நாமும் பணக்காரர் ஆகலாம் - 10: டாடா, பிர்லா நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம்
நாம் ஒரு வர்த்தகம் அல்லது தொழிலை தொடங்கி, அதில் லாபம் வந்தால் நம் பணம் வளரும். நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வியாபாரத்தை தொடங்கி நடத்த முடியாது. வேறு என்ன செய்யலாம்? நம்முடைய நண்பர் சுரேஷ் ஏற்கெனவே வாகன உதிரி பாகங்கள் தயாரித்து வியாபாரம் செய்வதாக வைத்துக்கொள்ளலாம். அவருடைய நிறுவனம் வளர்ச்சி பாதையில்தான் இருக்கிறது. தொடர்ந்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய அவருக்கு கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. இந்நிலையில், நாம் சுரேஷ் நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குதாரராக சேர்ந்து கொள்ளலாம். முதலீட்டுக்கு ஏற்ப லாபத்தை பிரித்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் நாம் போட்ட முதலீட்டுக்கு சுமார் 15-20% லாபம் வந்தால் நல்லதுதானே. நமக்கு வியாபாரம் செய்யும் பல நண்பர்கள் இருக்கலாம். அவர்கள் வெவ்வேறு வகையான வியாபாரம் செய்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களில் யாருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது என்பதை முதலீடு செய்யும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
நாம் சுரேஷ் நிறுவனத்தில் பங்குதாரராக சேருவதற்கு பதில், டாடா அல்லது பிர்லா நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தால் எப்படி இருக்கும்?ஆனால், நம்மை அவர்களுக்கு தெரியாத நிலையில், டாடாவும், பிர்லாவும் நம்மை எப்படி பங்குதாரராக சேர்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வி எழும்.மேலும் பல நிபந்தனைகள் இருக்குமே என்ற கவலையும் வரத்தானே செய்யும். இங்குதான் பங்குச்சந்தை வருகிறது. நீங்கள் விரும்பும் நிறுவனத்தில் முதலீடு செய்ய பங்குச்சந்தை வாய்ப்பு அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் எல்லாம், தங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு கொடுத்து அவர்களையும் தங்கள்நிறுவனத்தில் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்கின்றன.
இந்த வசதியை பங்குச்சந்தை நமக்கு கொடுக்கிறது. இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவென்றால், எந்த நிறுவனம் நம்மை பங்குதாரராக சேர்த்துக்கொள்ளும் என்ற கவலையும் வேண்டாம். நமக்கு டாடா வேண்டுமா, பிர்லா வேண்டுமா அல்லது அம்பானி நிறுவனம்வேண்டுமா என்பதை நாம்தான் முடிவெடுக்கப் போகிறோம். அந்த வாய்ப்பைதான் பங்குச்சந்தை தருகிறது. நான் நம் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வியாபாரத்தை செய்வதாக வைத்துக் கொண்டால், என்னென்னகாரணிகளை நாம் கவனிப்போம். நண்பர் நேர்மையானவராக இருக்கிறாரா? பணத்தை கையாள்வதில் சுத்தம் உள்ளவராக இருக்கிறாரா? இந்த வியாபாரத்தை எடுத்து நடத்தக்கூடிய அனுபவம் உள்ளவராக இருக்கிறாரா? இந்த வியாபாரத்தை எதிர்காலத்தில் சிறப்பாக எடுத்து செல்ல திட்டங்கள் வைத்திருக்கிறாரா? சந்தையில் இந்த நிறுவனத்துக்கு நல்ல பெயர் உள்ளதா? இவ்வாறு பல்வேறு கேள்விகளை நாம் நமக்குள் கேட்டுக் கொள்வோம்.
அதற்கான விடையானது நமக்கு திருப்தி அளித்தால், நண்பருடன் கூட்டு சேருவோம். இல்லையென்றால், கூட்டு சேர மாட்டோம். அதைப்போலவே, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை, எந்த நிறுவனத்தில், பங்குதாரராக சேர்ந்து, லாபம் ஈட்டலாம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதைப் புரியும்படி சொல்வதாக இருந்தால், நம் பணத்தை முதலீடு செய்வதற்கு சந்தையில் பல்வேறு வகையான நிறுவனங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கார் தயாரிக்கும் நிறுவனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள், இரும்பு தயாரிக்கும் நிறுவனங்கள், வங்கிகள், மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவில் கார்களின் விற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது. கார் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டு சேரலாம் என்று நாம் முடிவெடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கை ஜனவரி 2023ல் சுமார் ரூ.450/- என்ற விலைக்கு வாங்கி இருந்தால், வருட முடிவில் இப்போது ரூ.700/-ல் விற்று இருக்கலாம். லாபம் என்று சொன்னால், 55% ஆகும். வங்கிகள் எல்லாம் நல்ல வியாபாரத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டு ஆக்ஸிஸ் வங்கி பங்கை ஜனவரி 2023-ல் ரூ.850/-க்கு வாங்கி இருந்தால், நவம்பர் மாதத்தில் ரூ.1,050/- விற்று இருக்கலாம். லாபம் சுமார் 23% ஆகும். யாரோ சொன்னாங்க அப்படின்னு ரச்சனா இன்ஃப்ரா என்ற பங்கை ரூ.900/- வாங்கி இருந்தால் அது இப்போது ரூ.93-க்குவியாபாரம் ஆகிறது. சுமார் 90% அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். எனவே, நம் பணத்தை முதலீடு செய்வதற்குமுன்பு நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்ட பிறகு முதலீடு செய்ய வேண்டும்.
- trarulrajhan@ectra.in
