

பணம் என்பது எல்லோருக்கும் உயிர் மூச்சாகத்தான் இருக்கிறது. எல்லோரும் பணம் சம்பாதிக்கவே வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எல்லோரும் பணக்காரராகவே ஆசைப்படுகிறோம். ஆனால் பணக்காரர்கள் ஏன் பணக்காரர் ஆனார்கள் என்பதற்கான சூட்சமத்தை நாம் அறிய முயற்சி செய்வதில்லை. ஏதோ அது அவர்கள் அதிர்ஷ்டம். அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். இது நம் தலைவிதி. நாம் ஏழைகளாக இருக்கிறோம் என்று புலம்பி விட்டு விடுகிறோம்.
பணக்காரர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கிறார்கள். ஒரு வழி பிரச்சினை
யாக இருந்தாலும் மற்ற வழி களில் இருந்து அவர்களுக்கு பணம்வந்து கொண்டிருக்கும். ஆகவே அடிப்படையில் பணக்காரர் ஆக வேண்டுமானால் 2-வது வருமானம், 3-வது வருமானம் என்ற வழிமுறைகளை நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.
எல்லோருடைய மனதிலும் ஓடும் கேள்வி என்னவென்றால் ஒரு வருமானத்தையே உருவாக்க முடியவில்லை? அப்படி உருவாக்கினாலும் அதை தக்கவைக்க முடியவில்லை.அப்படி இருக்கும்போது எப்படி இரண்டாவது வருமானம், மூன்றாவது வருமானத்தை பற்றி யோசிக்க முடியும்? இந்த யோசனை எல்லாருக்கும் வரத்தான் செய்யும்.
நாம் முதல் வருமானமாக வைத்திருப்பதைப் பற்றி முதலில் பார்க்கலாம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் நாம் உழைக்க வேண்டும். அப்படி தொடர்ந்து உழைக்கும்போது மாதந்தோறும் வருமானம் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்றால் கூடுதல் நேரம் பணிபுரியலாம். இன்னும் வேறு எப்படி சம்பாதிக்கலாம் ? இப்போது செய்கிற வேலையைத் தாண்டி மாலை நேரத்திலோ அல்லது இரவிலோ மற்றொரு கூடுதல் வேலை செய்து ஒரு கூடுதல் வருமானம் வருவதற்கும் யோசிக்கலாம்.
இவற்றையெல்லாம் நாம் நேரிடையான வருமானம் ( Active Income)என்று சொல்லலாம். நமக்கும் 24 மணி நேரம்தான், பணக்காரர்களுக்கும் அதே 24 மணி நேரம்தான். நாம என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் பணக்காரர்கள் ஆவது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. ஆனால் பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களும் இதுபோல் முதலில் ஓடி சம்பாதித்து இருப்பார்கள். அடுத்த கட்டமாக அவ்வாறு சம்பாதித்த பணத்தை முதலீடாகக் கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள். இதை மறைமுக வருமானம் (Passive Income) என்று அழைக்கிறோம்.
இதற்காக அவர்கள் கொஞ்ச நேரம் செலவிடத்தான் செய்கிறார்கள். அதற்கான திட்டம் வகுத்து முடித்த பிறகு அந்த முதலீட்டு திட்டமே அவர்களுக்கு தொடர் வருமானத்தைக் கொடுக்கிறது. கூடவே அந்த முதலீட்டுத் தொகை படிப்படியாக பெரிய சொத்தாகவும் மாறுகிறது. இந்த சொத்து கூடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் பணக்காரர்களாக மாறுகிறார்கள். பணக்காரர்கள் எப்படி 7 வகையில் சம்பாதிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
முதல் வகை நேரடி வருமானம். தாங்கள் நேரடியாக குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்து சம்பாதிப்பது. அது வியாபாரம் அல்லது நாம் இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்வதன் மூலம் வரக்கூடிய சம்பளமாக இருக்கலாம். இரண்டாவது, நம் முதலீட்டின் மீது வரக்கூடிய வட்டி வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக நாம் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் போடக்கூடிய வைப்பு போன்றவற்றை சொல்லலாம்.
மூன்றாவது, டிவிடெண்ட் வருமானம் என்று சொல்வார்கள். அதாவது நம்முடைய பணத்தை வங்கியில் போடுவது போல தரமான சில பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது வரக்கூடிய வருமானம். டிவிடெண்ட் என்பது நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு வழங்குவதாகும். எடுத்துக்காட்டாக கோல் இந்தியா என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஒரு பங்குக்கு சுமார் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் டிவிடெண்ட் ஆக வழங்குகிறது. எளிதாக கணக்கு போடுவதாக இருந்தால் இந்தப் பங்கின் விலை இதே காலகட்டத்தில் ரூ.200 ஆக இருந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.
கணக்கின்படி 20 ரூபாய் என்பது, இருநூறு ரூபாய் பங்கில் 10% என்று எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் பங்கின் விலையில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மாற்றங்கள் நிகழலாம். அடிப்படையில் வலிமையான பங்காக இருந்தால் நாம் அதைப் பற்றி பயப்பட வேண்டாம்.
இறங்கிய பங்குகள் நீண்ட கால அடிப்படையில் மீண்டும் எழும். இதெல்லாம் தாண்டி வாடகை வருமானம் , சொத்தின் மதிப்பு கூடுதல் மூலமாக வரக்கூடிய வருமானம் , ராயல்டி வருமானம் , வியாபாரம் மூலமாக வரக்கூடிய வருமானம் என்பவை மற்ற வகை வருமானங்கள் ஆகும். இதை எல்லாம் நாமும் செய்ய முடியுமா? முடியும் என்பதற்காகதான் இந்தத் தொடர். வாருங்கள் நாமும் பணக்காரர் ஆகலாம்.