

அவருடைய மொத்த செலவுகளைக் கூட்டிப் பார்த்தேன். 32 ஆயிரம் வந்தது. ஊதியம் உள்பட எல்லாவற்றையும் சேர்த்தால் மாத வருமானம் 30 ஆயிரம்தான். அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
“என்ன சார் செய்ய? விலைவாசி உயர்கிற அளவு வருமானம் கூடவில்லையே” என்றார். “நீங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 10%வது சேமிக்க வேண்டும்” என்றேன். ‘‘ மாதம் மூவாயிரமா! எனக்கும் ஆசைதான். என்ன செய்ய?” என்றார்.
“உங்களுக்கு கீழ் எத்தனை அலுவலர்கள்?”
“இரண்டு பேர்”.
“அவர்கள் மாத ஊதியம் என்ன?’’
“ஒருவருக்கு 18,000. மற்றொருவருக்கு 23,000.’’
‘‘உங்களைக் காட்டிலும் குறைவானவருமானம் உள்ளவர்கள் இன்னும்எவ்வளவோ பேர் சமாளித்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தேவைக்குக்குத்தக்க வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முடியாவிட்டால் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். எப்படியும் விடாமல் சேமித்தே ஆகவேண்டும்”
“சிரமம் சார்”
“ஒரு கதை சொல்லவா?”
ஒரு மாடு பிடி போட்டி. “தம்பி, மொத்தம் மூன்று மாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அனுப்புவோம். நீங்கள் அந்த மூன்றில் ஏதாவது ஒரு மாட்டை பிடித்து அடக்கினால் உங்களுக்கு தங்கச்சங்கிலி பரிசு. எந்த ஒரு காளையையும் அடக்காவிட்டால் ரூ.1000 அபராதம் கட்டவேண்டும்.
வீரர் ஆயத்தமானார். கதவைத் திறந்தார்கள். முதல் மாடு ஓடி வந்தது. அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. நடுத்தர அளவுதான். ஓரளவு சிரமம் என்றாலும் முயன்றால் பிடித்து விடலாம்.
ஆனால், அந்த வீரர் மனதில் ஒரு தயக்கம். ஏன் சிரமப்பட்டு இந்த காளையைப் பிடிக்க வேண்டும்! அதுதான் இன்னும் இரண்டு மாடுகள் இருக்கின்றனவே. “இந்த மாடு போகட்டும். அடுத்ததை அனுப்புங்கள்” என்றார்.
இரண்டாவது மாடு ஓடி வந்தது. அதன் அளவும் முதல் மாட்டின் அளவுதான். பிடிக்கலாம் என்று நெருங்கிய வீரருக்கு அதிர்ச்சி. அந்த காளை மாட்டிற்கு ஒரு கொம்புதான் இருந்தது. மற்றொன்று உடைந்து போய், அந்த இடம் மூளியாக இருந்தது.
ஒரு கொம்பை மட்டும் பிடித்து அடக்குவது மிகவும் சிரமமானது. ‘அடடா! இரண்டு கொம்புகள் இருந்த முதல் மாட்டை விட்டுவிட்டோமே!’ என வருத்தப்பட்டார். ஆனாலும் நல்லவேளையாக இன்னும் ஒரு மாடு இருக்கிறதே என நினைத்து, அதை அனுப்பச் சொல்லி காத்திருந்தார்.
மூன்றாவது மாடு வந்தது. அடடா! அதற்கு கொம்புகளே இல்லை. இரண்டும் உடைந்து மழுங்கிப் போயிருந்தது. பிடிக்க முயற்சித்து வீரர் தரையில் விழுந்து, மாட்டின் காலால் இடறப்பட்டார். மாட்டின் கால் பட்டு, குடல் பிசகிவிட்டது.
தங்கச்சங்கிலி கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அபராதம். மற்றும் வயிற்றில் பலத்த அடி.
அடுத்த ஒரு மாதம் முழுவதும், ‘நான் முதல் மாட்டையே பிடித்திருக்கவேண்டும்’ என்று அங்கலாய்த்துகொண்டே இருந்தார்.
இப்போதைய நிலை சிரமம்போல தெரியலாம். ஏன் வசதிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் வருங்காலம் எப்படியிருக்குமென்று சொல்லமுடியாதே! ஒற்றைக் கொம்போ அல்லது கொம்பே இல்லாத மாடுகளோ வராது என்று சொல்ல முடியுமா?
