விற்பனை உத்திகள் பலவிதம்

விற்பனை உத்திகள் பலவிதம்
Updated on
2 min read

காரைக்குடியில் பழைய சாமன்கள் விற்கும் இடத்துக்குப் போயிருந்தேன். ஒரு கடையில் இருந்த டயல் வைத்த, மரத்தால் செய்யப்பட்ட ‘லேண்ட் லைன் போன்’ கண்ணில் பட்டது. பித்தளையில் டயலும், குமிழ் போன்ற ரிசீவரும் இருந்தன. டயலுக்கு நடுவே, ‘சிக்காகோ’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. “இந்தப் போன் வேலை செய்யுமா?” என்று கடைக்காரரிடம் கேட்டேன். அவர், மேசை மீதிருந்த ஒரு போனின் ஒயரைப் பிடுங்கி எடுத்து வந்து நான் பார்த்துக் கொண்டிருந்த மர போனின் அடியில் சொருகினார். பிறகு, அவருடைய கைபேசியை எடுத்து, சில எண்களை ஒத்தினார்.

என்ன அதிசயம்! மரபோனில் இருந்த அந்தக் கிண்ணம் போன்ற மணியின் முனையில் குண்டாக இருந்த குண்டு வேகமாக அடிக்க, டிரிங் டிரிங் ஓசை. ஆர்வமாகப் பார்த்த என்னை, “ரிசீவரை எடுத்துப் பேசுங்க” என்று சொல்லியபடி அவர் கைபேசியுடன் கடைக்கு வெளியே போனார். அவர் பேசியது ரிசீவரில் தெளிவாகக் கேட்டது. “விலை என்ன?” என்று கேட்டேன். 8,000 என்றார். என் மனைவி “வீட்டில்தான் அத்தனை போன் இருக்கே. இது வேற எதுக்கு இடத்தை அடைக்கும்” என்றார்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு தரலாமா என்று நான் கேட்க, “இதற்கு இரண்டாயிரமே அதிகம்” என்று மனைவி சொல்ல, கடைக்காரர், உங்கள் அதிஷ்டம் அவ்வளவுதான் என்பதுபோல “வச்சிருங்க சார்” என்றார். “வாங்க. மத்த கடைகள்ல பாக்கலாம்” என்று சொல்லி அழைத்த மனைவியுடன் போனவன், அடுத்த கடையிலும் அதேபோன்ற போன் இருக்கிறதா என்று கேட்டேன்.

இருந்தது. ஆனால், அத்தனை வடிவாக இல்லை. மனைவி சொல்லை மறுத்துவிட்டு முந்தைய கடைக்குள் நுழைந்து, நேரடியாக அவரிடம் 6,000 என்றேன், கடைக்காரர், “இல்ல சார். ரேர் பீஸ். இதுபோல இந்தக் கடைத்தெரு முழுக்க சுத்தினாலும் கிடைக்காது” என்றார்.

“சரி 7000. நல்லா பேக் பண்ணுங்க. சென்னைக்கு போன பின்பும் வேலை செய்யனும். இல்லையென்றால் ரிட்டர்ன்தான்” என்றேன்.
அதன்பின் சென்ற கடைகளில் எல்லாம் அதுபோல போன் இருக்கிறதா எனக் கேட்டேன். ஒரு கடையில் இருந்தது. நான் வாங்கியது போன்ற அதே போன். கடைகாரர் சொன்ன ஆரம்ப விலையே ரூ.5,000 தான். அதற்குப் பிறகு நான் எந்தக் கடையிலும் அந்தப் போன் குறித்து விசாரிக்கவில்லை. கூவிக்கூவி விற்பது, கட்டாயப்படுத்துவது, துரத்தி துரத்தி தலையில் கட்டப் பார்ப்பது, தள்ளுபடி கொடுப்பது எல்லாம் சிலரின் விற்பனை அணுகுமுறைகள்.

அதிகம் பேசாமல், விலை குறைப்பு செய்யாமல், புன்னகைத்து, குறைவாக பதில் சொல்லி, விற்றே ஆக வேண்டும் என்கிற ஆர்வம் காட்டாமல், “என் பொருள் சிறப்பானது. விலை சரியானது. வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்பது போன்ற அணுகுமுறை வெற்றிதரும் உத்திகளில் ஒன்று.

அதைத்தான் முன்பு பார்த்த பழைய சாமான்காரர் செய்தார். விலை குறைத்து, சேல் போட்டு, ஒன்றுக்கு ஒன்று இலவசம் கொடுத்து விற்பனை செய்யும் முறைகளில் கிடைக்கும் லாபங்களை விட, “ஒரே விலை. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்” என்று சொல்பவர்களுக்கு கிடைக்கும் லாபங்கள் குறைவானதல்ல.

ஒரு தையல்காரர் துணியை வெட்டுவதற்கு முன் சரியாக அளவெடுப்பது போல “என்ன பார்க்கிறீர்கள்? என்ன வேண்டும்” என்ற கேள்விகளோடு உரையாடலை ஆரம்பித்து, வாடிக்கையாளர் மனதில் இருப்பதை சரியாக புரிந்துகொண்டு அதற்குப் பிறகு தங்கள் பேச்சை, அதை ஒட்டி அமைக்கிறவர்கள் சிறந்த விற்பனையாளர்கள். அதிலும் தங்கள் பேச்சினூடே வாடிக்கையாளர்கள் மனதிலே தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரியமிக்க சொற்களை (பவர் வேர்ட்ஸ்) லேசாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தெளிப்பது அனுபவமிக்க விற்பனையாளர்களின் மற்றொரு திறன்.

‘பணம் மிச்சம் ஆகும்’, ‘உடம்புக்கு நல்லது’, ’பக்க விளைவுகள் இல்லை’, ‘ராசியானது’, ‘செலவு வைக்காது’, ‘பழுதாகாது’, ‘இயற்கை முறையில் செய்யப்பட்டது’, ‘நீண்ட காலம் உழைக்கும்’ போன்ற மக்களிடம் வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும் பல பவர் வேர்ட்ஸ் உண்டு.. விற்பனை என்பது வெறும் பொருளும் பணமும் கைமாறும் ஒரு சாதாரண நடவடிக்கை அல்ல. வெறும் உடல் உழைப்பும் அல்ல. அந்தப் பொருள் அல்லது சேவை பற்றி அதை வாங்குகிறவர் மனதில் ஏற்படும் அபிப்பிராயத்தைப் பொறுத்துதான் அதற்கான விலை முடிவாகிறது. விற்பனையாளர் தெரிவிக்கும் விவரங்கள்தான் அபிப்ராயங்களை உருவாக்குகிறது. விற்பனை என்பது கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான வேலையும் கூட.

- writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in