பிரபலமாகும் கார் பகிர்வு சவாரி

பிரபலமாகும் கார் பகிர்வு சவாரி
Updated on
1 min read

1973-ம் ஆண்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் உலகளவில் கார் பகிர்வு சவாரி மிகவும் பிரபலமானது. அலுவலகம் உள்ளிட்ட ஒரே இடத்தை நோக்கி பயணிக்க நினைப்பவர்கள், காரின் இருக்கைகளை பகிந்து கொள்வது கார்பூலிங் (carpooling) என்று அழைக்கப்படுகிறது. காரில் காலியாக இருக்கும் இருக்கைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு நபரின் பயணச் செலவு என்பது கணிசமாக குறைகிறது. குறிப்பாக, எரிபொருள், சுங்கச் சாவடி கட்டணம் ஆகியவற்றை காரில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

அத்துடன், வாகனத்தை ஒருவரே ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தமும் தடுக்கப்படுகிறது. இதற்கு, அந்த காரில் பயணிக்கும் மற்றவர்களும் ஓட்டுநர் பணியை பகிர்ந்து கொள்வது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கார் பகிர்வின் மற்றொரு சிறப்பு அம்சம் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவு தடுக்கப்படுகிறது. கார் பகிர்வு முறையில் பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்தி அலுவலகங்களுக்கு செல்லும் நிலையில், வாகனப் போக்குவரத்து குறைந்து கார்பன் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகனத்தை நிறுத்துவதற்கான இடங்களின் தேவையும் குறைகிறது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் கார் பகிர்வு சேவையை ஊக்குவித்து வருகின்றன.

தற்போது இந்தியாவிலும் கார் பகிர்வு முறை பிரபலமடைந்து வருகிறது. கார் பகிர்வு சேவையை பயன்படுத்தும் பெங்களூருவில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், “பெங்களூரு சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். பேருந்தில் சென்றால் 20கி.மீ. தொலைவில் உள்ள அலுவலகத்தை அடைய 2 மணி நேரத்துக்கும் மேலாகி விடும்.

தனியாக வாடகைக் காரில் சென்றால் அதிக செலவாகும். இந்த மாதிரியான நேரத்தில் கார் பகிர்வு சேவையை வழங்கி வரும் 'குயிக் ரைட்' போன்ற செயலிகள் பெரும் உதவியாக உள்ளன. தனியாக கார் புக் செய்து பயணிக்க ரூ.300 - ரூ.400 ஆகும் நிலையில் கார்பூலிங் செயலி மூலமாக பயணிக்க ரூ.70 - 100 மட்டுமே செலவாகிறது. மாதாந்திர அடிப்படையில் கணிசமான தொகை மிச்சமாகிறது.

கார்பூலிங்கில் இதுபோன்ற நன்மைகள் இருந்தாலும், முகம் தெரியாதவர்களுடன் ஒன்றாக பயணிக்கும்போது அதிக ஆபத்தும் இருப்பதை முழுமையாக புறம்தள்ள முடியாது. இதைத் தவிர்ப்பதற்கு, முன்பே அறிமுகமானவர்களுடன் பயணிப்பது சிறந்தது. காரை பகிர்ந்து கொள்ளும் நபர்களின் தகவல்கள் உண்மையானவையா என்பதுடன், அவர்களின் அரசாங்க அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அவருக்கு எவ்வளவு ரேட்டிங்கை வழங்கியுள்ளார்கள் என்பதையும் கூர்ந்து கவனித்தால் கார் பகிர்வு பயணம் நமக்கு பாதுகாப்பானதாக அமையும்" என்கிறார். கார் பகிர்வு சேவை இந்திய நகரங்களில் பரவலான பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், அன்றாட போக்குவரத்து நடைமுறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in