இப்போதைய வருமானத்தில் முடிந்த அளவு சமாளித்து, ஓரளவேனும் சேமித்தே ஆக வேண்டும். எந்த நிலையில் இருந்தாலும். ‘அழுதாலும், புரண்டாலும் அவள்தான் பிள்ளை பெற்றாகவேண்டும்’ என்பது போல, நீங்களே செய்துகொண்டால்தான் உண்டு.
வருகிற வருமானத்திற்குள் வாழ்வது, அதில் சேமிப்பது என்பது முதல் மாடு பிடிப்பது போல. சிரமமாக இருந்தாலும் முடியாதது அல்ல. வயதாகி தேவைகளும் அதிகமான நேரத்தில் உலகம் எப்படி இருக்குமோ.
இன்றைக்கு 596 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘போயிங் பிசினெஸ் ஜெட் 2’ (BBJ2)என பெயரிடப்பட்டுள்ள தனி ஜெட் விமானம்வைத்திருக்கும் ‘ரிலையன்ஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி சிறுவயதில் ஒன்பது குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றை அறையில் வளர்ந்தவர் என்றால் நம்ப முடிகிறதா?
பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் தரும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அவரது தந்தை திருபாய் அம்பானி, தன் இரு மகன்களையும் வார விடுமுறைகளில் அழைத்துச் சென்றது, கட்டணமில்லாத கடற்கரைக்குத்தான். எப்போதாவதுதான் குடும்பத்தை ஓட்டலுக்கு அழைத்துச்செல்வார். செல்ல மகன்களே ஆனாலும் விரும்பியதை எல்லாம் வாங்கித் தரமாட்டார். ஒரு இனிப்பு அல்லது ஒரு சமோசா. இரண்டில் ஏதாவது ஒன்றுதான்.
‘சிறுக கட்டி பெருக வாழ்’ என்பார்கள் இன்றைய தேவைகள் பெரிதல்ல. வரப்போகிற காலத்தின் தேவைகள் அதிகம்இருக்கலாம். அதனால் இப்போதைய செலவுகளில் கட்டுப்பாடு அவசியம்.
தற்போது செய்யும் எல்லா செலவுகளும் அவசிய மானவையாக இருக்க வாய்ப்பில்லை. சிலவற்றை தள்ளி வைக்க முடியும். வேறு சிலவற்றை குறைத்துக்கொள்ள முடியும், ஒன்றிரெண்டையாவது முற்றிலும்தவிர்த்துவிட முடியும். உணர்வு கலக்காமல் ஆராய வேண்டும்.
ஒரு வகை ‘பென்ஸ் கார்’ விலை ரூ.36லட்சம். ‘மாருதி ஆல்டோ கே 10’ கார் விலைரூ.3.6 லட்சம். இரண்டு கார்களும் பயன்படுத்தப்படுவது போக்குவரத்திற்காகத்தான். அதுதான் காரின் அடிப்படை வேலை. அதாவது காரின் ‘பங்க் ஷன்’ (Function)”.
‘‘பிறகு ஏன் 10 மடங்கு விலை வித்தியாசம்?”
‘‘உபயோகம்தான் ஒன்று போல. மற்றபடி அவற்றின் வடிவம், அமைப்புகள், பிற சிறப்புகள் என்பன வெவ்வேறானவை. அதனால்தான் அவ்வளவு விலை வித்தியாசம். அந்த பிறவற்றின் பெயர், ‘ஃபார்ம்’ (Form), அதாவது அதன் அமைப்பு.
இருப்பவர்கள், சம்பாதித்துவிட்டவர்கள் ‘பார்ம்’ க்காக வாங்கலாம். இனிதான் சேமிக்கவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு தேவைகளை நிறைவேற்றித்தரும் குறைந்த விலை ‘பங்கஷன்’ னே போதும்.
தற்போதைய செலவுகளில் எவையெல்லாம் ‘பங்க் ஷனுக்காக’ எவையெல்லாம் ‘பார்ம்’க்காக என சிந்திக்க வேண்டும்” என்றேன். “கண்டிப்பாக ஆராய்ந்து பார்கிறேன் சார்” என்றார்.
- சோம வள்ளியப்பன்