

எல்லோருக்கும் அல்ல. ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது போல சில விஷயங்கள் உலகில் உண்டு. பாவம், அப்படி ஒன்று பாண்டியன் என்பவருக்கு வந்துவிட்டது. அவருக்கு மாத சம்பளம், இருபது, இருபத்தைந்தாயிரம் இருந்தால் அதிகம். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு ஏன் இந்த நிலை என வருத்தப்பட்டேன். ஒராண்டுக்குப் பிறகு அவரை சந்தித்து உரையாடினேன்.
“சரியாகி விட்டதா?”
“இல்லை. அப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது”
“வீட்டிலேயே செய்ய முடியும் என்கிறார்களே?:
“அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி சார். பணக்காரங்கதான் செய்துகொள்ள முடியும். நான் வாரம் மூனு முறை மருத்துவமனைக்கு போய்தான் செய்துகொள்கிறேன்”
“ரொம்ப செலவாகுமே?”
“ஆமாம். மாசம் சுமார் 40 ஆயிரம் ஆகிறது”.
“எப்படி சமாளிக்கிறீர்கள்?”
“மெடிக்கல் இன்சூரன்ஸ்ல இருந்து மாசம் 29 ஆயிரம் (ஆண்டுக்கு ரூ.3.48 லட்சம்) கொடுத்துவிடுகிறார்கள். மீதம்தான் எனக்கு செலவு”. அவர் முகத்தில் சின்ன மலர்ச்சி. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“அப்படியா? பரவாயில்லையே! எவ்வளவுக்கு பாலிசி எடுத்திருக்கிறீர்கள்?”
“எட்டு லட்சத்துக்கு பாலிசி. வருஷத்துக்கு ரூ.29 ஆயிரம் பிரீமியம் கட்டுகிறேன்”
“இது எப்போது எடுத்த பாலிசி?”
” 24 ஆண்டுகளாகிறது. ஆரம்பித்தபோது பத்தாயிரம் ரூபாய்க்குத்தான் எடுத்தேன். ஆண்டுக்கு 200 ரூபாய் பிரீமியம் கட்டினேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தொகையை அதிகரித்துக்கொண்டே வந்தேன்”
“நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்”
“ஆமாம் சார். பாலிசி எடுத்ததில் இருந்து 20 வருஷம் வரை எனக்குஎதுக்குமே இன்சூரன்ஸ் தேவைப்படவில்லை. ஆனாலும் விடாமல் பிரீமியம் கட்டிக்கொண்டே வந்தேன். நாலு வருடம் முன்பு சிறுநீரகப் பிரச்சினை வந்தது. சிகிச்சைக்கு பணம் கிடைத்தது. பிறகு தொடர்ந்து டயாலிசிஸ் செய்தாக வேண்டும் என்றார்கள். அதற்கும் மாதாமாதம் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கிறது.
இந்த பாலிசி மட்டும் இல்லாவிட்டால் இவ்வளவு காலத்துக்கு டயாலிசிஸ் செய்துகொண்டிருப்பேனா என்று சொல்ல முடியாது. எப்போதோ ஆரம்பித்த மெடிக்கல் இன்சூரன்ஸ்தான் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது சார்” அவர் கண்களில் கண்ணீர்.
“விடுங்க. அதான் பாலிசி இருக்கிறதே. விடாமல் பிரீமியம் கட்டுங்கள். அது காப்பாற்றும்”
சற்று இடைவெளி கொடுத்துக் கேட்டேன். “மெடிக்கல் பாலிசி எடுத்திருப்பவர்கள் அனைவருக்குமே இந்த ‘பெனிபிட்’ உண்டுதானே?”
“ஆமாம். ஆனால், பாலிசி எடுத்து நான்கு ஆண்டுகள், ‘வெயிட்டிங் பீரியட்’ முடிந்திருக்க வேண்டும். தவிர, பாலிசி எடுக்கும் நேரம் பெனிபிட் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட வியாதி அல்லது இருந்திருக்கக்கூடாது”
“அப்படி ஏதும் இருந்தால்?”
“பாலிசி எடுக்கும் நேரம் ஏற்கெனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு தரமாட்டார்கள்”
பெரும் செலவு வைக்கும் டயாலிசிஸ் செய்துகொண்டே இருந்தால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்ட பாண்டியனையும், அவர் மூலம் அவர் குடும்பத்தையும் காப்பாற்றுவது, அவர் வேலைக்குப் போனதுமே எடுத்த மெடிக்கல் இன்சூரன்ஸ்தான்.
அப்போது மிகக் குறைந்த அளவில்தான் அவருடைய வருமானம் இருந்திருக்கும். ஆனாலும், மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார். தவிர, விடாமல் தொடர்ந்து பிரீமியம் கட்டி, பாலிசியை ‘போர்ஸ்’ சில் வைத்திருந்திருக்கிறார். அது இப்போது எவ்வளவு பெரிய உதவியாக இருக்கிறது.
டயாலிசிஸ் மட்டுமில்லை. இன்னும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களால் செலவழிக்க முடியாத புற்றுநோய், மாரடைப்பு போன்ற இன்னும் சில பணக்கார வியாதிகள் இருக்கின்றன. வயது வேறுபாடின்றி, பழக்கவழக்கங்கள் நன்றாக இருப்பவர்களுக்கும் கூட வருகின்றன. 'எல்லோருக்கும் வராது. ஆனால், எவருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்’ என்ற ரிஸ்க் இல்லாதவர்கள் யார்?
பிற்கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ, சேமித்து, அதை சரியாக முதலீடு செய்துபணி ஓய்வுக்கு முன், பெருக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், அது மட்டுமே போதாது. காரணம், அது வருமானத்தை உறுதி செய்யும். வீட்டு செலவுகளை சமாளிக்க உதவும். அவ்வளவுதான். ஆனால், எதிர்பாராமல் வந்தாலும் வரலாம் எனப்படும் பாண்டியனுக்கு வந்திருப்பது போன்ற செலவுகளை சமாளிக்க அது போதாது.
வீட்டுக்கு, தோட்டங்களுக்கு வேலி போன்றது இன்சூரன்ஸ். வேலியால் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏதுமில்லை. அது ஒரு செலவுதான். ஆனால் அது, வெளித் தொந்தரவுகளில் இருந்து குடும்பத்தாரைக் காப்பாற்றும்.
வேலைக்கு போகிறவர்கள் மட்டுமல்ல. ஏற்கெனவே மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடுகள் இல்லாத குடும்பங்கள் அனைத்துக்குமே மெடிக்கல் இன்சூரன்ஸ் தேவை. மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம் செலவல்ல. பாதுகாக்கும் வேலி.
- writersomavalliappan@gmail.com