கார்ப்பரேட் முதலாளியான அரசுப் பள்ளி மாணவர்: நண்டு பிராண்டின் சாதனை ரகசியம்

கடிகாச்சலம்
கடிகாச்சலம்
Updated on
3 min read

தொலைக்காட்சிகளில் கடந்த பத்தாண்டுகளில் பலரது புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்த விளம்பரம் ‘நண்டு’ பிராண்ட் லுங்கிகள். நவ நாகரீக உடைகளின் விளம்பரங்களுக்கு மத்தியில் வீட்டில் தினசரி பயன்படுத்தும் லுங்கிகளை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்கிய பெருமை ‘நண்டு’ பிராண்டையே சாரும். இந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைவர் கடிகாச்சலம்.

பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை, சென்னை, பெங்களூரு என மெட்ரோ நகரங்களில்தான் இருக்கும். ஆனால், கடிகாச்சலம் தனது சொந்த ஊரிலேயே தலைமை அலுவலகத்தை அமைத்துள்ளார். ஆம், ‘நண்டு’ பிராண்டின் ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் கண்ணாடி மாளிகையாக அமைந்துள்ளது.

நெமிலி, ஏறக்குறைய வளர்ந்த பெரிய கிராமம் என்றே கூறலாம். விவசாயத்துக்கு அடுத்தபடியாக லுங்கி நெசவுத் தொழிலை பிரதானமாக கொண்டு விளங்குகிறது நெமிலி. ‘நண்டு’ பிராண்டின் பிரீமியம் லுங்கி, எலைட் லுங்கி , எலைட் கர்ச்சீப், குளியல் டவல் , கலர் தோத்தீஸ் (வண்ண வேட்டிகள்) என அடுத்தடுத்த வளர்ச்சி குறித்து கடிகாச்சலத்திடம் கலந்துரையாடினோம்.

உங்கள் குடும்ப பின்னணியைப் பற்றி கூறுங்கள்..

எனது பரம்பரை லுங்கி வியாபார தொழிலை பின்னணியாக கொண்டது. எனது குடும்பத்தினர் நெமிலியில் இருந்து சென்னை மண்ணடி, குடியாத்தம் பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்ளுக்கு லுங்கி வியாபாரம் செய்து வந்தார்கள்.

எனக்கு பள்ளியில் படிக்கும் போதே குடும்ப தொழில் மீது ஆர்வம் இருந்தது. அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அப்பாவுக்கு உதவியாக லுங்கி தொழிலை கவனிக்கத் தொடங்கிவிட்டேன்.

நண்டு பிராண்ட் உருவானது எப்படி?

நாங்கள் தயாரித்து அனுப்பும் லுங்கிகளை பெரிய நிறுவனங்கள், தங்கள் பிராண்ட் பெயரில் விற்பனை செய்து வந்தார்கள். இது எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. தரமான லுங்கியை தயாரிக்கும் நாம் ஏன் ஒரு பிராண்டை உருவாக்கக்கூடாது என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அந்த வகையில் என்னுடைய 30-வது வயதில், ஒரு பிராண்டை உருவாக்கி அந்தப் பெயரில் லுங்கி வியாபாரம் செய்யலாம் என முடிவெடுத்தேன். அப்போது, பிராண்ட் பெயரை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பது குறித்து விரிவாக அலசினோம். புதிய தொழிலுக்கு ராசியெல்லாம் பார்க்க வேண்டும் என்றார்கள். உடனே, என்னுடைய ராசியை (கடகம்) பிராண்டாக மாற்றலாம் என முடிவாகி வந்ததுதான் ‘நண்டு’ பிராண்ட்.

நண்டு பிராண்டுக்கு தொடக்கத்தில் வரவேற்பு எப்படி இருந்தது?

நண்டு பிராண்ட் லுங்கியை தரமாகவும், நியாயமான விலையிலும் சந்தையில் விற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தயக்கம் இருந்தாலும், லுங்கியை பயன்படுத்தியவர்கள் பிறகு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். எங்கள் லுங்கிகள் மீது வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டதால் விற்பனை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று வரை தரத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை.

தமிழ்நாட்டில் நண்டு பிராண்டின் வியாபாரம் நல்லபடியாக இருந்தது. இதையடுத்து, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் எங்கள் லுங்கிகளை விற்பனைக்கு அனுப்பினோம். அங்கும் அமோக வரவேற்பு இருந்தது. அடுத்தகட்டமாக, வங்கதேசம், இலங்கை, மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா, மத்திய கிழக்கு, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் நண்டு பிராண்ட் வர்த்தகத்தை விரிவாக்கினோம்.

லுங்கி தயாரிப்பில் என்னென்ன மாற்றங்களை செய்தீர்கள்?

ஒரு கட்டத்தில் பாரம்பரிய லுங்கி தயாரிப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினோம். அதன்படி வழக்கமான லுங்கிகளின் டிசைன்களுக்கு பதிலாக புதிய டிசைன்கள், வண்ணங்களை அறிமுகம் செய்தோம்.

