பணமின்றி அசையாது உலகு 14 | தொடர் முதலீடு எனும் எஸ்.ஐ.பி

பணமின்றி அசையாது உலகு 14 | தொடர் முதலீடு எனும் எஸ்.ஐ.பி
Updated on
2 min read

“என்ன! ரொம்ப மகிழ்ச்சியா இருப்பதுபோல தெரியுது!” என தனது நண்பரிடம் கேட்டார் ரமேஷ்.

“இருக்காதா பின்ன? நல்ல ரிசல்ட் வந்திருக்கில்ல!” என்றார் நண்பர்

“ரிசல்டா? நீ என்ன பரீட்சை ஏதும் எழுதியிருக்கிறாயா?”

“நல்ல வேலையில் இருக்கிறேன். நான் ஏன் பரீட்சை எழுதப்போறேன்? ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் நல்ல லாபம் செய்திருக்கும் ரிசல்ட்டைச் சொன்னேன்”

“SBIக்கும் உனக்கும் என்ன தொடர்பு? நீ வேலை செய்வது ஒரு தனியார் நிறுவனத்தில்தானே!”

“நான் வேலை செய்வது ஒரு தனியார் கம்பெனியில்தான். ஆனால், SBI ஷேர் வைத்திருக்கிறேனே!”

“ஷேர் வைத்திருந்தால்..?”

“அந்த பேங்க் லாபம் செய்தால் அது எனக்கும் தானே நல்லது”

“என்னப்பா! ஸ்டேட் பாங்க் ஓனர் மாதிரி பேசுகிறாய்?”

“ஆமாம். நானும் ஒரு ஓனர்தான்”.

“ஓ..! அப்ப அய்யா, போன மாசம் சம்பளத்துல ஸ்டேட் பாங்கை வாங்கிடீங்க”

“எப்படி சரியா சொல்ற! போன மாச சம்பளத்துல நான் பத்து SBI ஷேர் வாங்கினேன்”.

“ஒ.. ஷேர்தான் வாங்கினாயா?. ஓனருன்னு சொன்னாயே. ஒருகால் பாங்க்கையே வாங்கிட்டியோன்னு நினைச்சேன்”

“ரெண்டும் ஒன்னுதானப்பா”

“எப்படி அரசின் பாங்க், உன் பாங்க் ஆகும்?”

“என்னுடையது மட்டுமில்லை. மத்திய அரசு, உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள், தனிநபர்கள் என என்னைப்போல ஆயிரக்கணக்கானவர்கள் SBI பங்குகளை வெவ்வேறு அளவுகளில் வைத்திருக்கிறோம். கடந்த 12 மாதங்களாக நான், ஒவ்வொருமாதமும் பத்து SBI பங்குகளை வாங்கிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் வாங்குவேன். இப்போதுவரை 120 பங்குகள் சேர்த்திருக்கிறேன். அந்த அளவில் நானும் SBI ஓனர்தான்”.

“ஒரே நிறுவனத்திற்கு பல ஓனர்களா?”

“கூட்டுறவு சங்கத்தில் யார் முதலாளி? எல்லாரும்தானே! அதேபோலதான். ஒரு நிறுவனம் நடத்தத் தேவைப்படும் ‘முதல்’ பணத்தை ஒருவரே போடாமல், பலரிடமிருந்தும் வாங்கினால் அது ‘பப்ளிக் லிமிடெட்’ நிறுவனம். அப்படி பணம் கொடுத்தவர்கள் அனைவரும் பங்குதாரர்கள். அவரவர்கள் கொடுத்த அளவுக்கு முதலாளிகள். மிக அதிகமாக கொடுத்தவர்கள், நிர்வாகம் செய்வார்கள். மற்றவர்கள் பங்குதாரராக இருப்பார்கள். லாப நட்டங்களைப் பொறுத்தவரை எல்லாப் பங்குகளும் சமம். லட்சம் பங்குவைத்திருப்பவருக்கு, லட்ச ரூபாய் டிவி டெண்ட், லாபப்பிரிப்பு கொடுத்தால் 100 பங்கு வைத்திருப்பவருக்கு 100 ரூபாய் கொடுப்பார்கள்”

“அப்ப.. நீ… ஸ்டேட் பாங்க் முதலாளி!!”

