நாமும் பணக்காரர் ஆகலாம் - 7: கோல்டு இடிஎஃப் முதலீட்டின் நன்மைகள்

நாமும் பணக்காரர் ஆகலாம் - 7: கோல்டு இடிஎஃப் முதலீட்டின் நன்மைகள்
Updated on
2 min read

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய சில அடிப்படை தகவல்களை பார்த்தோம். மியூச்சுவல் ஃபண்டின் இன்னொரு முகம்தான் இ.டி.எஃப். (ETF) - எக்ஸ்சேஞ் ட்ரேடட் ஃபண்ட் என்பதாகும். மியூச்சுவல் ஃபண்டை போலவே, இ.டி.எஃப். திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணமானது, தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதிலும் ஒரு யூனிட் என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பில் அளிக்கப்படுகிறது. இதில் பங்கு கொள்பவர்கள், அவர்கள் முதலீடு செய்யும் திட்டத்துக்கு ஏற்ப, யூனிட்களின் எண்ணிக்கையை முடிவு செய்யலாம். இதுவும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் புதிய திட்டத்துக்கு (NF) இணையானது. எனினும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டமும் இ.டி.எஃப். திட்டமும் எங்கு வேறுபடுகிறது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மேனேஜர்கள் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணை (நிஃப்டி) ஒரு அளவீடாக எடுத்து அதன் ஏற்றத்தைவிட கூடுதலாக லாபத்தைக் காட்ட முயற்சிப்பார்கள். இ.டி.எஃப். திட்டத்தை செயல்படுத்தும் ஃபண்ட் மேனேஜர்கள், அந்தப் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறதோ, (தங்கம்) அதன் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, இ.டி.எஃப். திட்டத்தின் யூனிட் மதிப்பும் ஏறி இறங்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தை கோல்ட் இ.டி.எஃப். திட்டம் என்று அழைக்கலாம். இதுவும் ஒரு பொதுவான பெயர். ஒருவேளை இந்தத் திட்டத்தை ICICI நிறுவனம் வழங்கினால், இதை ஐசிஐசிஐ கோல்ட் என்று அழைப்பார்கள்.

ஐசிஐசிஐ கோல்ட் என்ற திட்டத்தை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜர், பொது சந்தையில் தங்கத்தின் விலை எவ்வாறு தினமும் மாறுபடுகிறதோ அதைப்போல ஐசிஐசிஐ கோல்ட் யூனிட்டின் விலையும் மாறும்படி பார்த்துக் கொள்வார். ஆகவே தங்கம் விலை ஏறும் போது ஐசிஐசிஐ கோல்ட் யூனிட்டின் மதிப்பும் ஏறும், தங்கம் விலை இறங்கும்போது ஐசிஐசிஐ கோல்ட் யூனிட்டின் மதிப்பும் இறங்கும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், தங்கத்தை ஆபரணமாகவோ, கோல்ட் காயினாகவோ அல்லது கோல்ட் பிஸ்கட் ஆகவோ வாங்கி வைப்பதற்கு பதிலாக, கோல்ட் இ.டி.எஃப். யூனிட்டுகளை வாங்கி வைக்கலாம். இதில் என்ன அனுகூலம் என்பதை பார்க்கலாம்.

யூனிட்களின் மதிப்பு: கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தை பத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள், தங்கள் பெயரில் வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் ஒரு யூனிட்டின் மதிப்பை ஒரு கிராமுக்கு இணையாக வைத்திருக்கிறார்கள். ஒரு கிராம் என்பது சுமார் ₹5,000-க்கு மேலிருக்கும் என்பதனால், பல நிறுவனங்கள் விலையை 0.1 கிராம் அல்லது 0.01 கிராம் என்ற அளவுக்கு கூட குறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால், முதலீட்டாளர்கள் குறைந்த தொகையில் கூட கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

எப்படி வாங்கலாம் மற்றும் விற்கலாம்? - கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால், பங்குத் தரகர்கள் மூலம், பங்குகளை வாங்குவது போல் எளிதாக வாங்கலாம் அல்லது விற்கலாம். எனவே நம் பண வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கி வைக்கலாம். தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக மாற்றிக்கொள்ளலாம். NSE - BSE இரண்டிலும் வியாபாரம் ஆகும்.

மின்னணு பங்குகள்: கோல்ட் இ.டி.எஃப். யூனிட்கள், டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், அவை கண்ணுக்குத் தெரியாத மின்னணு பங்குகளாக இருக்கின்றன. ஆகவே திருட்டு பயம் இல்லாமல், பாதுகாப்பாக தங்கத்தில் சேமிக்கலாம்.

தங்கத்தின் தரம்: கோல்ட் இ.டி.எஃப். யூனிட்களின் விலையானது, 24 கேரட் 99.9% தூய்மையான விலையையொட்டியே நகரும். மேலும் இந்த யூனிட்கள் மின்னணு பங்குகளாக இருப்பதால், தரத்தைப் பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் தங்கள் நிர்வாக செலவுக்காக ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை, அந்தத் திட்டத்தில் இருந்து எடுப்பார்கள். கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தில் வருடத்துக்கு 0.2% - 0.5% வரை எடுப்பார்கள். இந்த தொகை யூனிட்கள் மதிப்பிடும்போது கழித்துக் கொள்ளப்படும். சேமிப்பு பணத்துக்கு ஏற்ப முதலீடு செய்வதற்கும், தேவையானபோது விற்று பணமாக மாற்றுவதற்கும், கோல்ட் இ.டி.எஃப். சிறந்தது.

- trarulrajhan@ectra.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in