

தங்கத்துக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் முதலீடு பற்றி பார்க்கலாம். வீடு, ஃபிளாட் மற்றும் நிலம் வாங்குவதுதான் ரியல் எஸ்டேட் முதலீடு எனப்படுகிறது. அப்பா ஒரு வீடு வாங்கி வைத்துள்ளார். இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது அவர்கள் இருவருக்குமே தனித்தனியாக ஒரு வீடு தேவைப்படுகிறது. எனவே வீடு வாங்குவது என்பது ஒவ்வொரு குடும்பத்தலைவன், தலைவிக்கும் கனவுதான். வாடகை வீட்டில் வசிக்கும்போது, நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமா என்பது கேள்விதான். வீட்டு சொந்தக்காரர் எப்போது காலி செய்யச் சொல்வார் என்று தெரியாது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள்.எனவே,நடுத்தர மக்கள் கடன்பட்டாவது ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என்று துடிப்பது இயல்புதான்.
சொந்தமாக நாம் வீடு வாங்கும்போது அதற்காக நாம் செய்யும் முதலீடு பற்றியும் அதில் இருக்கும் நல்லது கெட்டது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் ஒரு வீட்டை ஏற்கெனவே வாங்கி குடியிருக்கிறோம். வருவாய் கூடும்போது முதலீட்டுக்காக இன்னும் ஒரு வீடு வாங்கி போடலாம் என்று நினைப்போம். இரண்டாவது வீடு வாங்குவதால் வரக்கூடிய சாதகம் மற்றும் பாதகத்தையும் பார்க்க வேண்டும். இப்போது நாம் முதலீட்டுக்காக ₹50 லட்சம் மதிப்புள்ள வீட்டை, 10 ஆண்டுக்கு திருப்பிச் செலுத்தும் வகையில்100% கடன் பெற்று வாங்குவதாக எடுத்துக்கொள்வோம்.அதற்கான (வட்டி9%) மாத தவணை ₹63,337 ஆக இருக்கும். 10 வருட முடிவில் வட்டியாக சுமார் ₹26 லட்சமும்அசல் ₹50 லட்சம் என ஒட்டுமொத்தமாக ரூ.76 லட்சம் முதலீடு செய்திருப்போம்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி கடந்த 10 வருடங்களில் ரியல் எஸ்டேட் துறை சுமார் 4.8% அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் 10 வருடங்கள் கழித்து ₹50 லட்சம் முதலீட்டில் வாங்கிய வீடு, சுமார் ₹80 லட்சம் மதிப்பாக மாறலாம். வாடகை மாதம் 10,000/- என்று வைத்துக்கொண்டால், 10 வருடத்தில் அது ₹12 லட்சம் வருமானத்தை கொடுத்ததாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்த மதிப்பு ₹92 லட்சம்.முதலீடு ரூ.76லட்சம் போக ரூ.16லட்சம் லாபம். அதே நேரம் ₹50 லட்சம் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக10 வருடத்துக்கு, 7% வட்டியில், முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். 10 வருட முடிவில் வட்டியாக ₹50.8 லட்சம் கிடைக்கும். மொத்தம் ₹1.08 கோடியாக மாறுகிறது. வங்கியில் முதலீடு செய்வதால் கூடுதலாக ரூ.16லட்சம் கிடைக்கிறது.அத்துடன் பணம் தேவைபட்டால் வைப்பு நிதியை உடைத்துஎடுக்கலாம்.
இது சாதக அம்சம்.அதேநேரம் 7% வட்டி என்பது நிலையாக இருக்காது.குறைய வாய்ப்பு உள்ளது. இது பாதக அம்சம். இதுபோல,வீடாக இருந்தால்அதன் வாடகை ஆண்டுதோறும் அதிகரிக்கும்.நிலமாக அல்லது வீட்டு மனையாக இருந்தால் அதன் மதிப்பு கூடும். இது சாதக அம்சம். ஆனால் அடுக்குமாடி வீடாக இருந்தால் அதன்மதிப்பு ஆண்டுக்காண்டு குறையும். மேலும் தேவைப்படும்போது வீட்டை விற்று பணமாக மாற்றுவது கடினம்.இது பாதக அம்சம். எல்லா முதலீட்டிலும் சாதகமும் உள்ளது, பாதகமும் உள்ளது. எனவே, முதலீட்டை பல்வேறு தளங்களில் பிரித்து போடுவதுதான் சரியாக இருக்கும்.அப்படி பார்த்தால் நம்முடைய மொத்த முதலீட்டில் ஒரு பகுதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது நல்லதே.
- trarulrajhan@ectra.in