

ஒரு திரைப்படத்தின் டிக்கெட் கள்ளச் சந்தையில் 5,000 ரூபாய். வேறு சில இடங்களில் 2,000 ரூபாய். சில திரையரங்குகளில் 500, 600. குறைந்தபட்சமாக விற்கப்படுவது கூட வழக்கமாக கட்டணங்களை விட அதிகம். தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்க முடியாது. ஒரு வாரம், பத்து நாள் போனால் குறைந்துவிடும். நூறு ரூபாய்க்கு கூட பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் பொறுத்தால், அதே திரைப்படத்தை தொலைக்காட்சி அல்லது ஓ.டி.டி.யில் தனியாக கட்டணம் ஏதும் கொடுக்காமலேயே பார்க்க முடியும்.
ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக கட்டணம் கொடுப்பவர்களுக்கு என்று கூடுதல் காட்சிகளோ அல்லது வேறு எதுவுமோ அந்த படத்தில் கிடைக்காது. அதே படம்தான். சொல்லப்போனால் ஆரம்ப நாட்களில் திரையரங்குகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கூடுதல் பணம் கொடுப்பவர்களால் படத்தை சரியாகபார்க்க முடியாமல் போகலாம். ஆனாலும், அவர்கள் அவ்வளவு செலவு செய்து படம் பார்க்கிறார்கள். இன்னும் சிலர் வெளியூர், வெளிமாநிலங்கள் போய்கூட படம் பார்க்கிறார்கள். பலவிதங்களில் கூடுதல் செலவு.
பணக்காரர்களுக்கு பரவாயில்லை. கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு? என்ற கேள்வி சரிதானென்றாலும் சொல்ல வருவது வேறு தகவல். இங்கே பணக்காரர்களால் மட்டுமல்ல. பணம் இல்லாதவர்களாலும் செய்ய முடியாதது ஒன்று இருக்கிறது. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலைதான், செய்யும் செலவுதான், ‘கூடுதல் பணம்’. அந்த செய்ய முடியாதது, ‘பொறுத்திருத்தல்’ மற்றும் ‘காத்திருத்தல்’. சிலருக்கு திரைப்படம் பார்ப்பதில்.. மற்ற சிலருக்கு வேறு சிலவற்றில்..
ஆண்டு தவறாமல், கோடைகாலத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி கட்டாயம் இடம் பெறும். அது ஊட்டி, கொடைக்கானல் போன்ற
மலைவாசஸ்தலங்களில் குவிந்த கூட்டம் பற்றியது. ஊருக்குள் போக முடியாமல் அல்லது சுற்றுலா முடிந்து ஊர் திரும்ப முடியாமல், சாலைகளில், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு வண்டிகளில் பல மணி நேரம் காத்திருப்பவர்களைக் காட்டுவார்கள். வீட்டில் இருப்பதை விட்டுவிட்டு, காரிலேயே சில பல மணிநேரம் வெட்டியாய், நொந்து கொண்டும் எவரையாவது திட்டிக்கொண்டும் காத்திருப்பார்கள்.
‘சீசன்’ படுத்தும்பாடு. சில விவரமானவர்கள் அதே இடங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா போகிறார்கள். ஆனால் நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல், எதற்கும் காத்திருக்காமல், கூடுதல் கட்டணங்களுக்கு பதில் வழக்கத்தைக்காட்டிலும் குறைந்த கட்டணங்களுக்கு ‘அனுபவித்து’ விட்டு வருகிறார்கள். அவர்கள் போவது பலரும் முண்டியடிக்கும் ‘சீசன்’களில் அல்ல. சீசன் முடிந்த பிறகு! அப்போது, அறை வாடகை மட்டுமல்ல.
அந்த ஊர்களில் பலவும் மலிவாக இருக்கும். குளிர் மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதுமட்டுமே அவர்கள் கொடுக்கும் விலை. தொடர்புடைய மற்றொரு நேரடி அனுபவம் இது. அலுவலகங்களில் ‘டிரெயினிங்’ என்றால் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை என்பது வழக்கம்.
