

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர் மற்றும் தன்முனைப்புப் பேச்சாளர் ப்ளோரன்சியா அன்ட்ரஸ் (FLORENCIA ANDRES). இவரது நூல்கள் ஐந்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளன.
வெற்றிக் கனவுகளில் மிதப்பவர்களைப் பார்த்து இவர் கேட்கும் முக்கியமான கேள்வி, “நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடுகிறீர்களா அல்லது தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று விளையாடுகிறீர்களா?” சிந்தனையைத் தூண்ட வைக்கும் இந்தக் கேள்விதான், இவரை உலக அரங்கில் முக்கிய எழுத்தாளராக அறியச் செய்தது.
“வெற்றி பெறுவதற்கும், தோல்வியைத் தவிர்ப்பதற்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கிறது. எந்த விளையாட்டு வீரரும் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்று விளையாடுவதில்லை.
வெற்றி பெறவே விளையாடுகிறார்கள். ஆனால் பெரும்பாலான தொழில்முனைவோர் இருப்பதை விட்டு விடக்கூடாது என்று பாதுகாப்பு கருதி, தோல்வியைத் தவிர்க்கவே விரும்புகிறார்கள். இவர்களால் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட முடியாது” என்கிறார் இவர். அப்படியானால், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
நான்கு முக்கியமான வழிகளை அவர் முன் வைக்கிறார்.
1. பெரிய முடிவுகள்: வெற்றியாளர்கள் எப்போதும் பெரிய இலக்குகளுக்காகவே ஓடுகிறார்கள். வாழ்க்கை ஒருமுறைதான். அதிலும் ஆரோக்கியமான காலம் என்பது குறைவு தான் என்பதால் அதை சிறிய முடிவுகளுக்காக தியாகம் செய்து விடாமல், பெரிய முடிவுகளுக்காகவே அவர்கள் திட்டமிடுகிறார்கள். தங்களால் இயலாத இலக்குகளை அவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு தாங்களே சவால் விட்டுக் கொள்கிறார்கள். இப்போது உங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
கடந்த ஓராண்டில் நீங்கள் ஏதேனும் மிகப்பெரிய தீர்மானத்தை வாழ்க்கையில் எடுத்திருக்கிறீர்களா?
‘புதிய தொழில் ஒன்றைத் தொடங்க வேண்டும்’, ‘என் நிறுவனத்திற்கு ஒரு சி.இ.ஓ.வை நியமிக்க வேண்டும்’, ‘என்னுடைய தொழிலை ஐந்து மடங்கு உயர்த்த வேண்டும்’, ‘பல நாடுகளுக்கு என் தொழிலை விரிவுபடுத்த வேண்டும்’...இப்படி வாழ்க்கையை அடுத்த நிலைக்கு உயர்த்தக்கூடிய ஏதேனும் முக்கிய முடிவுகளை நீங்கள் எடுத்தால்தான் பெரிய வெற்றியைப் பெற இயலும்.
2. பெரிய கனவுகள்: பெரிய தீர்மானங்களை எடுக்கிற போது நமக்கு உள்ள கவலை என்னவென்றால், அது நிறைவேறுமா என்பதுதான்.அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.
வாழ்க்கை என்றால் வெற்றி, தோல்வி இருக்கத்தான் செய்யும். ஆனால் தோல்வியுற்ற பிறகு மீண்டும்வெற்றிபெற முயற்சிக்க வேண்டும் என்றால், அதற்கு இலக்குகள் அவசியம். சரி, நாம் தீர்மானித்த இலக்கை அடைவது எப்படி? அப்துல் கலாம் சொன்னது போல ‘கனவு காண்பது’தான்.
உங்கள் தீர்மானம் எது என்ற தெளிவு ஏற்பட்டு விட்டால் அதை அடைந்தது போல் கனவு காண வேண்டும். ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து கண் மூடிக்கொண்டு உங்கள் தீர்மானம் நிறைவேறினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்று கனவு காணுங்கள்.
உங்கள் மனதிற்குள் அதைப் படமாகப் பார்க்கத் தொடங்கி விட்டால் மனம் அதை நம்பத் தொடங்கி விடும். நாள்தோறும் அதைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருந்தால் மனம் அதற்கான வழிகளை உங்களுக்கு காட்டத் தொடங்கிவிடும். அல்லது அது சார்ந்த மனிதர்களை உங்களை நோக்கி ஈர்த்து வரும். ‘நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆவீர்கள்’ என்று புத்தர் சொன்னதன் அர்த்தமும் இதுதான்.
நீங்கள் எதைத் தீர்மானிக்கிறீர்களோஅதை அடைந்து விட்டதாகக் உங்கள் மனதை நம்ப வையுங்கள். அதிசயங்கள் நிகழத் தொடங்கும்.
3. பெரிய வார்த்தைகள்: நீங்கள் என்ன தீர்மானித்தீர்கள் என்பதை பொதுவெளியில் பகிருங்கள். உங்கள் உடன் பணியாற்றுபவர்கள், உங்களை சார்ந்து இருப்பவர்கள், உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் என பலரிடமும் உங்கள் தீர்மானத்தை பகிரங்கப் படுத்துங்கள்.
நீங்களே ஒரு வேளை அதை நம்பவில்லை என்றாலும் கூட உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் அது சார்ந்து அதிகம் விசாரிக்கத் தொடங்கி, உங்களை உந்தித் தள்ளுவார்கள். சுற்றியுள்ளவர்கள் நம்பத் தொடங்குகிற போது, அந்த நம்பிக்கை உங்களையும் தொற்றிக் கொள்ளும். தீர்மானங்களை வெளியில் சொல்லும்போது அது சமூக நோக்கோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
“நான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறேன்”, “அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் பேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” போன்ற தீர்மானங்களை சமூக நோக்கோடு பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்கும் போது, உங்கள் மீதான மதிப்பு அதிகமாவதுடன், நேசக் கரங்களும் உங்களை நோக்கி நீளத் தொடங்கும்.
4. பெரிய செயல்கள்: எல்லா தீர்மானங்களும், கனவுகளும், வார்த்தைகளும் செயலில்தான் தொடங்குகின்றன. நாள்தோறும் தீர்மானங்களை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். அதிக நேரம் உழையுங்கள். அதிகமனிதர்களைச் சந்தியுங்கள். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வெறியோடு பயணித்துக் கொண்டே இருங்கள்.
‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்’ என்று சார்லஸ் டார்வின் சொன்னது மாதிரி,எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இயங்கிதகுதியை அதிகரித்துக் கொண்டே இருங்கள். உங்கள் இயக்கத்தை நிறுத்த உங்களால் கூட முடியாது என்பது போல பந்தயத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள்.
- rkcatalyst@gmail.com