந்திரசேகர் குப்பேரி ஒரு ஏஞ்சல் இன்வெஸ்டார். சர்வதேச நிறுவனங்களில் நிதித் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
அந்த அனுபவத்தின் அடிப்படையில், அனோவா கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி நடத்தி வருகிறார். நிறுவனங்களை வாங்கல், விற்றல் ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு நிதி திரட்டுதல் தொடர்பான ஆலோசனை வழங்கி வரும் குப்பேரி, இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். முதலீட்டாளர்களின் உலகம் எப்படிப்பட்டது, அவர்கள் எப்படி விஷயங்களை அணுகுகிறார்கள் என்பன குறித்து அவரிடம் உரையாடினேன்...
நீங்கள் ஏஞ்சல் இன்வெஸ்டாராக மாறியது எப்படி? - நான் பிறந்தது சென்னை. அப்பா வங்கியில் பணிபுரிந்தார். இதனால், பட்டயக் கணக்கராக (சிஏ) வேண்டும் என்பது சிறு வயதிலேயே இலக்காக மாறியது. கல்லூரியில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தேன். படிப்பு முடிந்ததும் சிஏ தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தேன். நான் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். தேசிய அளவில் சிஏ தேர்வில்17-வது இடம் பெற்றேன். அது எனக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில், அதைத் தொடர்ந்து ஆடிட்டிங் நிறுவனமான கேபிஎம்ஜி ஆகிய சர்வதேச நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். இதைத் தொடர்ந்து யார்டிலி ஆஃப் லண்டன் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது.
என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் இது. அங்கு என்னுடைய வேலை இதுதான்: சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களை, பிராண்டுகளை மதிப்பீடு செய்து, அவற்றை யார்ட்லி நிறுவனத்துக்காக கையகப்படுத்த வேண்டும். சந்தை வாய்ப்பு நன்றாக இருக்கும்போது, வாங்கிய நிறுவனங்களை விற்றுவிட வேண்டும். எளிமையாக சொல்லப்போனால், பங்குகளை வாங்கி விற்பதுபோல நிறுவனங்களை வாங்கி விற்பதுதான் எனக்கு வேலை. இதற்காக, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், சீனா, அமெரிக்கா, கத்தார் என உலகம் முழுவதும் பயணித்து முதலீட்டு வங்கிகள், முதலீட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது.
ஒரு கட்டத்தில் எங்கள் நிறுவனத்தையே, நல்ல லாபத்தில் ஹாங்காங் நிறுவனமான லி & பங் (Li&Fung) நிறுவனத்துக்கு விற்றோம். ஆண்டு 2013. மூன்று சர்வதேச நிறுவனங்களில் 17 ஆண்டுகாலம் பணிபுரிந்திருந்தேன். ஒவ்வொரு நிறுவனத் திடமிருந்தும் தனித்தனி அனுபவங்கள் பெற்றிருந்தேன். ‘நாமே சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்தால் என்ன’ என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அனோவா கார்ப்பரேட் சர்வீசஸ். அனோவா வழியாக நிதி திரட்டுதல், கையகப்படுத்துதல், முதலீடு தொடர்பாக மற்ற நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தேன். அதன் தொடர்ச்சியாக, நானே ஏஞ்சல் இன்வெஸ்டாராக மாறி, நேரடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன்.
