பணமின்றி அசையாது உலகு 13 | தங்கம் தப்பில்லை: குடும்பத்தின் ரிசர்வ் பணம் கோல்டு

பணமின்றி அசையாது உலகு 13 | தங்கம் தப்பில்லை: குடும்பத்தின் ரிசர்வ் பணம் கோல்டு
Updated on
2 min read

கணவனும் மனைவியும் வந்திருந்தார்கள்.

“அடிக்கடி நகை வாங்கச் சொல்கிறாள். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான காரணங்கள் சொல்கிறாள். நீங்களே சொல்லுங்கள். தங்க நகை என்பது லாபகரமான முதலீடா?” கணவர் கேட்டார்.

“வீட்டுமனை, நிரந்தர வைப்புத்தொகை, பரஸ்பர நிதிகள்போல நகைகளை ஒரு முழுமையான முதலீட்டுப் பொருளாகப் பார்க்க முடியாது. காரணம், தங்கத்தின் விலை சில காலகட்டங்களில் கூடிக்கொண்டே போகும். வேறுசில சமயங்களில் இறங்கும். அதனால் தங்கத்தில் போடும் பணத்துக்கு நிரந்தர வைப்புத்தொகை போல உறுதியாக குறிபிட்ட அளவு வருமானம் கிடைக்காது”.

“அப்படியென்றால் தங்கம் வாங்கவே கூடாதா?” மனைவி குரலில் வருத்தம்.

“யார் சொன்னது? வாங்கலாமே. சொல்லப்போனால் ஓரளவாவது கட்டாயம் வாங்க வேண்டும்”

“என்னது! கட்டாயம் வாங்கவேண்டுமா?”

“ஆம் முதலீடு செய்யும் போது வருமானம் வருமா என்று பார்ப்பதுபோலவே அது பாதுகாப்பானதா என்றும் பார்க்க வேண்டும். தங்கம் பாதுகாப்பானது”

“அப்படியென்றால் மொத்த சேமிப்புக்கும் தங்கமே வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்கிறீர்கள்!” கேலியாகக் கேட்டார் கணவர்.

“உணவில் பலசுவைகளும் பல்வேறு சத்துகளும் கலந்திருக்க வேண்டும் என்பது போல ஒருவருடைய சேமிப்பும் பலவகை முதலீடுகளில் பிரித்துப் போடப்பட வேண்டும். அந்த சில வகைகளில் தங்கமும் ஒன்று. தங்கத்துக்கு என்று சில சிறப்புகள் உண்டு. நம் வசமே இருக்கும். அவசரத்துக்கு உதவும். நீண்டகாலத்தில் விலை உயரும், போட்ட பணம் மொத்தமாக போய்விடாது.

கரோனா போன்ற மிகப்பெரும் சிக்கல்கள் வரும்போது, மற்றசொத்துகளைக் காட்டிலும் தங்கம் மதிப்பு மிக்கதாகிவிடும். அதனால் குடும்பத்தின் மொத்த சேமிப்பில் ஒருபகுதி தங்கமாக இருப்பதில் தப்பேஇல்லை. குடும்பங்கள் மட்டுமல்ல. தேசங்களே அப்படித்தான் நினைக்கின்றன. அதனால்தான் எல்லாஅரசாங்கங்களும் கணிசமான அளவு தங்கத்தை சேமித்து இருப்பு வைத்துக்கொள்கின்றன.

“இன்வெஸ்ட்மெண்ட் போர்ட்போலியோவில் ஒருபகுதியாக தங்கம் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் சார். அதை ஏன் நகையாக வாங்கி நட்டப்பட வேண்டும்?”

“என்னது, நட்டப்படுகிறீர்களா?”

“இல்லையா பின்னே! கூலி, சேதாரம். வரி”

“தற்போது நாம் பயன்படுத்தும் பைக், கார்களின் விலை சில லட்சங்கள். வாங்கியதை பிறகு விற்றால், ‘செகெண்ட் ஹேண்ட்’ விலைக்குத்தான் போகும். அதேபோல வீடு, இடம் என்று எந்த சொத்து வாங்கினாலும் ‘ஸ்டாம்ப் டூட்டி’ மற்றும் பத்திரச்செலவு. நம்மிடம் வாங்குறவரிடம் அதைக் கேட்க முடியுமா? தருவாரா? அந்தப் பணம் செலவானது செலவானதுதானே! தங்கமும் ஒரு ‘அசெட்’தான். அதை வாங்குகையில் வேறு வகையில் ஒரு செலவு. அதனால் என்ன!”

“அட! இது புதுப் பாயிண்டா இருக்கே சார்! சூப்பர்” என்றார் மனைவி.

“அடிக்கடி மாற்றாதவரை, அதை ஒருமுறை ஆகும் செலவாக ஏற்றுக்கொள்ளலாம்” என்று கணவரும் ஒப்புக்கொண்டார். சில வினாடிகள் கழித்து, “அதையே தங்க நாணயமாக, கட்டியாக வாங்கலாமே! அதை ஏன் நகையாக வாங்க அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?”

“நல்ல கேள்வி. அதற்கு உளவியல் ரீதியாக சில காரணங்கள் இருக்கலாம். சென்ற தலைமுறை வரை பெரும்பாலான பெண்கள் படிக்க, வேலைக்குப் போக முடியவில்லை. குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டிய பொறுப்பு. அதனால் ஆண்களைப் போல் அவர்களால் சம்பாதிக்க, ‘என் பணம்’ என்று என்று சேமித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. குடும்பத்துக்காக கடுமையாக உழைத்தபோதும் ‘என்னுடையது’ என்று குடும்பத்துக்கான பணத்தை அவர்களால் உரிமைக்கொண்டாட முடியவில்லை.

சில பல குடும்பங்களில், கணவன்மார்கள் செய்யும் சில அனாவசிய ஆடம்பர செலவுகளை சமூக, குடும்ப அமைப்புகள் காரணமாக அவர்களால் தட்டிக்கேட்க, தடுக்க முடியவில்லை. ஆனாலும் குடும்பத்தின் நன்மைக்காக ஓரளவையாவது காப்பாற்றி வைக்க அவர்களுக்குத் தோன்றலாம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வழி, ‘எனக்கு தங்க நகைகள் வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டே இருப்பதாக இருக்கலாம்.

நகை வாங்க கணவர் அனுமதிக்க வேண்டும். அவர்தான் பணம் கொடுக்க வேண்டும். ஆனால், நகை வாங்கியபின் அது மனைவியினுடையது. அவர்தான் முழு உரிமையாளர். மனைவியைக் கேட்காமல், அவர் தராமல், கணவன் அதை விற்க முடியாது. இப்படியாக, தேசத்தின் ‘கோல்டு ரிசர்வ்’ போல பெண்களுக்கு வாங்கும் நகை, குடும்பத்தின் ‘கோல்டு ரிசர்வ்’ ஆகிவிடுகிறது”.

‘‘நன்றி. கிளம்புகிறோம் சார்”.

‘‘எங்க?”

‘‘குடும்ப ரிசர்வ்வை அதிகப்படுத்தத்தான்” என்றார் மனைவி வாய்கொள்ளாச் சிரிப்புடன்.

- writersomavalliappan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in