

‘மேக்ஸ்லைஃப் இன்சூரன்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இண்டியன் ரிடையர்மெண்ட் இண்டக்ஸ் சர்வே முடிவில் சுவாரசியமான தகவல்கள்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் ஓய்வு காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 28 நகரங்களைச் சேர்ந்த 2,091 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் 25 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள். இந்த ஆய்வில் வெளியான சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம். ஓய்வு காலத்தில் உடல்நலம் என்பது மிகவும் முக்கியமான ஒரு காரணி என 5-ல் 3 பேர் கூறியுள்ளனர். ஆனாலும் 50 வயதுக்கு மேற்பட்ட 10-ல் 9 பேர் ஓய்வு காலத்துக்குத் தேவையான சேமிப்பை தாமதமாக ஆரம்பித்தது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஓய்வு காலத்துக்கென்று சேமித்து வரும் 5-ல் 3 பேர் தங்களது சேமிப்பு ஓய்வுகால ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சராசரி இந்தியர் ஒருவரின் ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகள். ஆனால் உயர் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த, நகரங்களில் வசித்து வரும் இந்தியர்களின் ஆயுட்காலம் அவர்கள் உட்கொள்ளும் சத்தான உணவு, மருத்துவ ரீதியிலான பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து 80 ஆண்டுகள் வரையிலும் இருக்கலாம். எனவே ஒருவரின் சேமிப்பு ஓய்வுகாலத்தில் முதல் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும்பட்சத்தில் அடுத்த பத்தாண்டுகள் என்னவாகும் என்பது கேள்விக்குறி. சமூகக் கட்டமைப்பில் கூட்டுக் குடும்பம் என்பது மாறி, தனிக் குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ள காலகட்டம் இது.
இருந்தாலும் சுமார் 50% பேர் ஓய்வுகாலத்தை தங்களது குழந்தைகளின் வீடுகளில்தான் செலவிட வேண்டியிருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு உடல்நலம் சார்ந்த தயார்நிலை நகர்ப்புற இந்தியர்களிடையே அதிகரித்திருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், ஓய்வுகாலத்துக்கான தயார் நிலையில் இருப்பவர்கள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் கிழக்கு இந்தியாவில் அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆண்டு ஆய்வு முடிவானது ஓய்வுகாலத்துக்கான தயார்நிலையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைக் காட்டுவதோடு நாட்டின் வலுவான பொருளாதார மீள்திறனைக் குறிக்கிறது.
ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஓய்வுகாலம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. பெரும்பாலான நகர்ப்புற இந்தியர்கள் ஓய்வுகாலத்தை மன அழுத்தமில்லாத வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தினார்கள். மேலும் இன்றைக்கு 10-ல் 7 பேர் ‘குடும்பத்திற்கான நேரம்’, ‘பதற்றம் இல்லாத வாழ்க்கை’, ‘அதிகப்படியான சுதந்திரம்’, `ஆடம்பரம் அல்லது பயணத்துக்கான அதிக வாய்ப்புகள்”, போன்ற நேர்மறையான எண்ணங்களுடன் ஓய்வுபெறுவதை தொடர்புபடுத்தினர். மீதமுள்ள 3 பேர்’ ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை’, ‘சுவராசியமில்லாத வாழ்க்கை நிலை’, ‘குறைந்த சேமிப்பு’ மற்றும் ‘நோக்கம் இல்லாமை’ போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தெரியப்படுத்தினர். ஓய்வுகாலத்துக்கு திட்டமிடுபவர்களில் சுமார் 59% பேர் உடல்நலத்துக்கு முன்னுரிமையும், 33% பேர் பொருளாதாரத்துக்கும் மீதமுள்ள 8% பேர் `உணர்ச்சிப்பூர்வமான ஆதரவுக்கும் (emotional support)’ முன்னுரிமை அளிக்கவிருப்பதாகக் கூறினார்கள்.
நகர்ப்புற இந்தியர்களில் மூன்று பேரில் ஒருவர் ஓய்வு பெற்ற 5 ஆண்டுகளுக்குள் தங்களுடைய சேமிப்புகள் தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 5-ல் 2 பேர் இன்னும் ஓய்வுக்காக முதலீடு செய்யவில்லை எனக் கூறியிருப்பது கவலையளிக்கும் செய்தியாகும். கணிசமான பெரும்பான்மையினர் தங்களுக்கு போதுமான குடும்பச் சொத்து இருப்பதாக நம்புவதோடு தங்கள் குழந்தைகளால் கவனித்துக் கொள்ளப்படுவோம் எனவும் நம்புகிறார்கள். இது அவர்களது ஓய்வூதியத் திட்டமிடலுக்கு தடையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்டது போல இந்த ஆய்வில் பங்கேற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 பேரில் 9 பேர் ஓய்வுகாலத்துக்காக முன்பே சேமிப்பைத் தொடங்கவில்லை என்று வருந்துகிறார்கள்.
இருப்பினும், நகர்ப்புற இந்தியர்களில் இருவரில் ஒருவர் தங்களுடைய பணி வாழ்க்கையின் தொடக்கத்தில் நீண்டகால சேமிப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகின்றனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் (38%) 35 வயதுக்கு முன்பே ஓய்வுகாலத்துக்கான சேமிப்பு திட்டத்தைத் தொடங்குவது அவசியம் எனக் கருதுகிறார்கள். ஆயுள் காப்பீடு குறித்து 95% பேர் அறிந்திருப்பதோடு 75% பேர் அதில் பணமும் போட்டிருக்கின்றனர். கூடுதலாக, இந்த ஆய்வில், நகர்ப்புற இந்தியர்களில் 64% பேர் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) நன்கு அறிந்திருந்தாலும், 16% பேர் மட்டுமே முதலீடு செய்கின்றனர்.ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து வருமானம் பெறுவதற்கு, குறிப்பாக ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு இல்லாதவர்கள், மாத வருமானம் பெறும் வகையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் ஓய்வுகாலத்தை பொருளாதாரச் சுமை இல்லாமல் நம் விருப்பப்படி அனுபவிக்கலாம்.
- sidvigh@gmail.com