

உலகிலேயே குடும்ப கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் குடும்பத்துக்கு அச்சாணியாக விளங்கும் திருமணங்களை இந்தியர்கள் வெகு விமரிசையாக செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடிக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்றாலும், நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில்தான் அதிகப்படியான திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 15 வரை கல்யாண சீசன் கொடிகட்டி பறக்க உள்ளது. இந்த 23 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடைபெற உள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த தேதியில் அதிகப்படியான திருமணம் நடைபெற இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சுட்டிக்காட்டியதால் அந்த தேர்தலை தேர்தல் ஆணையம் 25-ம் தேதிக்கு மாற்றி அமைத்தது. இந்த சீசனில் மட்டும் திருமண வீட்டார் சுமார் ரூ.4.25 லட்சம் கோடியை செலவிடுவார்கள் என சிஏஐடி ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே கல்யாண சீசனில் ரூ.3.75 லட்சம் கோடி செலவில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற்றதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒட்டுமொத்த திருமணங்களில் 10% (3.5 லட்சம்) டெல்லியில் நடைபெறவுள்ளன. இந்த சீசனில் நடைபெறவுள்ள 50 ஆயிரம் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக (தலா ரூ.1 கோடிக்கும் மேல் செலவு) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50 ஆயிரம் திருமணங்கள் தலா ரூ.50 லட்சம் வரையிலான செலவிலும் 6 லட்சம் திருமணங்கள் தலா ரூ.25 லட்சம் வரையிலான செலவிலும் நடைபெறும் என கூறப்படுகிறது. அடுத்தபடியாக 12 லட்சம் திருமணங்கள் தலா சுமார் ரூ.10 லட்சம் வரையிலான செலவிலும், 10 லட்சம் திருமணங்கள் சுமார் ரூ.6 லட்சம் வரையிலான செலவிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண வர்த்தகம்: முன்பெல்லாம் வரண் பார்ப்பது முதல் திருமண மண்டபங்கள், உணவு என திருமணம் தொடர்பான ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டாரோ கவனித்துக் கொள்வார்கள். ஆனால், அவசர உலகில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான நிறுவனங்கள் ஏராளமாக முளைத்துவிட்டன. இதனால் திருமண வீட்டாருக்கு அலைச்சல் குறைந்துவிட்டது. பணத்தைக் கொடுத்துவிட்டால் பந்தக்கால் நடுவது முதல், விருந்தினர்களை கவனிப்பது வரையிலான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்துவிடுகின்றனர்.இதனால் திருமணம் தொடர்பான வர்த்தகமும் ஆண்டுதோறும் வேகமாக வளர்ந்து வருகிறது.