தொழில்நுட்ப மயமாகும் சில்லறை வணிகத் துறை

தொழில்நுட்ப மயமாகும் சில்லறை வணிகத் துறை
Updated on
2 min read

இந்தியாவின் சில்லறை வணிகச் சந்தை இனி வரும் நாள்களில் பெரும் மாற்றத்தைச் சந்திக்க இருக்கிறது. சில்லறை வணிகச் சந்தையின் ஒரு பகுதியான இ-காமர்ஸ் துறையானது 2026-ம் ஆண்டில் ரூ.12 லட்சம் கோடி விற்பனையைத் தொடும் எனவும், சில மணி நேரத்தில் ட்ரோன்கள் மூலம் பொருள்கள் டெலிவரி செய்வது சாத்தியமாகும் எனவும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ட்ரோன் மூலம் விநியோகம்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசொஸ், 2013-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், “ட்ரோன் மூலம் பொருள்களை டெலிவரி செய்வது ஒன்றும் அறிவியல் புனைக்கதை இல்லை. இனிவரும் காலத்தில் சாத்தியமே” என்று கூறினார். அதை மெய்ப்பிக்கும் விதமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அமேசான் தனது முதல் ட்ரோன் டெலிவரி பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அமெரிக்காவில் இரண்டு நகரங்களில் மட்டும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொண்டு அதில்வெற்றியும் பெற்றது.

பத்தாண்டுகளுக்கு முன்பு வெறும் யோசனையாக இருந்த ஒன்று இன்றைக்குச் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. இனிவரும் நாள்களில் ட்ரோன் டெலிவரி என்பது லாஜிஸ்டிக்ஸ் துறையைப் புரட்டிப் போடக் கூடும். அமெரிக்காவைச் சேர்ந்த ஜிப்லைன் (Zipline) என்கிற நிறுவனம் 2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ருவாண்டாவில் மருத்துவப் பொருள்களை டெலிவரி செய்ய தொடங்கப்பட்ட இந்நிறுவனம், காலப்போக்கில் உணவு, அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்கள், விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய ஆரம்பித்தது.

இந்நிறுவனம் இதுவரையில் 73 லட்சம் பொருள்களை 7 லட்சம் ட்ரோன் டெலிவரி மூலம் செய்து உலகத்திலேயே பெரிய ட்ரோன் லாஜிஸ்டிக் நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. உலகில் பல நாடுகள் ட்ரோன் வழி டெலிவரியை பரீட்சித்துப் பார்த்து வருவது போல இந்தியாவிலும் ஸ்விக்கி, டாடா 1mg, இந்தியா போஸ்ட் போன்றவையும் சோதனை செய்து வருகின்றன. கரோனா காலத்தில் தொலைதூரத்தில் இருக்கும் இடங்களுக்கு மருந்துகள், தடுப்பூசி போன்றவை சிறிய அளவில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்டன.

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பொருத்தளவில் இந்தியாவானது தாராளக் கொள்கையைக் கொண்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவின் வான்வெளியில் 90 சதவீதப் பகுதி ‘green zone’ என அழைக்கப்பட்டு 400 அடி உயரம் வரை ட்ரோன் பறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு ட்ரோன்களைத் தயாரிப்பதற்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ் பல நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

விமானத்துறை அமைச்சகமானது 2026 ஆம் ஆண்டு ட்ரோனின் உள்நாட்டுச் சந்தை ரூ.15,000 கோடியாக இருக்கும் எனவும் ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. தற்சமயம் ட்ரோன் தயாரிப்புக்குத் தேவையான பொருள்களில் சுமார் 65 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. நாளடைவில் இந்த அளவு குறையக்கூடும்.

புதிய மெய்நிகர் அனுபவம்: சில்லறை வணிகத் துறையில் அடுத்த பெரிய விஷயம் augmentedreality. மக்கள் ஆன்லைனில் வாங்குவதை அதிகரிக்க புதிய மெய்நிகர் அனுபவத்தை வழங்கும் முயற்சியில் விற்பனையாளர்கள் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு AR தொழில்நுட்பம் பெரும் உதவியாக உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போனில் ஷூ வாங்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். AR மூலம், கேமராவை உங்கள் காலடியில் சுட்டிக்காட்டி நீங்கள் விரும்பும் ஷுவை உங்கள் கால்களில் அணிந்தால் எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் பார்த்து, திருப்தியடைந்தால் அதன் பின் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒப்பனைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமான L'Oreal, AR தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட செயலியைப் பயன்படுத்தி வருகிறது. பொருள் வாங்குபவர்கள் தங்களது முகத்தைத் தொடாமல் வெவ்வேறு ஒபபனைப் பொருட்களை முயன்று பார்க்க அனுமதிக்கிறது.

மெய்நிகர் (virtual) முறையில் உடைகளை அணிந்து பார்ப்பதற்காக H&M (Hennes& Mauritz) என்கிற நிறுவனம் அதன் கடைகளில் ஸ்மார்ட் கண்ணாடிகளை நிறுவி பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கை ரேகை மூலம் பணம் செலுத்தலாம்: இன்றைக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையானது 2017-18 ஆண்டு இருந்ததைவிட நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது (ரூ.2,071 கோடியிலிருந்து ரூ.8,840 கோடி). இதில் ஆச்சரியமில்லை ஏனெனில் நமது நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே, 2020-ம் ஆண்டில் 60 கோடியாக இருந்த இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 90 கோடியைத் தொடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் கடவுச் சொல், PIN ஆகியவற்றிற்குப் பதிலாக பயோமெட்ரிக் முறையை உபயோகித்துப் பணம் செலுத்துவது பிரபலமாகலாம் என்று கூறப்
படுகிறது.

அதுபோல வழக்கமான கிரெடிட் கார்டுக்குப் பதிலாக ‘buy now pay later’ என்கிற செயல்பாட்டின் மூலம் பொருளை வாங்கிய பின் அதற்கான தொகையை குறிப்பிட்ட கால அளவுக்குள் செலுத்தலாம்.

ஏஐ மயம்: செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் தற்போது அனைத்து தொழில்களிலும் ஊடுருவியுள்ளன. உண்மையில், சில்லறை வணிகம் நீண்ட காலமாக ஏஐ தொழில்நுட்பத்துக்கான சோதனைக் களமாக இருந்து வருகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துவிட்டது. அமேசானில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் நமது முந்தைய ஷாப்பிங் வரலாறு, இருப்பிடம் மற்றும் பிற ஒத்த வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் பழக்கங்களின் அடிப்படையில் நமக்கு தேவையான பொருள்களைப் பரிந்துரைக்கிறது. தற்போது சில்லறை விற்பனை துறையில் செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வருகின்றன.

பொருள்களை வகைப்படுத்தல், புதுமை, விலை நிர்ணயம், சரக்கு மேலாண்மை மற்றும் விநியோகச் சங்கிலி செயல்பாடுகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் உள்ளிட் டவை பெரும் பங்குவகிக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

- sidvigh@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in