புதிய லுங்கியை கடைகளில் வாங்கினால் அதை அப்படியே உடுத்த முடியாது. நான்கைந்து முறை துவைத்தால் மட்டுமே உடுத்துவதற்கு நன்றாக இருக்கும். அதை மாற்றி ‘எலைட் வாஷபல்’ நண்டு பிராண்ட் லுங்கியை சந்தையில் அறிமுகம் செய்தோம். இதை வாங்கிய உடனே உடுத்த முடியும் என்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் காணப்பட்டது.

நண்டு பிராண்ட் லுங்கியை 30 முறை சலவை செய்தாலும் அதன் வண்ணம் மாறாமல் இருக்கும். அதற்கேற்ப தரமான நிறங்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

லுங்கியை வாங்கியதும் டெய்லரிடம் கொண்டுசென்று ஓரம் அடிக்க வேண்டும் என்பதையும் நாங்கள்தான் மாற்றிக் காட்டினோம். நண்டு பிராண்ட் லுங்கி அனைத்தையும் ஓரம் அடித்தே விற்பனைக்கு கொண்டு வருகிறோம். இதையே இப்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்ற தொடங்கி உள்ளன.

எலைட் நண்டு பிராண்ட் லுங்கிகள் மெல்லியதாகவும் உடுத்த சவுகரியமாகவும் இருக்கும். தரம், வண்ணம், வடிவமைப்பு அந்த அளவுக்கு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.

லுங்கிகள் தவிர வேறு என்ன தயாரிப்புகள் உங்களிடம் உள்ளன?

லுங்கி தயாரிப்புடன் நிற்காமல் ‘எலைட் கர்ச்சீப்’, ‘பிரீமியம் டவல்’ தயாரிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினோம். நண்டு பிராண்டின் ‘எலைட் கர்ச்சீப்’ 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது. லுங்கியை போலவே கர்ச்சீப்பிலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தோம். குறிப்பாக, முன்பெல்லாம் கர்ச்சீப்பை வாங்கியதும் முகத்தை துடைக்க பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். அதையும் ‘வாஷபல் கர்ச்சீப்’ ஆக மாற்றி அறிமுகம் செய்தோம். 25 முறை பயன்படுத்தினாலும் அந்த கர்ச்சீப் புதுசு போலவே இருக்கும். முகத்தை துடைக்கும்போது வியர்வை படிந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க நூலுக்கு வண்ணம் சேர்க்கும்போதே நறுமணங்களையும் சேர்த்தோம்.

அழகிய பேக்குகள் அடங்கிய ‘நண்டு’ பிராண்ட் கர்ச்சீப்களை கடைகளின் பில்லிங் பிரிவில் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்தோம். அதேமாதிரி, டவல்கள் தயாரிப்பிலும் எங்களின் தனித்துவத்தை புகுத்தினோம்.

வண்ண வேட்டிகளில் என்ன ஸ்பெஷல்?

22 ஏக்கரில் அமைந்துள்ள எங்களுக்கு சொந்தமான டையிங் யூனிட்டில் நூலுக்கு தரமான வண்ணங்களை ஏற்றி வண்ண வேட்டிகளை (கலர் தோத்தீஸ்) தயாரிக்கிறோம். பொதுவாகவே, வேட்டியில் இருக்கும் பார்டர்கள் பாலியஸ்டர் நூலினால் இருக்கும். சலவை செய்தால் பாலியஸ்டர் பார்டரில் சுருக்கம் ஏற்படும். ஆனால், அதையும் நாங்கள் மாற்றி வேட்டியின் பார்டரும் 100 சதவீதம் பருத்தி நூலால் ஆனதாக மாற்றி இருக்கிறோம்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன?

விரைவில் நண்டு பிராண்டின் கீழ் சட்டைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அது வழக்கம்போல் தரமாகவும், நியாயமான விலையிலும் இருக்கும். ஆண்களுக்கான அனைத்து ஆடைகளையும் தயாரிப்பதுதான் நண்டு பிராண்டின் கனவு.

எங்களிடம் 3 ஆயிரம் குடும்பத்தினர் நெசவு தொழில் செய்கின்றனர். பெரிய நிறுவனங்கள் மட்டுமே செய்துவரும் ‘யார்ன் டையிங்’ யூனிட்டை சொந்தமாக அமைத்திருக்கிறோம். ரீடெயில் கடைகளுக்கு நேரடியாக எங்கள் பொருட்களை கொண்டு சேர்க்கிறோம். இதுபோன்றவைகளால்தான் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான தயாரிப்பை கொடுக்க முடிகிறது என தீர்க்கமான பார்வையுடன் கூறுகிறார் கடிகாச்சலம்.

தொடர்புக்கு: senthilkumar.v@hindutamil.co.in

படங்கள்: வி.எம்.மணிநாதன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in