

இந்திய வணிகத் துறை தலைவர்களில் பெரிதும் மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவர் எஸ்.ராமதுரை. உலக அளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ), நிர்வாக இயக்குநராகவும் இருந்து அதை வளர்த் தெடுத்தவர்.
39 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.ராமதுரை, ‘TCS ஒரு வெற்றிக்கதை’(தமிழில் கி.இராமன், கிழக்கு பதிப்பகம்) என்ற நூலை எழுதி இருக்கிறார். தற்போது டெல்லியில் தன் மனைவி மாலாவுடன் வசித்துவருகிறார் எஸ்.ராமதுரை. அவருடனான உரையாடலிலிருந்து...
தமிழில் நன்றாக பேசுகிறீர்கள். உங்களது தமிழகப் பூர்வீகம் பற்றி அவ்வளவாக தெரியவில்லையே? - என்னுடைய அப்பாவின் பூர்வீகம் தஞ்சாவூர் பக்கத்தில் சேங்காலிபுரம். பக்தி இலக்கியங்களில் இந்த ஊரை சிவகாளிபுரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு கும்பகோணம் பக்கத்தில் ஒரு காவிரி கரையோர கிராமம். அம்மாவின் உறவினர்கள் நாக்பூரில் இருந்ததால் கல்யாணத்துக்கு பிறகு என் அப்பாவும் அம்மாவும் நாக்பூருக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.
நான் நாக்பூரில்தான் பிறந்தேன். பின்னர் அப்பாவுக்கு டெல்லியில் வேலை கிடைத்ததால் அங்குள்ள மதராஸி அசோசியஷன் பள்ளியில் கணக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. நான் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் படித்தேன். அப்போது வீட்டில் இருந்த ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற இதழ்களை படித்ததால் தமிழில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தமிழில் துணுக்குகள் கூட எழுதி இருக்கிறேன்.
கோடை விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சேங்காலிபுரத்தில் இருந்த என் பாட்டி மதுரத்தம்மாளை பார்க்க போவோம். அங்கே ஆற்றில் குளித்து, பல்லாங்குழி விளையாடி, வயலில் நாற்று நட்டு பால்ய காலத்தை கழித்திருக்கிறேன். சேங்காலிபுரம் முத்தண்ணா அனந்தராம தீட்சிதர் ஆகியோரின் பாடல்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ராமா
யண, மகாபாரத கதாகலேட்சபங்களில் மூழ்கி போய் இருக்கிறேன்.
சேங்காலிபுரத்தில் இருந்து நாக்பூர் அங்கிருந்து அமெரிக்கா என நீண்ட உங்களது பயணத்தை பற்றி சொல்லுங்கள்? - டெல்லி ஹன்ஸ் ராஜ் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆனேன். அதனால் பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மையத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்புத்துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு படிப்பை முடித்தவுடன் அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஆனால் நான் அமெரிக்காவில் முனைவர் படிப்பு படிக்க விரும்பினேன். அங்கு படிப்பை முடித்ததும் 12 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்த சமயத்தில் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்தும் பணியாற்ற அழைப்பு வந்தது. ஏதோ ஒரு வகையில் இந்தியாவுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதால் பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1972-ல் டிசிஎஸ்ஸில் இணைந்தேன்.
டிசிஎஸ் நிறுவனத்தில் சாதாரண நிலையில் இருந்து, அதன் நிர்வாக இயக்குநராக உயர்ந்து இருக்கிறீர்கள். 39 ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்துக்காக பணியாற்றிய அனுபவத்தை சொல்லுங்கள்? - என் வாழ்நாளின் பெரும்பகுதியை டிசிஎஸ் நிறுவனத்தில் செலவிட்டு இருக்கிறேன். என்னுடைய திறமை மற்றும் உழைப்பின் காரணமாக 1974-ல் டிசிஎஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் மெயின்டனன்ஸ் மற்றும் சப்போர்ட் பிரிவின் பொறுப்பாளர் பதவி கிடைத்தது. எனது முயற்சியால் டிசிஎஸ் நிறுவனம் முதல் பர்ரோஸ் கணினியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தது.