‘‘இந்த மாதம் அலுவலர்களை பயிற்சிக்கு அனுப்ப இயலாது. வேலை அதிகம் என்றார்” தலைமை அதிகாரி. யோசித்துவிட்டு கேட்டேன், ‘‘அலுவலக வேலை பாதிக்கபடாம ‘டிரெயினிங்கை காலை 6 மணி முதல் 9 வரை நடத்திக்கொள்ளவா?” சிரித்தார் அவர். ஆனாலும் அந்த பயிற்சி வகுப்பு சிறப்பாகவே நடந்து முடிந்தது. போனசாக, ஒரு புதிய அனுபவமும் பெற்றேன். வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல வழக்கமாக 45 நிமிடங்கள் ஆகும்.
ஆனால், அன்று, வழக்கமாக செல்லும் அதே வழியில் 15 நிமிடத்தில் அலுவலகம் போய்விட்டேன். வியப்பும் மகிழ்ச்சியும் எனக்கு மட்டுமல்ல. டிரெயினிங்-ல் கலந்துகொள்ள வந்தவர்கள் அனைவருக்குமே. எல்லோராலும் வழக்கத்தைக் காட்டிலும் விரைவாக வரமுடிந்தது. காரணம் காலை 8:30 மணிக்கு இருக்கும் போக்குவரத்து நெரிசல், காலை ஐந்து மணிக்கு இல்லை. சாலைகள் காலியாக இருந்தன.
பங்குச்சந்தை நிபுணரும் உலகப் பணக்காரர்களில் முக்கியமானவருமான 92 வயது வாரன் பஃபெட் சொல்வார், ‘பலரும் பயந்து பங்குகளை விற்கையில், நாம் வாங்க வேண்டும். பெருங்கூட்டம் பேராசையில் வாங்கும்போது நாம் விற்றுவிடவேண்டும்’ என்று. ‘காண்ட்ரா’ அணுகுமுறை.
தேவைகளை செய்து கொள்ளாமல்தான் சேமிக்க முடியும் என்பதில்லை. இப்படிப்பட்ட சில மாறுபட்ட நடவடிக்கைகளால், அதே தேவைகளை குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். ‘எல்லோர் தேவைகளையும் (Need) நிறைவேற்ற உலகில் உள்ளவற்றால் முடியும். ஆனால் எல்லோர் பேராசைகளையும் (Greed) அல்ல’ என்பார் மகாத்மா காந்தி.
முதல் நாள், முதல் காட்சி என்பது ஒருவருடைய பொழுதுபோக்கு தேவையை நிறைவு செய்வது அல்ல. அதே படத்தை அந்த நபர் பிற்பாடு பார்த்தாலும் பொழுதுபோக்குத் தேவை நிறைவேறும். ‘என்ன விலை கொடுத்தேனும்’ என்று ஒருவர் முதல்நாள் படம் பார்ப்பதன் மூலம் அவர் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது, அவரது வேறு தேவைகளை. திரைப்படத்தை மட்டுமல்ல.
எதையும் உடனே அடையும் ஆவலைத் தள்ளிவைப்பது, சீசன் பழங்கள், கூட்டமில்லா நேரங்களில் பிரயாணம், இரவுக்காட்சி, மற்றவர் வாங்க தயங்குற மாதங்களில் பர்ச்சேஸ், சற்று முன்கூட்டியே கிளம்பி, நெரிசலற்ற நேரங்களில் பயணம் என, சின்ன மாறுதல்கள் மூலம் பெரிய நன்மைகள் பெறலாம். புரிந்துகொள்ளுதல், திட்டமிடல், மாற்றிச் செய்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய நான்கும் உதவுமே சிக்கனத்திற்கும் சேமிப்பிற்கும்.
- writersomavalliappan@gmail.com