

ஆன்லைன் செயலி மூலமாக 24 மணி நேரமும் பலசரக்குபொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனமானஸெப்டோ கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இது தற்போது, நாடு முழுவதும் 220-க்கும் மேற்பட்ட விநியோக கிடங்குகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த சிறுவயது நண்பர்களான ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோரா ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பிய அவர்கள், தங்களது 20-வது வயதில் ஸெப்டோ என்ற பெயரில் இந்நிறுவனத்தை தொடங்கினர்.
மக்களுக்கு தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை 10 நிமிடங்களுக்குள் கொண்டு சேர்ப்பது என்ற புத்தாக்க சிந்தனையுடன் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் மும்பையில் தொடங்கப்பட்ட ஸெப்டோ, பின்னர் பெங்களூரு, புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இவர்கள் தொடங்கிய நிறுவனத்தின் மதிப்பு 5 மாதங்களிலேயே ரூ.4,300 கோடியாக வளர்ந்தது.
இந்த நிலையில், தற்போது துணிகர முதலீடு வாயிலாக மேலும் 1.4 பில்லியன் டாலரை (ரூ.11,500 கோடி) திரட்டிய ஸெப்டோ, யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஒரு ஸ்டார்ட் -அப் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலரை(ரூ.8,300 கோடி) தாண்டும்பட்சத்தில் அது யுனிகார்ன் அந்தஸ்துக்கு மாறிவிடுகிறது. ஸ்டெப்ஸ்டோன் குரூப்,குட்வாட்டர் கேபிடல் மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து 200 மில்லியன் டாலர்களை ஸெப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இன்னும் 15 மாதங்களில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக ஸெப்டோ மாறுவதுடன், 2-3 ஆண்டுகளில் பொது பங்குவெளியீட்டையும் மேற்கொள்ளும் என்று அதன் முதலீட்டாளர்களில் ஒருவரான ஒய் காம்பினேட்டர் தெரிவித்துள்ளது. மிக இளம் வயது நிறுவனர்கள் உருவாக்கிய நிறுவனமொன்று யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கோபஃப் , ஐரோப்பாவின் கெட்டிர் போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கடினமான சூழலை எதிர்கொண்டு வேலைவாய்ப்புகளை குறைத்துவரும் சூழ்நிலையில், ஸெப்டோ யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது ஏனைய நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்நாட்டில் ஆல்பபெட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் டன்ஸோ, ஸோமொட்டோவின் பிலின்கிட், நாஸ்பெர்ஸ்-ன் இன்ஸ்டாமார்ட் ஆகிய நிறுவனங்களும் ஸெப்டோவுக்கு கடும் போட்டியாக அமைந்துள்ளன.
உலகம் முழுவதும் இளைஞர்களின் புதிய சிந்தனையால் உருவாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், 2022-ம்ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் முதல் அரையாண்டில் துணிகர முதலீடானது 72 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக டிராக்ஸன் டெக்னாலஜீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலகட்டத்தில் 19 யுனிகார்ன் நிறுவனங்கள் உதயமான நிலையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டு காலத்தில் இந்தியாவில் ஒரு நிறுவனம் கூட யுனிகார்ன் அந்தஸ்தை பெறவில்லை என்று டிராக்ஸன் டெக்னாலஜீஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சில்லறை வர்த்தக சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தையைக் கைப்பற்ற அமேசான் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இருப்பினும், அவை ஆன்லைன் விற்பனையின் மொத்த பங்கில் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஸெப்டோவின் சீரிய செயல்பாடுகளால் மார்ச் மாதத்தில் அதன் விற்பனை முந்தைய ஆண்டை விட 300 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அதன் நிறுவனர்களில் ஒருவரான பாலிச்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஸெப்டோவின் சராசரி டெலிவரி நேரம் 12 நிமிடங்களாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்ப்பதில் அதிக கவனத்துடனும், வேகத்துடனும் செயலாற்றி வருகிறோம். 7,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் ஸெப்டோ ஸ்டோர் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுவருவாய் சுமார் ரூ.5,000 கோடியை எட்டியுள்ளது" என்றார்.
விரைவான வர்த்தகம் என்ற புதிய சிந்தனையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும்பட்சத்தில் அமேசான் போன்ற பெரிய வணிக சாம்ராஜ்யமாக ஸெப்டோ உருவெடுக்க முடியும் என்கிறார் நம்பிக்கை மிளிரும் கண்களுடன் பாலிச்சா.
rajanpalanikumar.a@hindutamil.co.in