வணிக உலகில் பெயர் மாற்றம் ஏன்?

வணிக உலகில் பெயர் மாற்றம் ஏன்?
Updated on
2 min read

பொதுவாகவே பெயர் மாற்றம் என்பது காலத்தின் தேவை கருதியோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ மாற்றப்படும். வணிக உலகில் பெயர் மாற்றம் செய்யும் போக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நிறுவனங்களில் பெயர் மாற்றம் என்பது இரு வகைகளில் நடைபெறும். ஒன்று நிறுவனத்தின் பெயரை முழுதாக மாற்றுவது அல்லது நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் பெயரை (brand) மட்டும் மாற்றுவது. பெரும்பாலும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் பெயரையே (rebranding) மாற்றும் சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் ஆய்வறிக்கை ஒன்று நிறுவனங்களில் 52 சதவீதம் அளவிற்கு பெயர் மாற்றம் என்பது ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைப்பதாலும் அல்லது வேறொரு நிறுவனத்தால் வாங்கப்படுவதாலும் நடைபெறுகிறது என்றும் மீதமுள்ள 48 சதவீதம் என்பது நிறுவனங்கள் தங்களை மேலும் நன்கு புதுமையான வழியில் அடையாளப்படுத்திக் கொள்ள பெயர் மாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளது.

ஒரு நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டியசூழல் ஏற்படுகிறது என்றால் முதலில் வாடிக்கையாளர்களிடத்தில் அதற்கான தகுந்த காரணத்தை தெரிவித்து விட வேண்டும் என்கிறார் ஹார்வர்ட் மேலாண்மைக் கல்லூரியின் பேராசிரியர் ஜில் அவேரி. நாம் செய்த பெயர் மாற்றம் என்பது முறையில்லாத அல்லது தேவையில்லாத ஒன்றாக இருந்தால் நிச்சயம் வாடிக்கையாளர்களிடத்தில் அதனால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்கிறார்.

பெயர் மாற்றம் செய்துவிட்டால் நிச்சயம் ஏதோ புதுமையை வழங்க இருக்கிறார்கள் என்கிற எண்ணம் அனைத்து வாடிக்கையாளர்களையும் தொற்றிக்கொள்ளும். அந்த எண்ணத்திற்கு எந்த வகையிலும் குறை வைக்காமல் காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு நிறுவனங்களுக்கு உண்டு.

சமீப ஆண்டுகளில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தங்கள்பெயரை மாற்றியுள்ளன. பேஸ்புக் நிறுவனம் தனதுபெயரை மெட்டா என்று மாற்றியது. அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் தற்போதுஅதன் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றியுள்ளார்.

கே.எப்.சி நிறுவனத்தின் முந்தைய முழுப்பெயர் கேன்டுகி பிரைடு சிக்கன் என்பதாகும். எனினும் இங்கு பிரைடு (அதாவது வறுவல்) என்பது வாடிக்கையாளர்களிடையே ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை என்பதை அறிந்ததும் சுருக்கமாக கே.எப்.சி என மாற்றி விட்டனர்.

புதியதொரு சூழ்நிலைக்கு அடியெடுத்து வைக்கும் பொருட்டு 2019-ஆம் ஆண்டு டன்கின் டோனட்ஸ் (Dunkin Donuts) என்கிற நிறுவனம் தனதுபெயரை டன்கின் என சுருக்கிக் கொண்டது. அதாவதுஆரம்பத்தில் டோனட்ஸ் என்கிற பெயரில் பேக்கரி வகையிலான உணவுகளை மட்டும் விற்று வந்தது.

பின்னர் குளிர்பானம் பிரிவில் நுழைந்தவுடன் அதில்வருமானம் பெருக, அவர்களின் அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் டன்கின் என்று சுருக்கிக் கொண்டனர். மேலும் அமெரிக்காவே டன்கின் மூலம் இயங்குகிறது என்னும் அடைமொழிக்கு வலு சேர்க்கும் வகையில் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது.

ஒரு புறம் பெயர் மாற்றம் என்பது நிறுவனங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தாலும் மற்றொரு புறம் செலவினங்களையும் அதிகரித்து விடுகிறது. பெயர் மாற்றத்துக்கான யோசனையில் தொடங்கி அதற்கான ஆலோசனைகள், இலச்சினை வடிவமைப்பு என$40,000 வரை செலவு ஆகும் என்கிறது போர்ப்ஸ் இதழ்.

வரலாற்றில் பெயர் மாற்றம் என்பது பல்வேறு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவசியம் என்றால் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தேவையின்றி பெயர் மாற்றம் செய்ய முற்பட்டால் அவை சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக வாய்ப்பு உண்டு என்கின்றனர்.

- saraths1995@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in