“முதலாளியெல்லாம் இல்லை. புரிவதற்காக அப்படிச் சொன்னேன். பங்கு வைத்திருப்பதால், SBI ஷேர் ஹோல்டர்”

“நானும் வாங்கலாமாப்பா?”

“எந்த இந்தியரும் வாங்கலாம். SBI பங்குமட்டுமல்ல. எந்த வங்கி பங்கை மட்டுமல்ல. பட்டியலிடப்பட்டிருக்கும் எந்த நிறுவனபங்குகளை வேண்டுமானாலும் வாங்கலாம்”

“ரிலையன்ஸ், மாருதி, டிவிஎஸ், TCS, இன்ஃபோசிஸ், பஜாஜ்..?”

“ம்ம்.. தாராளமா. யாரும் வாங்கலாம் எந்த அளவிலும் வாங்கலாம்”

“விலை?”

“என்ன விலைக்கு கிடைக்குகிறதோ, அந்த விலைக்கு”

“ SBI ஷேர் நீ வாங்கிய விலை?”

“நான் மாதாமாதம் வாங்கினேன்.அப்படி தொடர்ந்து ஒரே அளவில் வாங்கும் முறைக்குப் பெயர், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்.சுருக்கமாக SIP. நான் வாங்கத் தொடங்கியது, சென்ற செப்டம்பர் மாதம். அப்போது ஒரு SBI ஷேர் விலை 521. அக்டோபரில் 560, மார்ச் மாதம் 505. இப்போது செப்டம்பரில் 660. இப்படியே பல விலைகளில். தங்கம் வாங்கி சேர்ப்பது போலதான்.

எந்த நிறுவனப் பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்தபின் அந்த நிறுவனப் பங்கை, சீட்டு கட்டுவது போல, குறிப்பிட்ட இடைவெளிகளில், கிடைக்கிற விலைகளில் வாங்கிச் சேர்க்கவேண்டும். தொடர்ந்து நன்றாகஇயங்கும் நிறுவனங்களின் பங்குவிலைகள் காலப்போக்கில் உயர்ந்துவிடும். ஐந்து, பத்து ஆண்டுகள் கழித்து, அல்லது ஒரு முக்கியத் தேவை வருகிறபோது, முழுவதையுமோ, ஒரு பகுதியையோ விற்று, பணத்தை எடுத்துவிடலாம்”.

“நானும் SBI ஷேர் வாங்கவா?”

“அதை நீதான் தெரிந்துகொண்டு, முடிவுசெய்ய வேண்டும். தவிர, நேரடியாக பங்குகள்தான் என்றில்லை. இப்படி பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகளையும் SIP முறையில் வாங்கிச்சேர்க்கலாம். அவற்றின் மதிப்பும் பங்குசந்தை நிலவரங்களை ஒட்டி மாறும்.

“நிச்சய லாபம்தானே?”

“லாபமா நட்டமா என்பது வாங்கிச் சேர்க்கும் மற்றும் விற்கும் விலைகளைப் பொருத்தது. பல்வேறு நிலைமைகளை சமாளித்து லாபமீட்டும் நல்ல நிறுவனங்களின் பங்குகளை அல்லது பரஸ்பரநிதி யூனிட்களை சிறிய அளவுகளில் SIP முறையில் வாங்கி, சில ஆண்டுகளுக்கேனும் வைத்திருந்தால் லாபத்தை உறுதி செய்யலாம். மற்றபடி, உடனடி, பெருலாபங்கள் தற்செயலாக கிடைத்தால்தான் உண்டு. நிச்சயமல்ல”

“அப்புறம் எதுக்கு ஷேர், மியூட்சுவல் பண்ட்?

“வங்கி வட்டியை விட கூடுதல் லாபம் கிடைக்கும் வாய்ப்புண்டு. விலை குறையும் ரிஸ்கும் உண்டு. அதனால், நீண்டகாலம் விட்டுவைக்கக்கூடிய, சேமிப்பின் ஒருபகுதியை மட்டும் முதலீடு செய்யலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுத்துத்தான் பணவீக்கத்தை சமாளிக்கனும்”

(அடுத்த வாரம் நிறைவுறும்)

- writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in