இந்தியாவில் நெருக்கடி நிலையை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் டிசிஎஸ் கிளைகள் தொடங்கப்பட்டன. அமெரிக்க கிளையின் ரெஸிடண்ட் மேலாளராக எனக்கு பதவி உயர்வு கிடைத்தது. 1995-ல் ரத்தன் டாடா டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் தொலை நோக்குடன் பல திட்டங்களை செயல்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, 1996-ல் நான் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். அடுத்த ஆண்டே சோழிங்கநல்லூரில் முதல் குளோபல் டெவலப்மெண்ட் சென்டர் அமைத்தேன். அதன் மூலம் நிறுவனத்தின் வருமானம் ரூ.1,000 கோடியை தொட்டது. 1996 முதல் 2009 வரை 13 ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நான் பொறுப்பு வகித்தேன்.
நான் பதவி ஏற்றபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். எனது தலைமையிலான அணி கடுமையாக உழைத்ததன் விளைவாக நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. உலகின் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது. இதன் பின்னணியில் நானும் ஒரு காரணியாக இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் எத்தகைய மாற்றம் நிகழ்ந்தது? - கரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்றி, சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது அற்புதமானது. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் வீட்டுக்கே கணினி, இணையதள வசதி ஆகியவற்றை வழங்கியதன் விளைவாகவும், நமது சமூகக் கட்டமைப்பின் திறனும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது. வாடிக்கையாளர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சேவையை பெற்றனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மத்திய அரசின் திறமை மேம்பாட்டு ஆலோசகராக பணியாற்றினீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது? - அந்த காலக்கட்டத்தில் நாட்டின் பொது சுகாதாரம், கல்வி, தொழிற்கல்வி, காலநிலை மாற்றம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய
தளங்களில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினேன். கிராமப்புறங்களில் சிறந்த மருத்துவமனை, தரமான கல்வி வழங்குவதற்காக திட்டங்களை தீட்டினோம். புதிய தொழில் முனைவோரை அரசின் திட்டங்களோடு இணைத்தேன்.
அதனால் நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு மாநிலங்களிலும் பயணித்தேன். ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். அப்போது நம் தேசத்தின் இளைஞர்கள் தோல்விக்கு ஒருபோதும் அஞ்சுவதில்லை என கண்கூடாக கண்டேன். நம் இளைஞர்கள் தோல்வியுற்றாலும் மதிப்புமிக்க பாடங்களையும் அனுபவங்களையும் கற்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
‘டிசிஎஸ் வெற்றிக் கதை' நூலை எழுத என்ன காரணம்? இந்த நூலுக்கு தமிழில் வரவேற்பு எப்படி இருக்கிறது? - டிசிஎஸ் பற்றி யாரும் புத்தகம் எழுதாததால், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக தெரிந்த என்னை எழுதுமாறு நிறைய பேர் கோரிக்கை வைத்தனர். கிட்டத்தட்ட எனது 40 வருட அனுபவத்தை யோசித்து பார்ப்பதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னர் என்னுடன் பணியாற்றிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எழுத தொடங்கினேன்.
நிறுவனத்தின் முக்கிய ஆண்டுகள், அதன் தேதிகள், அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், அமைக்கப்பட்ட மையங்கள், வாடிக்கையாளர்கள் ஆகியவற்றை நுட்பமாக கண்டறிந்து உண்மை தன்மையோடு எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. நான் ஆங்கிலத்தில் எழுதிய நூல்11 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கி.ராமன் சிறப்பாக, மிக எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படியாக மொழிபெயர்த்திருக்கிறார்.
எப்போதும் அலுவலகம், ஆலோசனை கூட்டங்கள் என பரபரப்பாக இருந்த நீங்கள் இப்போது, ஓய்வு காலத்தை எப்படி கழிக்கிறீர்கள்? - கார்ப்பரேட் உலகில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்த சமூகத்துக்கு நன்மை செய்யும் வேலையில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பொறியியல், தொழில்நுட்பம் படித்த புதிய தலைமுறையினருக்கும், தொழில் முனைவோருக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன். குடும்பத்தினர் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். வாரத்திற்கு இருமுறை கோல்ஃப் விளையாடுகிறேன். வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சென்று புகைப்படம் எடுக்கிறேன்.
குஜராத், கென்யா, தென்னாப்பிரிக்கா என பல இடங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருக்கிறேன். கர்நாடக செவ்வியல் இசையை நாள்தோறும் கேட்கிறேன். எவ்வளவு பரபரப்பான சூழலிலும் 'ஓம் சரவண பவ' பாடலை முணுமுணுக்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட், கவுரவ தலைவர் பதவி, ஆலோசகர் பொறுப்பு என நாட்கள் இப்போதும் பிஸியாகவே நகர்கின்றன.
- vinoth.r@hindutamil.co.in