

பணவீக்கம் பற்றி பார்த்தோம். இனி பணவீக்கத்தில் இருந்து எவ்வாறு நம்முடைய பணத்தைக் காப்பாற்றுவது என்பதை பார்க்கலாம். இதற்காக பணத்தை சரியான தளங்களில் முதலீடு செய்யவேண்டும். பல்வேறு முதலீட்டுத் தளங்கள் இருந்தாலும் கூட, முதலில் சற்றே பாதுகாப்பான, நீண்டகால அடிப்படையில் நல்லபலன் கொடுக்கக்கூடிய ஒரு வழிமுறையை பார்க்கலாம்.
தங்கம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து இருக்கக்கூடிய பொருள். குறிப்பாக தங்கத்தை ஆபரணமாக அணிந்து சந்தோஷப்படுவது நம் அனைவரின் இயல்பாக உள்ளது.வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு விசேஷத்துக்கும் தங்க ஆபரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் சமூக அமைப்பில், திருமணம் நடக்கும்போதெல்லாம், எத்தனை பவுன் போட்டு திருமணத்தை செய்கிறோம் என்ற பேச்சு எங்கும் ஒலிப்பதை பார்க்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க, சமூகத்தில் பெண்கள் அணியும் தங்க ஆபரணங்கள், அவர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பை கொடுப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
தங்கம் என்று சொல்லும்போது, பொதுவாக நாம் ஆபரணமாக வாங்கும் தங்கத்தைத்தான் மனதில் கொள்கிறோம். தங்கத்தை ஆபரணமாக வாங்கி நம் குடும்ப உறுப்பினர்கள் அணிந்து மகிழ்வது என்பது, சந்தோஷமான வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். வாழ்க்கை என்பது கொண்டாட வேண்டியதுதான். சந்தோஷத்துக்காக அணியும் தங்க நகைகளைப் பற்றி நான் பேசப் போவதில்லை.
ஆபரணங்களையும் தாண்டி தங்கம் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக தனி நபர் மற்றும் குடும்பம் மட்டுமின்றி, ஒவ்வொரு நாடும் தங்கத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் கையிருப்பாக வைத்துள்ளன. தங்கம் என்பது உலக அளவில், ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் பொருளாதாரம் சார்ந்த நிலவரத்தை குறிக்க பயன்படுகிறது. ஒரு நாட்டின் நாணய மதிப்பை அளவீடு செய்வதற்கும், உலக அளவில் பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற சூழல் நில வும்போதும் தங்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
தங்கத்தின் உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலேயே இருந்து வருகிறது. ஆனால், அதன் தேவை தொடர்ந்து கூடிக் கொண்டே வருகிறது. ஆகவே நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தங்கத்தின் மதிப்பு ஏறுமுகமாகவே உள்ளது. ஆனாலும் உலகப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கத்தின் விலை குறைவதும் பின்பு கூடுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இனி நாம் முதலீட்டுக்கு வருவோம்.
பணவீக்கத்தின் அளவு சுமார் 6 முதல் 7 சதவீதம் என்று இருக்க, தங்கத்தில் செய்யும் முதலீடு எவ்வாறு நமக்கு உதவும் என்று பார்க்கலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த 20 வருடங்களில் சராசரியாக 12 சதவீதம் என்ற அளவிற்கு லாபத்தைக் கொடுத்து வருவதாக பார்க்கிறோம். இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று பணவீக்கத்தால் வரக்கூடிய பண மதிப்பிழப்பு தவிர்க்கப்படுகிறது. இரண்டாவதாக நம் பணம் பணவீக்கத்தைத் தாண்டி கூடுதலாக வளர்கிறது.
சரி, பணவீக்கத்தை சமாளிப்பதற்காக, சேமித்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய முடிவு செய்து விட்டீர்கள். ஆனால் இதற்காக ஆபரணங்களாக வாங்குவது சரியாக இருக்காது. ஏனெனில், ஆபரணங்களுக்கு கூலி, சேதாரம் என்று ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் பிற்காலத்தில் ஆபரணங்களை பணமாக மாற்ற வேண்டுமானால் லாபம் குறைவாகவே இருக்கும்.
எனவே, முதலீடுதான் முக்கிய நோக்கம் என்றால் தங்க முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம். தங்க முதலீட்டு திட்டங்களில் 2 வகைகள் உள்ளன.
1. நாம் நீண்டகால அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதற்கான வழிமுறை தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதாகும்(Sovereign Gold Bond). தங்க பத்திரங்கள் நம் நாட்டில் இந்திய அரசின் ஆலோசனைப்படி, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. தங்க பத்திரங்கள், 8வருட முதிர்வை கொண்டதாகும். முதிர்வடையும்போது அன்றைய தங்கத்தின் மதிப்புக்கு பணமாக்கிக் கொள்ளலாம். அத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கிறது.
2. தங்க முதலீட்டு வழிமுறை, கோல்ட் இடிஎஃப் என்று அழைக்கப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், குறுகியகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், கோல்ட்இடிஎஃப் சரியான வழிமுறையாக இருக்கும். இதனை பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குவது போல, எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், சந்தை விலையில் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம்.
இந்த இரண்டு வழிமுறைகளிலும் எவ்வாறு முதலீடு செய்வது என்பதையும், இதில் இருக்கக்கூடிய சாதகம் மற்றும் பாதகம் என்ன என்பதை வரக்கூடிய தொடரில் முழுமையாக பார்க்கலாம்.
தொடர்புக்கு: trarulrajhan@ectra.in