

இந்த தொடரின் முதல் பகுதியில் எல்லோரும் பணக்காரர் ஆவதற்கான பல்வேறு வழிமுறைகளை பார்த்தோம். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நாம் எங்கு போய் சேர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்வது முக்கியமல்லவா.அதற்கான இலக்கை இப்போது நிர்ணயிக்கலாம்.
நம்முடைய பெற்றோர் நமக்கு சிறுவயதிலிருந்தே பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். அவை ஒழுக்கம், கல்வி மற்றும் நம் முன்னேற்றத்துக்கு தேவையான மற்றபல விஷயங்களாக இருக்கலாம்.
ஆனால், பணத்தை வேலை செய்ய வைத்து, அதை மீண்டும் பல மடங்காக பெருக்குவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொடுக்க தவறி விடுகின்றனர். இதற்கு சில பெற்றோர் விதிவிலக்கு.
குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தச் செய்தி கண்டிப்பாக போய்ச் சேர வேண்டும். அவர்களை முன்னிறுத்தியே இந்த எடுத்துக்காட்டை இப்போது நான் கொடுக்கிறேன்.
சராசரி குடிமகன்: நான் ஒரு சராசரி குடிமகன். என்னுடைய பெற்றோர் கஷ்டப்பட்டு என்னை பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வைத்து, ஒரு வேலையில் சேரவும் உதவி செய்தனர். நானும் வேலைக்கு சேர்ந்து, என்னுடைய தினசரி பொருளாதாரம், வாழ்க்கையை உயர்த்திக் கொண்டேன். நல்ல உடை உடுத்திக் கொள்கிறேன், நல்ல உணவு உண்கிறேன். என்னால் இப்போது நன்றாக செலவு செய்ய முடிகிறது.
எனக்கு 28 வயதாகும்போது, என் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். இப்போது என் குடும்பம் சற்றே பெரிதாக மாறுகிறது. அடுத்த 5 வருடங்களில் எனக்கு 2 குழந்தைகள். அதன் பிறகு அவர்களுடைய பள்ளிப் படிப்பு செலவு, வீட்டு செலவு, பொழுதுபோக்கு செலவு போன்றவைகளால் என் வருமானம் முழுவதும் செலவாகிவிடுகிறது.
வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வீடு வாங்குகிறோம், வீட்டுக்கு தேவையான நவீன சாதனங்களை வாங்குகிறோம். இதன் மூலம் மாதா மாதம் தவணை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். அதன்பின் பிள்ளைகளின் உயர்கல்வி, அவர்களின் திருமணம் என்று மூச்சு பிடித்து எல்லா செலவும் செய்து முடிக்கும்போது, நமக்கு 60 வயதாகி பணி ஓய்வு பெறுகிறோம்.
இனி வருமானம் இல்லை. ஆனால் செலவு மட்டும் தொடரும். வயதாகிவிட்டது, மருத்துவ செலவு, போக்குவரத்து செலவு, வாழ்க்கைத் தரத்தை தொடர செலவு என நீள்கிறது. இனி யாரை நம்பி வாழ்வது, பிள்ளையை நம்பியா அல்லது மருமகளின் கருணையை நம்பியா?
இதற்கு எல்லாம் தீர்வுதான் என்ன.. தமிழில் 'காலத்தே பயிர் செய்' என்று ஒரு பழமொழி உண்டு. இது விவசாயத்துக்கு மட்டும் அல்ல. பணத்தையும் காலத்தே பயிர் செய்து, அறுவடை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக நாம் எவ்வளவு சீக்கிரம் திட்டமிடுகிறோமோ அந்த அளவுக்கு பலனும் அதிகமாக கிடைக்கும்.
எப்படி செய்வது? - பண ரீதியாக இலக்கு நிர்ணயம் செய்ய, நான் இரண்டு வழிமுறைகளை கூறுகிறேன். முதலாவது, வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்தில் இருந்து ஒரு சிறு தொகையை சேமிப்பது. அது உங்கள் வசதிக்கு ஏற்ப, கூட குறைய இருக்கலாம். நான் மாதம் ரூ.1,000/- சேமிப்பதாக எடுத்துக்கொள்கிறேன். அதை வருடத்துக்கு 20% வருமானம் தரும் விதத்தில் முதலீடு செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். அந்த 20% எங்கே கிடைக்கும் என்பதை நாம் தெளிவாக வரும் தொடர்களில் பார்க்கலாம்.
சரி இலக்குக்கு வருவோம். மேற்சொன்னபடி, 25 வயதில் மாதம் ரூ.1,000/- முதலீட்டில் எந்த மாதிரியான இலக்கை அடைவோம் என்று பார்க்கலாமா? மாதம் ரூ.1,000/- என்று எடுத்துகொண்டடால், வருடத்துக்கு ரூ.12,000/- ஆகும். 30 வருடத்துக்கு கணக்கிட்டால், அது ரூ.3.60 லட்சம் ஆகும். இந்த தொகை எவ்வளவாக மாறும். இரண்டு மடங்கா, மூன்ற மடங்கா, நான்கு மடங்கா அல்லது பத்து மடங்காகவா?
மாதம் ரூ.1,000/- முதலீடு என்பது 30 வருடங்களில், 20% வருமானத்தைக் கொடுத்தால் அது ரூ. 2.33 கோடியாக மாறுகிறது. இதைத்தான் Power Of Compounding என்று அழைக்கிறோம்.
இதைவிட இன்னொரு வழியைப் பார்க்கலாம். அதாவது, நீங்கள் 25 வயதில் வேலைக்கு போகும்போது, உங்கள் செலவு குறைவாகத்தான் இருக்கும். முதல் வருட வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்து, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயை (ஒருமுறை) முதலீடு செய்தால், அது 20% வருமானத்தை கொடுத்தால், அதே 30 வருட காலகட்டதில் அந்த தொகை எவ்வளவாக மாறும் தெரியுமா?
ஒரு லட்சம் முதலீடு 30 வருடத்தில் (20% வருமானத்தை ஈட்டினால்) அது ரூ.2.37 கோடியாக மாறும். நாம் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது நம் கணக்கில் சில கோடிகள் இருந்தால், வயதான காலத்திலும், தலைநிமிர்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் அல்லவா!
பணத்தை எங்கே முதலீடு செய்தால், எவ்வளவு வரும் என்பதை வரும் தொடர்களில் பார்க்கலாம்.
- trarulrajhan@ectra.in