

க
டந்த காலங்களில் வீடு வாங்குவது குறித்து பெரிதாக யோசிக்கத் தேவையில்லை. ஆனால் தற்போதைய ரியல் எஸ்டேட் சந்தை மந்தமாக இருக்கும் இந்த சமயத்தில் நிதி சார்ந்த திட்டங்கள் முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. வீடு வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தாலும் வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது என கருதுபவர்களும் உள்ளனர்.
வீடு வாங்குவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் இந்த வீடு நமக்கு தேவையா, இந்த முதலீட்டுக்கு இந்த வீட்டை வாங்கலாமா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
முதலீட்டுக்காக மட்டுமே வீட்டை வாங்குவதாக இருந்தால் பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு வாங்கு வது நல்லது. உதாரணத்துக்கு விலை என்ன, எவ்வளவு ஏற்றம் கிடைக்கலாம், வரி சேமிப்பு என்ன, வருமானம் மற்றும் இதர செலவுகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம். கடந்த காலங்களில் வீடுகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்தன. பல இடங்களில் இரட்டை இலக்க வளர்ச்சி இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது போல வருமானம் இல்லை. பங்குச்சந்தை உள்ளிட்ட இதர முதலீட்டு திட்டங்கள் அதிக வருமானத்தை கொடுத்திருக்கின்றன.
தவிர வீடு வாங்கினால் விலை குறையாது என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் பல இடங்களில் வாங்கிய விலையை விட விலை சரிந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் முதலீட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்கள் அதில் இருக்கும் செலவுகள் குறித்தும் தெரிந்து கொள்வது அவசியம். வீடு வாங்கும் போது முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் இருக்கும். இதனைத் தொடர்ந்து சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகள் செலுத்த வேண்டி இருக்கும். இது தவிர பராமரிப்பு கட்டணம் இருக்கிறது. வீடுகளுக்கு பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட செலவுகள் இருக்கின்றன. தவிர வீட்டை விற்கும் போது தரகு கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் என உங்களது லாபத்தை குறைக்கும்.
லாபத்தை குறைப்பது மட்டுமல்லாமல், எப்போதும் உங்களிடம் பணம் இருந்தாக வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் வீட்டில் வாடகைக்கு யாரும் இல்லை என்னும் பட்சத்தில், புதிதாக வாடகைக்கு வரும் வரை உங்களுடைய பணப்புழக்கம் பாதிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய தொகைகளை நீங்கள் செலுத்தியாக வேண்டும். தவிர வாடகை வருமானம் மிக மிகக் குறைவாக இருக்கும். உங்களது மாதாந்திர தவணை தொகையை செலுத்துவதற்கு கூட வாடகை போதுமானதாக இருக்காது.
நிதி சார்ந்த காரணங்களைத் தாண்டி இருக்கும் இதர காரணங்களை ஆராய வேண்டியது அவசியமாகிறது. வீடு வாங்கும் பட்சத்தில் தொடர்ந்து கடன் செலுத்த வேண்டி இருந்தாலும், இது மறைமுகமான சேமிப்புதான். இதன் மூலம் நிதி நிலைமை ஒழுங்காகிறது என்பது முதல் காரணம். இரண்டாவது இது நீண்ட கால சேமிப்பு என்பதால் இது போன்ற சொத்தினை யாரும் விற்க நினைக்க மாட்டார்கள். உணர்வு பூர்வமான பந்தமும் ஒரு காரணம். மூன்றாவதாக வாடகை இல்லை என்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு மனநிறைவினை தரும்.
ஆனால் உங்களுக்கு நிலையான வருமானமோ அல்லது வேலை குறித்த உத்தரவாதம் இல்லை என்றாலோ மேலே சொன்ன அனைத்து சாதகங்களும் அழுத்தங்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. அடுத்து, வேலை மாறுதலாகி வேறு நகரத்துக்கு செல்லும் பட்சத்தில் வெளியூரில் இருந்து சொத்தினை நிர்வாகம் செய்வது கடினம்.
தவிர அந்த வீட்டினை விற்க வேண்டும் என்று நினைத்தாலும் அது அவ்வளவு எளிதாக முடியாது. இந்த நடவடிக்கை முடிவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும். அதனால் உடனடியாக பணம் தேவைப்படுபவர்கள் வீட்டில் முதலீடு செய்வது ஆபத்தானது. வீடு வாங்கும் போது செலுத்தும் வட்டிக்கு வரிச்சலுகை உண்டு, தவிர அதே வீட்டில் நீங்கள் குடியிருப்பதால் வாடகை செலுத்த தேவையில்லை, இந்த சலுகைகள் இதர முதலீடுகளில் கிடைக்காது.
வீடு வாங்கும் போது உங்களது தேவைகள், முன்னுரிமைகள் என்ன என்பதை ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கலாம்.
-