

நாம் மூளையை கசக்கி பிழிந்து, ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து சம்பாதித்த பணமானது ஆண்டுதோறும் அதன் மதிப்பை இழந்து வருகிறது என்பதை நாம் அறிவோமா?
நாம் ஒரு நூறு ரூபாய் நோட்டை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விடலாம். ஒரு வருடம் கழித்து பெட்டியை திறந்து பார்த்தால் அதில் அதே நூறு ரூபாய் நோட்டுதான் இருக்கும். இதுல என்ன பெரிய வித்தை இருக்கிறது, என்று உங்களுக்கு தோன்றலாம்.
நாம் ஒரு நூறு ரூபாய் நோட்டை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விடலாம். ஒரு வருடம் கழித்து பெட்டியை திறந்து பார்த்தால் அதில் அதே நூறு ரூபாய் நோட்டுதான் இருக்கும். இதுல என்ன பெரிய வித்தை இருக்கிறது, என்று உங்களுக்கு தோன்றலாம். போட்ட காசு போட்டபடி தானே இருக்கும். உண்மைதான்.
சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். ஒரு நூறு ரூபாயை வைத்து நம்மால் ஒரு கிலோ துவரம் பருப்பு வாங்க முடியும் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு வருடம் கழித்து துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.110 ஆகமாறி இருந்தால், பெட்டியில் இருந்து எடுத்தநூறு ரூபாய் மூலம் ஒரு கிலோ துவரம் பருப்பை வாங்க முடியுமா?
முடியாது என்பது அனைவருக்கும்தெரியும். இதில் என்ன கவனிக்க வேண்டியிருக்கு,விலைவாசி ஏறிப்போச்சு, அவ்வளவுதானே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.100 ரூபாயிலிருந்து ரூ.110ஆக உயர்ந்துள்ளது. இதைப் பணவீக்கம் என்கிறோம்.
கடந்த ஒரு வருடத்தில் பணவீக்கம் 10% உயர்ந்திருக்கிற நேரத்தில், நாம் பெட்டியில் வைத்திருந்த பணமும், குறைந்த பட்சம் 10% வளர்ந்து, ரூ.110 ஆக மாறி இருக்கவேண்டும். அப்படி மாறவில்லை என்றால், அந்த100 ரூபாயின் மதிப்பு, ரூ.90 ஆக குறைந்துள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல், நாம் எவ்வளவுதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அதன் மதிப்பு வருடத்துக்கு வருடம் குறைந்து கொண்டேதான் இருக்கும்.
பொதுவாக விலைவாசி ஏறிக் கொண்டேதான் இருக்கிறது. இதில் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது? விலைவாசியை என்னால் கட்டுப்படுத்த முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முடியாது என்பதான் பதில். ஆனால் இப்படியே விட்டு விட்டால் நாம் சம்பாதித்த நூறு ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகும். இன்னும் அஞ்சு வருஷத்துல துவரம் பருப்பு150 ரூபாய்க்கு போயிடும். உங்களைப் பொறுத்தவரைக்கும் கையில் இருக்கும் 100 ரூபாய் 100 ரூபாயாகத்தான் இருக்கும்.
உண்மையில் அதன் மதிப்பு பாதியாககுறைந்து 50-க்கு அருகாமையில் போய்விடும். இதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே எதுக்கு இதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க என்று நீங்கள் மனதுக்குள் கேட்பது புரிகிறது. ஆம், பணவீக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதுதான். அதற்கு மாறாக நாம் செய்யவேண்டியது, நம் பணத்தின் மதிப்பைக் கூட்டுவதுதான்.
பெரும்பான்மையோர் தாங்கள் சம்பாதித்த பணத்தை, தங்களுடைய வங்கிக் கணக்கில் வைத்திருப்பர். சரிதானே, அப்படித்தானே வைக்க வேண்டும். எல்லாம் சரி. நமக்கு வேலைக்கான சம்பளம் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. செலவுக்கு அதிலிருந்துதான் செலவு செய்கிறோம்.
மாதந்தோறும் செலவுபோக மீதி பணத்தை அந்த சேமிப்பு கணக்கிலேயே விட்டுவிடுகிறோம். இப்படியே சில மாதங்களிலோ வருடத்தின்முடிவிலோ, குறைந்தது பல ஆயிரம் முதல் சில லட்சம் சேமிப்புக் கணக்கிலேயே தங்கிவிடும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை வங்கியானது ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் கணக்கில் வட்டியாக வரவு வைக்கும்.
சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்துக்கு 4 சதவீத வட்டி கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.ஆனாலும்கூட, மூன்று மாத காலத்தில் கணக்கில் இருந்த சராசரி இருப்பு என ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கின் அடிப்படையில் உங்களுக்கு சுமார் இரண்டு, இரண்டரை சதவீதம் வட்டியாக வரலாம்.
பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் தங்களுடைய சம்பளப் பணத்தை கையாண்டு வருகிறார்கள். இதற்கான காரணம் பணம் சார்ந்த கல்வியின் அறியாமையே ஆகும். நம் ரத்தத்தை வியர்வையாக சிந்தி நாம் சம்பாதித்த இந்த பணம், வருடத்துக்கு வருடம் மதிப்பை இழந்து வருகிறது என்பதை உணராதவர்களாக இருக்கிறோம்.
நம் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை, அதே வங்கியில் வைப்பு நிதியாகவோ அல்லது தொடர் வைப்பு நிதியாகவோ வைத்திருந்தால், சுமார் 7 சதவீதம் வட்டி கொடுக்கும். இதுவும் பண வீக்கத்தை ஈடு செய்ய இயலாததாகவே இருக்கும்.
நாம் சம்பாதித்த பணத்தை வேறு எந்தெந்த தளங்களில் எல்லாம் முதலீடு செய்து, எந்த அளவுக்கு பணத்தின் மதிப்பை கூட்டலாம் என்பதை வரும் தொடரில் விரிவாக பார்க்கலாம்.
- trarulrajhan@ectra.in