ஏன் ஏஞ்சல் இன்வெஸ்டார்கள் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள்? - சாதாரண மக்கள் தங்கள் பணத்தைப் பெருக்க நிலம், தங்கம், வங்கி மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கம். அடுத்த கட்டமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். இதுவே, ஹெச்என்ஐ (HNI) என்று அழைக்கப்படும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் தங்கள் வசமுள்ள பணத்தைப் பெருக்க வெவ்வேறு வழிகளில் முதலீடு செய்வார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அவற்றில் ஒன்று. இன்று அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தை முன்னகர்த்திச் செல்லக்கூடியதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தால், 40 சதவீதம் வரையில் ரிட்டர்ன் கிடைக்கும். இதனால், அதிக சொத்து மதிப்பு கொண்ட ஏஞ்சல் இன்வெஸ்டார்களுக்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. சொல்லப்போனால், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் எப்படி நல்ல முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோலவே முதலீட்டாளர்கள் நல்ல ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்துக்கு நிதி வழங்குவதற்கு அந்நிறுவனத் திடமிருந்து எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன? - நாம் குதிரை மீது அல்ல, அதை இயக்கும் வீரர் மீதுதான் பந்தயம் கட்டுகிறோம். அதுபோலத்தான் ஸ்டார்அப் மீதான முதலீடும். முதலீட்டாளர்களாகிய நாங்கள், நிறுவனர்களின் திறனையும் ஆற்றலையும் மிகத் தீவிரமாக மதிப்பீடு செய்வோம். அவர்களிடம் எந்த அளவுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதை அலசுவோம். பொதுவாக, தனி நிறுவனராக இல்லாமல், இணை நிறுவனர்கள் இருந்தால் நல்லது. அப்போதுதான், நிறுவனத்தில் சமநிலை நிலவும். முதலீடு என்பது ஒரு நீண்டகால உறவு. எனவே, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், நிறுவனர்கள் தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஐடியாவை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும்.
உங்கள் நிறுவனத்துக்கான சந்தை வாய்ப்பு எப்படி இருக்கிறது, போட்டிச் சூழல் என்ன, நிறுவனத்தை முன்னெடுத்து செல்வதற்கான அடுத்த கட்ட திட்டங்கள் என்ன என்பவற்றை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் முன்வைக்கத் தெரிய வேண்டும். நிதி திரட்டலில் ஈடுபடும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். வெற்றி என்பது ஐடியாவில் இல்லை. அதை எப்படி செயல்படுத்துகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. எனவே, ஐடியாவை எப்படி செயலாக மாற்றப்போகிறீர்கள் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். நிதி கிடைக்கவில்லை என்றால் மனம் தளர்ந்துவிடாதீர்கள். உங்களை நோக்கி கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் உங்களை ஒரு படி முன்னகர்த்திச் செல்கிறது என்று கருதுங்கள். கேள்விகளை கண்டு அஞ்சாதீர்கள். எதிர்கொள்ளுங்கள்.
முதலீடு என்பது ஏற்றமும் இறக்கமும் கலந்த பயணம். இந்தப் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? - தற்போதைய காலகட்டத்தில்,எவ்வளவு தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறோமோ, அதுதான் நம் சொத்து. Network is Net worth என்பதை ஆழமாக புரிந்துகொண்டுள்ளேன். தொழில்முனைவுக்கும், முதலீட்டுக்கும் மட்டுமில்லை, நாம் எந்த வேலையில் இருந்தாலும், நாம் முன்னகர்ந்து செல்வதற்கு தைரியமும், தன்னம்பிக்கையும் மிக அடிப்படையானவை. அடுத்தது, பொறுமை. எல்லா சமயமும், நாம் நினைத்தது நடந்துவிடும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும். அந்த சமயங்களில் மனம் தளர்ந்துவிடக்கூடாது. நிதானம் மற்றும் அமைதியின் வழியாகத்தான் நாம் நெருக்கடியான காலகட்டங்களில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
நம்மைச் சுற்றி பல எதிர்மறையான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கலாம். வாழ்க்கை மீது நம்பிக்கை இழக்கக் கூடியதாக சூழல் இருக்கலாம். ஆனால், அந்த எதிர்மறை எண்ணத்தை நம்முள் அனுமதித்துவிட்டால், நாம் எந்த காரியத்தையும் தொடங்க முடியாது. எல்லா காரியமும் அர்த்தமற்றதாக தோன்றும். இறுதிவரையில், நாம் ஒரே இடத்தில்தான் நின்றுகொண்டிருப்போம். ஆக, உலகை நாம் நேர்மறையாக அணுகப் பழக வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
- riyas.ma@hindutamil.co.in